மனவெளிப் பயணம்

நன்றி குங்குமம் டாக்டர்

மனநல ஆலோசகர் காயத்ரி மஹதி

குடும்ப வன்முறையில் பாதிக்கபடும் ஆண்கள்! ஒரு மாற்றுப் பார்வை!

யூ டியூபில் இயக்குநர் முத்துக்குமார் இயக்கிய ‘வாழ்மீன்’ என்ற குறும்படத்தை சமீபத்தில் பார்த்தேன். அந்தப் படம் கூறும் விஷயம் என்னவென்றால், குடும்ப வாழ்க்கையில் பெண்கள், ஆண்கள் மீது நடத்தும் வன்முறையைப் பற்றி பேசியிருக்கிறார்கள்.

உண்மையில் ஆணாதிக்க சமூகம் என்று பேசும் இடத்தில், நம் சமூகத்திலுள்ள ஆண்கள் நிம்மதியாக வாழ்கிறார்களா? என்று கேள்வி கேட்டால், சில நேரங்களில் ஆண்களின் பிரச்னைகளைப் பற்றி பேசவும், கேட்கவும் யாருமே தயாராக இல்லை என்றே தோன்றுகிறது. ஏனென்றால், பெண்களுக்கு நடக்கும் பிரச்னை என்றால், அது சமூகப் பிரச்னையாகவும, ஆண்களுக்கு நடக்கும் பிரச்னை என்றால், அது தனிநபர் பிரச்னையாகவும் நம் சமூகத்தில் பார்க்கப்படுகிறது.

குடும்பத்துக்குள் ஆண்கள் அவரவர் மனைவி, குடும்ப உறவுகளிடம் அவமானப்படவில்லையா என்று கேட்டுப் பாருங்கள். பக்கம் பக்கமாக பேசுவார்கள். ஆனால், ஆண்களிடம் அப்படி ஒரு கோணத்தில் யாரும் பேச மாட்டோம், பேசவும் விரும்ப மாட்டோம். ஆண் என்றாலே, கம்பீரமானவன், எதையும் தாங்கும் வல்லமையுடையவன், எதற்கும் துணிந்தவன் இந்த வார்த்தைகளுக்குள் அழுத்தி, திணித்து உள்ளே நாம்தான் வைத்திருக்கிறோம்.

உதாரணத்துக்கு, ஒரு அம்மாவும், அப்பாவும் என்னிடம் பேச வேண்டும் என்று வந்தார்கள். வந்ததில் இருந்து அழுதுகொண்டே இருந்தார்கள். என்ன ஆச்சு, என்று கேட்டாலும் இருவரும் அழ மட்டுமே செய்தார்கள். அரைமணி நேரம் கழித்து, அந்த அம்மா பேச ஆரம்பித்தார். அவர்களுக்கு ஒரே ஒரு மகள் என்று கூறினார். மகளுக்குத் திருமணம் செய்து வைத்துள்ளார்கள். ஆனால், திருமண வாழ்க்கையில் சில மனஸ்தாபங்கள் ஏற்பட்டதால், விவாகரத்து வாங்கி, பெற்றவர்கள் வீட்டுக்கு வந்துவிட்டார்.

அதன் பின்தான் பிரச்னை ஆரம்பமானது. அம்மா பூ வாங்கி வைத்தாலும் கிண்டல் அடிப்பது, அம்மா தலைக்கு குளித்தாலும் கிண்டல் செய்வது என்று கொஞ்சம் கொஞ்சமாகப் பெற்றவர்களின் அந்நியோன்யமான வாழ்க்கையைப் பார்த்து, அதிகக் கோபமாகி, தன்னுடைய அப்பாவை செருப்பால் அடித்து இருக்கிறார் மகள். நான் வாழாமல் இருக்கும்போது, நீங்கள் மட்டும் எப்படி சேர்ந்து இருக்கலாம் என்று அடித்துள்ளார்.

இதேபோல், ஒரு கணவர் தனக்கு விவாகரத்து வேண்டுமென்றும், ஆனால் அதைப் பற்றி குடும்பத்தில் பேச தைரியமில்லை. அதற்கு கவுன்சிலிங் வேண்டும் என்றும் வந்தார். அவரது மனைவி தனக்கு அதிகமான நகைகள் வாங்கித்தர வேண்டுமென்று வற்புறுத்தியிருக்கிறார். அதற்காக சம்பாதிக்கவில்லை என்றால், குழந்தைகள் முன் அவமானப்படுத்துவது, அடிப்பது என்று இருந்திருக்கிறார்.

