பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் மெட்ரோ ரயில் பணிகளுக்காக சாலையோர கடைகள் அதிரடி அகற்றம்: வியாபாரிகள் வாக்குவாதத்தால் பரபரப்பு


பூந்தமல்லி: பூந்தமல்லியில் இருந்து கிண்டி வரை 2ம் கட்ட மெட்ரோ ரயில் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், பூந்தமல்லி பேருந்து நிலைய முன்பகுதியிலும் உட்பகுதியிலும் ஏராளமான சிறு வியாபாரிகள் சாலையோர கடைகள் வைத்து பழம், பூ வியாபாரம் செய்து வந்தனர். தற்போது மெட்ரோ ரயில் பணி நடைபெற்று வருவதால் சாலையோர கடைகள் இடையூறாக இருந்ததால் அகற்ற அதிகாரிகள் முடிவு செய்திருந்தனர். ஏற்கனவே சாலையோர கடைகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவுறுத்திய நிலையில் பலர் கடைகளை அகற்றாமல் வியாபாரம் செய்து வந்தனர்.

இந்நிலையில், மெட்ரோ ரயில் பணிக்கு இடையூறாக இருப்பதாக கூறி பூந்தமல்லி நகராட்சி அதிகாரிகள் 100க்கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்புடன் பூந்தமல்லி பேருந்து நிலையத்தின் முன்பகுதி மற்றும் உட்பகுதியில் வைத்திருந்த சாலையோர கடைகளை அகற்றும் பணியில் நேற்று ஈடுபட்டனர். இதனால் வியாபாரிகளுக்கும் போலீசாருக்கும் நகராட்சி அதிகாரிகளுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இருப்பினும் மெட்ரோ ரயில் கட்டுமான பணிக்கு இடையூறாக இருந்த கடைகளை அகற்றுவதில் நகராட்சி நிர்வாகம் தீவிரம் காட்டியது.

பேருந்து நிலையத்தின் முன் பகுதியிலும் உட்பகுதியிலும் இருந்த 20க்கும் மேற்பட்ட கடைகள் முற்றிலுமாக அகற்றப்பட்டன. மாற்று இடம் வழங்காமல் கடைகளை அப்புறப்படுத்துவதால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக சாலையோர வியாபாரிகள் புலம்பினர். குறிப்பாக, சாலையோர வியாபாரிகளுக்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் அடையாள அட்டை கொடுக்கப்பட்டும் மாற்று இடம் வழங்கவில்லை என கூறப்படுகிறது. இந்த சம்பவம் பூந்தமல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related posts

வனத்திற்குள் இழுத்து சென்று பெண், சிறுவனை கொன்ற சிறுத்தை: ராஜஸ்தான் கிராமத்தில் பீதி

பணி அழுத்தத்தால் பெண் ஆடிட்டர் மரணம்; வாரத்தில் 40 மணி நேரத்துக்கு மேல் வேலை கூடாது: காங்கிரஸ் எம்பி வலியுறுத்தல்

மாஜி எம்பி, மாஜி எம்எல்ஏ உட்பட காங்கிரசில் சேர்ந்த மாஜி முதல்வரின் உறவினர்கள்: மகாராஷ்டிரா பாஜகவுக்கு பின்னடைவு