கோயம்பேடு – ஆவடி, பூந்தமல்லி – பரந்தூர் வரை மெட்ரோ ரயில் வழித்தட நீட்டிப்பு தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு: திட்ட அறிக்கை விரைவில் தயார்

சென்னை: கோயம்பேடு – ஆவடி மற்றும் பூந்தமல்லி – பரந்தூர் வரை மெட்ரோ ரயில் வழித்தட நீட்டிப்பு தொடர்பாக அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர். இதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் விரைவில் நிறைவுபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும், நீண்ட தொலைவை குறைந்த நேரத்தில் கடப்பதற்காகவும் மெட்ரோ ரயில் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, முதல்கட்ட மெட்ரோ ரயில் சேவை, கடந்த 2015ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில், சென்னை விமான நிலையம் – விம்கோ நகர், சென்ட்ரல் – பரங்கிமலை ஆகிய 2 வழித்தடங்களில் சுமார் 55 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

ஆரம்பம் முதலாகவே சென்னைவாசிகள் மத்தியில் மெட்ரோ ரயில் சேவைக்கு சிறப்பான வரவேற்பு இருந்து வருகிறது. இதை தொடர்ந்து, தற்போது ₹63,246 கோடி மதிப்பில் 118.9 கிலோ மீட்டர் தூரத்துக்கு 3 வழித்தடங்களில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணி நடைபெறுகிறது. இதில், கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி புறவழிச்சாலை வரை 26.1 கிலோ மீட்டர் தொலைவுக்கும், மாதவரம் – சிறுசேரி சிப்காட் வரை 45.8 கி.மீட்டருக்கும், மாதவரம் முதல் – சோழிங்கநல்லூர் வரை 47 கிலோ மீட்டர் தூரத்துக்கும் என 118.9 கி.மீ தூரத்துக்கு புதிய வழித்தடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இதில் உயர்மட்ட பாதை, சுரங்கப் பாதையில் ரயில்கள் இயக்கப்பட உள்ளன. உயர்மட்ட பாதைக்காக தூண்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 2ம் கட்ட திட்டத்தில் 43 கிலோ மீட்டர் தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது. இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், பரந்தூரில் சென்னையின் 2வது விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதனால், பயணிகளின் வசதிக்காக, கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி வரையிலான வழித்தடத்தை பரந்தூர் விமான நிலையம் வரை 43 கி.மீ. தூரத்திற்கு நீட்டிக்க மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்தது.

இதேபோல், மாதவரத்தில் இருந்து கோயம்பேடு வழியாக சோழிங்கநல்லூர் வரையிலான வழித்தடத்தை, கோயம்பேட்டில் இருந்து ஆவடி வரை 16 கி.மீ. தூரம் நீட்டிக்கவும் முடிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக சாத்தியகூறு அறிக்கை தயாரிக்கப்பட்டு, தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த 2 வழித்தடங்களை நீட்டிப்பது தொடர்பாக தமிழக அரசு ஒப்புதல் அளித்த நிலையில், விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கடந்த பிப்ரவரியில் தமிழக அரசு சார்பில் அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில், விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கு முன்பாக, இந்த 2 வழித்தடங்களில், மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த ஆய்வில், மெட்ரோ ரயில் நிலையங்கள் வடிவமைப்பு, சுரங்கப்பாதை, ரயில் நிலைய அமையும் இடங்கள் உள்ளிட்ட விவரங்கள் குறித்து ஆய்வு செய்யப்படும். பின்னர், விரிவான திட்ட அறிக்கை தயாரித்து, இறுதி செய்யப்படும். இது தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்படும். அதன்பிறகு இந்த 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவையை நீட்டிக்கும் பணிகள் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திட்ட மதிப்பு ₹10,712 கோடி
பூந்தமல்லியில் இருந்து திருமழிசை மற்றும் பெரும்புதூர் வழியாக பரந்தூர் வரையிலான மெட்ரோ ரயில் வழித்தடத்தில் தோராயமாக 19 மெட்ரோ நிலையங்கள் அமைக்கப்பட இருக்கிறது. இதற்கு மதிப்பிடப்பட்ட செலவு ₹10,712 கோடி ஆகும். பரந்தூரில் முன்மொழியப்பட்ட புதிய விமான நிலையம், திருமழிசையில் முன்மொழியப்பட்ட பேருந்து நிலையம் மற்றும் வழித்தடத்தின் எதிர்கால வளர்ச்சி போன்ற சமீபத்திய முன்னேற்றங்களைக் கருத்தில் கொண்டு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இந்த வழித்தட நீட்டிப்பதற்கான சாத்தியக்கூறு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு பரிந்துரைக்கிறது. விரிவான திட்ட அறிக்கை, விரிவான சீரமைப்பு ஆய்வுக்குப் பிறகு, மொத்த பெருந்திரள் துரித போக்குவரத்திற்கான நிலையங்கள் மற்றும் நிலத் தேவைகள் பற்றிய விவரங்கள் இறுதி செய்யப்படும்

Related posts

விம்பிள்டன் டென்னிஸ் 2வது சுற்றில் மாயா

யூரோ கோப்பை கால்பந்து; காலிறுதியில் துருக்கி

உலக சாம்பியன்களுக்கு உற்சாக வரவேற்பு: மும்பையில் இன்று வெற்றி ஊர்வலம்