பாதரசம் (Mercury)

அறிவியல் அறிவோம்!

பாதரசம் என்பது Hg என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதித் தனிமம். இதனுடைய அணு எண் 80. பாதரசம் ஒரு கனமான உலோகமாகும். , வெள்ளியைப் போன்ற நிறம் கொண்ட டி- தொகுதியைச் சேர்ந்த தனிமமும் ஆகும். சாதாரண வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் திரவ நிலையில் உள்ள ஒரே உலோகம் பாதரசம் என்பது இதன் சிறப்பாகும். இதே வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் திரவ நிலையில் உள்ள அலோகம் புரோமின் ஆகும். அறை வெப்பநிலையைக் காட்டிலும் சற்று உயர்ந்த வெப்பநிலையில் சீசியம், காலியம், ருபீடியம் உள்ளிட்ட உலோகங்கள் உருகத் தொடங்கி விடும்.பாதரசம் உலகம் முழுவதும் சின்னபார் என்ற சல்பைடு தாதுவின் வைப்பிலிருந்துதான் பெரும்பாலும் தயாரிக்கப்படுகிறது. இயற்கையாகக் கிடைக்கும் சின்னபார் தாதுவை அல்லது செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட பாதரச சல்பைடை அரைத்து வெர்மிலியான் என்ற சிவப்பு நிறமி தயாரிக்கப்படுகிறது.

வெப்பமானிகள், அழுத்தமானிகள், காற்றழுத்தமானிகள், நாடியழுத்தமானிகள், மிதவை அடைப்பான்கள், பாதரச மின்விசைக் குமிழ்கள், பாதரச சுற்றுகள், ஒளிரும் விளக்குகள் போன்றவற்றில் பாதரசம் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும் பாதரசத்தின் நச்சுத்தன்மை பற்றிய கவலைகளால் பெரும்பாலும் மருத்துவ சூழல்களில் பயன்படுத்தப்படும் பாதரச வெப்பமானிகள் மற்றும் நாடித்துடிப்புமானிகளில் ஆல்கஹால்கள் அல்லது திரவக் கலப்புலோகமான கேலின்சுடன் நிறப்பப்பட்ட கண்ணாடி வெப்பமானிகள் அல்லது அகச்சிவப்பு சார்ந்த மின்னணு கருவிகள் படிப்படியாக பாதரசத்துக்கு மாற்றாக பயன்படத் தொடங்கியுள்ளன.

இதேபோல் இயந்திர அழுத்த அளவிகள் மற்றும் மின்னணு திரிபு அளவி உணரிகள் உள்ளிட்ட கருவிகள் பாதரச நாடியழுத்தமானிகளை இடப்பெயர்ச்சி செய்து விட்டன. அறிவியல் ஆய்வு பயன்பாடுகளிலும் பல் மருத்துவத்திலும் மட்டும் பாதரசம் இன்னமும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது ஒளிரும் விளக்குகளில் பயன்படுத்தப்படுகிறது. ஓர் ஒளிரும் விளக்கில் உள்ள பாதரச ஆவி வழியாக மின்சாரம் பாயும்போது குறுகிய-அலை நீளமுள்ள புறஊதா ஒளி உருவாகிறது. பாதரச ஆவி விளக்கில் பாதரசம் பயன்படுகிறது.பல் மருத்துவத்தில் பயன்படுகிறது. மெர்க்குரி அயோடைடு, தோல் நோய் மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. மெர்க்குரி ஆக்சைடு கண் அழற்சிக்கு மருந்தாகப் பயன்படுகின்றது.

 

Related posts

விசிக கூட்டணியின்றி திமுக வெற்றி பெற முடியாது என்ற ஆதவ் அர்ஜுனா கருத்துக்கு ரவிக்குமார் கண்டனம்..!!

மண்டபம் அருகே 200 கிலோ கடல் ஆமை கரை ஒதுங்கியது

நியூயார்க்கில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பிரதமர் மோடி சந்திப்பு: உக்ரைன் – ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பாக ஆலோசனை