மேலூர் அருகே ஆம்னி பஸ் கவிழ்ந்து முதியவர் பலி: பெண்கள் உட்பட 20 பேர் காயம்

மேலூர்: மேலூர் அருகே நேற்று நள்ளிரவு ஆம்னி பஸ் கவிழ்ந்ததில் முதியவர் பலியானார்; பெண்கள் உட்பட 20 பேர் காயமடைந்தனர்.விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் இருந்து சென்னைக்கு 38 பயணிகளுடன் ஆம்னி பஸ் ஒன்று நேற்று இரவு புறப்பட்டு வந்தது. மதுரை வரிச்சியூரை சேர்ந்த டிரைவர் பரமேஸ்வரன் பஸ்சை ஓட்டினார். மதுரை மாவட்டம், மேலூரை அடுத்த தாமரைப்பட்டி அருகே, நேற்று நள்ளிரவு 1 மணியளவில் சென்றபோது, அந்த வழியாக மதுபோதையில் எதிர்திசையில் ஒருவர் டூவீலரை ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது. அவர் மீது மோதாமல் இருக்க ஆம்னி பஸ்சை டிரைவர் உடனடியாக திருப்பினார். இதில், கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையின் குறுக்கே கவிழ்ந்தது. இந்த விபத்தில், சாத்தூரை சேர்ந்த சுப்பிரமணியன் (60) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த மேலூர் டிஎஸ்பி கிருஷ்ணன் தலைமையிலான போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்தில் காயமடைந்த பயணிகள் சிகிச்சைக்காக மதுரை மற்றும் மேலூர் அரசு மருத்துவமனைகளுக்கு ‘108’ ஆம்புலன்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து காரணமாக அந்தப் பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதையடுத்து ஜேசிபி இயந்திரம் கொண்டுவரப்பட்டு ஆம்னி பஸ் அகற்றப்பட்டதால் போக்குவரத்து சீரானது.

Related posts

சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் ஒன்றிய அரசின் புனித யாத்திரை திட்டம்: டெல்டாவில் 8 கோயில்கள் தேர்வு

பீகாரில் கொட்டும் கனமழையால் 10 நாளில் 4 பாலம் இடிந்து விழுந்தது: எதிர்கட்சிகள் கடும் கண்டனம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கில் ஜார்க்கண்டில் மேலும் 2 பேரை சி.பி.ஐ. கைது செய்துள்ளது