மெட்ரோவில் பயணிக்காதவர்கள் ரயில் நிலையங்களில் வாகனங்கள் நிறுத்துவதற்கான கட்டண உயர்வு இன்று அமல்: 6 மணி நேரத்திற்கு ₹20

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் இருசக்கர மற்றும் 4 சக்கர வாகன பார்க்கிங் உள்ளன. இங்கு வாகனங்களை எத்தனை மணி நேரம் நிறுத்தி வைக்கிறோம் என்பதற்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. மெட்ரோ ரயில் நிலையங்களில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்யாதவர்களும் கூட வாகனங்களை நிறுத்தி செல்வது வழக்கமாக உள்ளது. குறிப்பாக பரங்கிமலை, திரிசூலம் பகுதிகளில் இருந்து மின்சார ரயில்களில் செல்பவர்கள் மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்தங்களை தங்களின் வசதிக்காக பயன்படுத்திக் கொள்கின்றனர். இதில் பார்க்கிங் கட்டணமாக 6 மணி நேரம் வரை ₹10, 12 மணி நேரம் வரை ₹15 வசூலிக்கப்பட்டது. இந்நிலையில் ரயிலில் பயணம் செய்யாமல் வாகனம் நிறுத்தும் இடங்களை பயன்படுத்துவதற்கு கட்டணம் இன்று முதல் உயர்த்தப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதன்படி இன்று முதல் 6 மணி நேரம் வரை ₹20, 12 மணி நேரம் வரை ₹30, 12 மணி நேரத்திற்கு மேல் ₹40ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் மாதாந்திர கட்டணமும் 6 மணி நேரத்துக்கு ₹500லிருந்து ₹750 ஆகவும், 12 மணி நேரத்துக்கு ₹1000லிருந்து ₹1500 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது. இதுகுறித்து மெட்ரோ அதிகாரி கூறுகையில், ‘‘பீக்அவர்ஸின் போது நிலையங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு இடம் கிடைப்பதில்லை என தொடர் வாடிக்கையாளர்கள் புகார் அளித்தனர்.

அதை தொடர்ந்து பயணிகள் தங்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு இடம் கிடைக்காததால் மெட்ரோ சேவைகளை பயன்படுத்துவதை நிறுத்தியுள்ளனர். மெட்ரோ ரயில் பயணிகள் அல்லாதவர்கள் செலுத்தும் கட்டணம் அதிகம். வழக்கமான பயணிகள் அதை விட 50% குறைவாக செலுத்துவார்கள். மேலும் வழக்கமான பயணிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் இந்த கட்டண உயர்வு வெளியிடப்பட்டுள்ளது. அதேபோல் மது அருந்துவதற்காக மெட்ரோ ரயில் நிலையங்களில் பார்க்கிங் செய்துவிட்டு மெட்ரோ ஊழியர்களுடன் சண்டையில் ஈடுபடுகின்றனர். கட்டண உயர்வால் இதுபோன்ற பிரச்னைகளுக்கு இடமிருக்காது’’ என்றார்.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்