மற்றொரு தம்பதியரில், மனைவி அதிகமாக சம்பாதிப்பதில், கணவரை வீட்டோடு மாப்பிள்ளையாக அழைத்து வந்துவிட்டார்கள். அதனால் வீட்டில் மனைவிக்கு சமைத்துக் கொடுப்பது, மனைவியை ஆப்சில் விடுவது என்று, மற்ற வீட்டு வேலைகள் அனைத்தும் செய்வார். மனைவி சம்பாதிக்கும் பணத்தில் கணக்கு வழக்கு சரியாக இருக்க வேண்டுமென்ற காரணத்தினால், அவர் விருப்பப்பட்டு ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டுமென்றாலும்கூட, வீட்டிலுள்ள கணக்கு வழக்கு நோட்டில் எழுதிவைத்து விடுவார். அவரது பெயரில் ஒரு அக்கவுன்ட் கிடையாது. அவரது செலவுக்கு தினமும் 10 ரூபாய் என்றும், அவர் எங்கு செல்ல வேண்டுமென்றாலும் சைக்கிளில்தான் செல்ல வேண்டும் என்பது அவரது வீட்டில்உள்வர்களின் உத்தரவு.

இது போல் பல கதைகள், குடும்ப வாழ்க்கையில் அவதிப்படும் கணவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே இருக்கிறது என்பதை நமக்கு வெளிச்சம் போட்டு காண்பிக்கிறது. இதற்காக பலரும் சொல்வது என்னவென்றால், கர்மா இஸ் பூமரங் என்ற வரியைத்தான். பல வருடங்களாக ஆண்களால் பெண்கள் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தோம். அதனால் தற்போது ஆண்கள் கஷ்டப்படட்டும் என்று சொல்வதை கேட்கும்போது, பகல், இரவு இல்லாமல் ஒரு நாள் முடிவடையாது. அது போல்தான், ஆண், பெண் இருவரும் நிம்மதியாக சேர்ந்து வாழ வேண்டும் என்பதே இயல்பானது.

உண்மையில் ஆணின் மனநலன் சார்ந்து யாரும் பேசாமல் இருக்கும் அளவுக்கு எப்படி ஒரு வெற்றிடம் உருவானது என்பதை நாம் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். சுதந்திர இந்தியாவுக்குப் பிறகு பெண்களின் சொத்துரிமை, கல்வி கற்கும் உரிமை, திருமண உரிமை, பெண்களின் உடல் மற்றும் மனநலன் சார்ந்து தொடர்ந்து அரசும், தன்னார்வத் தொண்டர்களும், சமூகப் போராளிகளும் தொடர்ந்து பேசிக்கொண்டே வந்தார்கள். அதன் எதிரொலியாக, பெண்கள் மீதான அக்கறை, அவர்களின் வளர்ச்சி, முன்னேற்றம் என்று கடந்த 75 வருடத்துக்கும் மேலாகப் பேசி, பலதரப்பட்ட விதங்களில் பெண்களை முன்னேற வைத்துக் கொண்டு இருக்கிறோம்.

இதனால், பல தலைமுறைகளாக பெண்களின் வளர்ச்சி, உடல் ஆரோக்கியத்திலும், சிந்திக்கும் திறனிலும், பொருளாதாரத் தேவைகளிலும், தனக்கானத் துணையைத் தேர்ந்தெடுப்பதிலும் பல்வேறு விதங்களில் அவர்களை மெருகேற்றி வருகிறார்கள். அதனால் அவர்களின் சிந்தனையும், வளர்ச்சியும் ஜெட் வேகத்தில் இருக்கிறது. இது மிகவும் பாராட்டப்படக்கூடிய
விஷயம்தான், மறுக்கவில்லை.

ஆனால், அதே 75 வருடமாக ஆண் என்கிற மற்றொரு பாலினத்தைப் பற்றி நாம் பேசவும், கவலைப்படவுமில்லை. பல தலைமுறைகளாக ஆண்களின் தேவையைப் பற்றியும், ஆண்களின் அக மற்றும் புற உலகில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பற்றியும் பேச மறந்து விட்டோம். பல தலைமுறைகளுக்கு முன்னால் உள்ள பாட்டியின் மனநிலையும், தற்போதுள்ள பெண்ணின் மனநிலையும் அடுத்தக்கட்ட வளர்ச்சியைப் பற்றி சிந்திக்க செய்வதைப் போல் பழக்கி விட்டோம். ஆனால் பல தலைமுறைகளுக்கு முன்னால் உள்ள தாத்தாவும், தற்போதுள்ள ஆணின் மனநிலையும் பெரியளவில், சமூக மாற்றத்தை பற்றி பெரிதாக யோசிக்கவில்லை.

