900 கேமராக்கள் மூலம் கண்காணிப்பு; குமரியில் நாளை முதல் விநாயகர் சிலைகள் கரைப்பு: 3800 போலீஸ் பாதுகாப்பு

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் நாளை முதல் 2 நாட்கள் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட உள்ளன. இதையொட்டி மாவட்டம் முழுவதும் 3800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். 400 பாடி கேமராக்கள் உள்பட சுமார் 900 கேமராக்கள் மூலம் போலீசார் கண்காணிக்கிறார்கள். இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 7ம் தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி குமரி மாவட்டத்திலும் இந்து முன்னணி, இந்து மகா சபா, சிவசேனா உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைத்துள்ளனர். இந்த சிலைகள் அனைத்தும் நாளை (14ம்தேதி) முதல் கரைக்கப்பட உள்ளன. இந்து மகா சபா சார்பில் மாவட்டம் முழுவதும் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள், நாளை காலை முதல் நாகர்கோவில் நாகராஜா கோயில் திடலுக்கு கொண்டு வரப்பட உள்ளது.

பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக, சொத்தவிளை கடலுக்கு கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட உள்ளது. இதே போல் தமிழ்நாடு சிவசேனா சார்பில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள், குழித்துறை தாமிரபரணி ஆற்றில் கரைக்கப்பட உள்ளன. இந்த ஊர்வலம மேல்புறம் சந்திப்பில் இருந்து தொடங்குகிறது. மணவாளக்குறிச்சியில் மட்டும் இந்து முன்னணி சார்பில், விநாயகர் சிலை கரைக்கப்பட உள்ளது. மணவாளக்குறிச்சி யானை வரவழைத்த விநாயகர் கோயிலில் இருந்து ஊர்வலம் புறப்பட்டு, சின்னவிளை கடலில் கரைக்கப்பட இருக்கிறது.  நாளை மறுதினம் (15ம்தேதி) இந்து முன்னணி சார்பில் மாவட்டம் முழுவதும் உள்ள விநாயகர் சிலைகள் கரைக்கப்பட உள்ளன.

நாகர்கோவில் மாநகரம், ராஜாக்கமங்கலம் ஒன்றிய இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் நாளை மறுதினம் பகல் 2.30க்கு, நாகர்கோவில் நாகராஜா கோயில் திடலில் இருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, சங்குதுறை கடலில் கரைக்கப்படுகிறது. தோவாளை ஒன்றிய இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள், தோவாளை முருகன் கோயில் அடிவாரத்தில் இருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, தருவை ஆற்றில் கரைக்கப்பட உள்ளன. அகஸ்தீஸ்வரம் ஒன்றிய இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்டுள்ள சிலைகள், சுசீந்திரம் தாணுமாலையசுவாமி கோயில் முன்பிருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் கரைக்கப்பட உள்ளது.

குருந்தன்கோடு ஒன்றியம் சார்பில் உள்ள சிலைகள், திங்கள்நகர் ராதாகிருஷ்ணன் கோயில் முன்பிருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, மண்டைக்காடு கடலில் கரைக்கப்படுகிறது. தக்கலை ஒன்றியம் சார்பில் உள்ள சிலைகள், வைகுண்டபுரம் ராமர் ஆலயத்தில் இருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, மண்டைக்காடு கடலில் கரைக்கப்பட உள்ளது.  திருவட்டார் ஒன்றியம் சார்பில் உள்ள சிலைக்ள, செருப்பாலூர் முத்தாரம்மன் கோயிலில் இருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, திற்பரப்பு அருவியில் கரைக்கப்பட உள்ளது. கிள்ளியூர் ஒன்றியம் சார்பில் உள்ள சிலைகள், கருங்கல் கூனாலுமூடு தர்ம சாஸ்தா கோயிலில் இருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, மிடாலம் கடலில் கரைக்கப்படுகிறது.

முஞ்சிறை ஒன்றியம், கொல்லங்கோடு நகரம் சார்பில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள், அஞ்சுக்கண்ணு கலுங்கு மாடன் தர்மபுரான் இசக்கியம்மன் கோயிலில் இருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, தேங்காப்பட்டணம் கடலில் கரைக்கப்படுகிறது. மேல்புறம் ஒன்றியம் இந்து முன்னணி சார்பில் உள்ள விநாயகர் சிலைகள், மேலப்புறம் அளப்பன்கோடு ஈஸ்வரன் கால பூதத்தான் கோயிலில் இருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, குழித்துறை தாமிரபரணி ஆற்றில் கரைக்கப்படுகிறது. குழித்துறை நகர இந்து முன்னணி சார்பில் உள்ள விநாயகர் சிலைகள், பம்மம் பகுதியில் இருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, குழித்துறை தாமிரபரணி ஆற்றில் கரைக்கப்படுகிறது.

புதிய வழித்தடம் வழியாக ஊர்வலம் செல்ல அனுமதியில்லை. ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட இடம் வழியாகவே ஊர்வலம் செல்ல வேண்டும். ஊர்வலத்தில் பிறர் மனதை புண்படுத்தும் வகையிலான கோஷங்கள் கூடாது என்பன போன்ற கட்டுப்பாடுகளை காவல்துறை , மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தி உள்ளது. விநாயகர் சதுர்த்தியையொட்டி நாகர்கோவில், தக்கலையில் இரு தற்காலிக கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன. சிலை கரைப்பு, ஊர்வலத்தையொட்டி குமரி மாவட்டம் முழுவதும் 3800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.
ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 8 கம்பெனி போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று காலை குமரி மாவட்டம் வந்தடைந்தனர். ஆங்காங்கே உள்ள மண்டபத்தில் இவர்கள் தங்க வைக்கப்படுகிறார்கள். நாளை முதல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

ஊர்வலத்தில் 400 போலீசார் , சீருடையில் கேமரா பொருத்தி உடன் செல்கிறார்கள். இந்த கேமராக்களில் 8 மணி நேரம் காட்சிகள் மற்றும் உரையாடல்களை பதிவு செய்ய முடியும் என போலீசார் தெரிவித்துள்ளனர். ஊர்வல பாதைகளில் ஏற்கனவே 360 கேமராக்கள் உள்ளன. இது தவிர கூடுதலாக 140 இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஊர்வலம் தொடங்கியதில் இருந்து சிலை கரைப்பு வரை அனைத்தும் பதிவாகும். ஊர்வல பாதைகளை நேற்று எஸ்.பி. சுந்தரவதனம் ஆய்வு செய்தார். டி.ஐ.ஜி. மூர்த்தி, நாளை காலை குமரி மாவட்டம் வர உள்ளார்.

Related posts

போதைப்பொருள் பார்சல் வந்துள்ளதாக கூறி சென்னையில் 8 மாதத்தில் தொழிலதிபர்கள், பெண்களை மிரட்டி ரூ.132 கோடி பணம் பறிப்பு: பொதுமக்கள் உஷாராக இருக்க கமிஷனர் அருண் எச்சரிக்கை

ரேஸ் கிளப் குத்தகை ரத்தானதை எதிர்த்து கிளப் சார்பில் உரிமையியல் வழக்கு: அரசு பதில் தர உத்தரவு

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராகாமல் இருக்க நியாயமான காரணங்கள் இருந்தால் எடப்பாடிக்கு விலக்கு அளிக்கலாம்: சிறப்பு நீதிமன்றத்தில் தயாநிதி மாறன் பதில் மனு