மேகதாது அணைக்கட்டும் விவகாரம்; விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்க விரைந்து நடவடிக்கை: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டினால் தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்கள் பாலைவனம் ஆகிவிடும் அபாயம் உள்ளது. இதை உணர்ந்து தமிழக அரசு விரைந்து செயல்பட வேண்டும். அதேபோல, கர்நாடக அரசு தொடர்ந்து பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையில் தங்கள் நிலையில் இருந்து பின்வாங்காமல் தொடர்ந்து மேகதாதுவில் அணைக்கட்டும் பணியில் ஈடுபடுகிறது. மேலும் ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதல் கிடைக்காதபோதும் மாற்றுவழியை தேடுகிறது.

கர்நாடக மாநிலம், 29 வனத்துறை அதிகாரிகளை நியமித்து நிலஅளவிடும் பணியில் ஈடுபடுத்தியுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.காவிரி நீர் என்பது தமிழக விவசாயிகளின் உயிர்நீர். இதில் அரசியலை புகுத்தக்கூடாது. அதேபோல, கர்நாடக அரசு கடந்த மாதம் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 40 டிஎம்சி தண்ணீருக்கு பதிலாக 11 டிஎம்சி தண்ணீர் மட்டுமே வழங்கியுள்ளது.மேலும், தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் தண்ணீர் பற்றாக்குறையால் பயிர்கள் கருகி வீணாகியுள்ளது. நேரடி விதைப்பு விட்டவர்களும், நாற்றங்காலில் விதை விதைத்தவர்களும் போதிய தண்ணீர் இல்லாமல் அவற்றை நடவு செய்ய முடியாமல் தவிக்கின்றனர்.

தற்பொழுது தமிழக விவசாயிகளின் நிலைமை இப்படி இருக்க, மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகம் பொருளாதார வீழ்ச்சி மற்றும் உணவுத்தட்டுப்பாடு என்று மிக மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும். எனவே, தமிழக அரசு மேகதாதுவில் அணைக்கட்டும் பிரச்னையில் உரிய ஆலோசனை செய்து, விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் அறிக்கை விடுத்துள்ளார்.

Related posts

சென்னையில் சிறுவனை கடித்த தெருநாய்

மும்பை நகரில் வெள்ளப்பெருக்கு: பள்ளி, கல்லூரிகளுக்கு அரைநாள் விடுமுறை அறிவிப்பு

கூடங்குளம்: மீண்டும் மின் உற்பத்தி தொடக்கம்