அதுவும் குடும்ப அமைப்பிலுள்ள பெண்களின் மனநிலை பற்றி சொல்லிக் கொடுக்க வீட்டிலுள்ள அப்பாவுக்கும், தாத்தாவுக்கும் தெரியவில்லை. அதன் தாக்கம்தான், பெண்களிடம் ஆண்கள் குடும்ப உறவில் அவமானப்படுவதும், உடலளவில் அடி வாங்குவதும், வெளியே சொன்னால் அவமானம் என்று ஒடுங்கிப் போவதுமாக இருக்கிறார்கள்.இம்மாதிரியான சம்பவங்கள் எல்லாம், குடும்பங்களில் மிக இயல்பாக செய்ய வேண்டிய விஷயங்களைச் செய்யாமல் தொடர்ந்து இருக்கும் போது, அங்கு ஆணும் பாதிப்படைகிறான்.

தேசிய ஆரோக்கிய கணக்கெடுப்பு (National Family Health Survey) கூறியுள்ள தகவல் படி, 15 வயதிலிருந்து 54 வயதுள்ள ஆண்கள் வரை குடும்பங்களில் உடலளவிலான தாக்குதல்களால் பாதிக்கப்படுகின்றனர் என்கிறார்கள். அன்யோன்மான தம்பதியரிடையான வன்முறை (Intimate Partner Violence) தகவல் படி, தற்போது ஆண்களுக்கான வன்முறை தாக்குதல்கள் அதிகமாகிக் கொண்டிருக்கிறது என்கிறார்கள். அதற்கான சாட்சியாக சில வீடியோக்களை குடும்ப கோர்ட்களில் ஆதாரமாக வைக்கிறார்கள். சிலவருடங்களுக்கு முன், ஒரு பெண் தன்னோட கணவரை கிரிக்கெட் மட்டையால் அடிப்பதை வீடியோவாக சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக இருந்தது.

ஆண்கள் இம்மாதிரியான குடும்பத்தில் ஏற்படும் வன்முறைகளை வெளியே கூறுவதற்கு தயக்கத்துடன் பேசாமல் இருக்கிறார்கள். அதையும் மீறி, ஒரு ஆண் பேசினால் பெற்றோர்களின் முன் உள்ள கெளரவம், வெளியே சொன்னால் அவமானம், சட்ட ரீதியாக போவதற்கு உள்ள தயக்கம் என்று கலாச்சார ரீதியான வேலிகள் அவர்கள் முன் மண்டியிட்டு நிற்கின்றன.
இதனால் அவர்களின் வலிகளைப் பேசும் வாய்ப்பு, நம் சமூகத்தில் மிகப்பெரிய வெற்றிடமாக இருக்கிறது. சமூகத்தின் முன் ஒரு பெண் கத்தினால், உடனே திரும்பிப் பார்க்கும், அதுவே ஒரு ஆண் கத்தினால், வேடிக்கைப் பார்த்துக்கொண்டே நகர்ந்துவிடும்.

இந்த சமூகம் பார்த்த வேடிக்கையின் வீரியம்தான், தற்போது கொஞ்சம் கொஞ்சமாக வெடிக்க ஆரம்பித்துள்ளது. ஆணில்லாமல் பெண்ணில்லை, பெண்ணில்லாமல் ஆணில்லை எத்தனை நாகரிகம் வளர்ந்தாலும், இந்த இயற்கையான உறவை நாம் மாற்ற முடியாது. அதனால் ஆண்களின் வலிகளையும், உடல் மற்றும் மனநலம் சார்ந்து பேச வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

அப்படிச் செய்தால் மட்டுமே காதலிலும், குடும்ப வாழ்க்கையிலும் இருவரின் தேவைகளையும் புரிந்துகொள்ள ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாக இருப்பார்கள். மனிதனுக்கே உரிய அனைத்து நிறைகுறைகளுடன், இருவரும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு, அனுசரித்து வாழ்வார்கள். அந்த விழிப்புணர்வைத்தான் நம் அரசும், தன்னார்வ நபர்களும், சமூகப் போராளிகளும், மனநல மருத்துவத் துறையும் சேர்ந்து செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். எந்தவொரு பாலினத்தையும் கைவிடுவது சுதந்திரமாகாது. அனைத்து பாலினமும் சேர்ந்து, கலந்து இயங்கிக் கொண்டு இருப்பதே உண்மையான சுதந்திரமாகும்.

Related posts

எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சப்போட்டா!

புது அம்மா to Fit அம்மா

மூளையின் முடிச்சுகள் தன்னுயிர் நீத்தல்!