மெகா மோசடிகள்

‘நா ட்டில் நிலவும் அனைத்து பிரச்சனைகளுக்கும் ஊழலே காரணம். கரையான்களைப் போல, ஊழல் நாட்டின் அமைப்புகளையும், அதன் திறன்களையும் முற்றிலும் வெறுமையாக்கியுள்ளது. ஒவ்வொரு துறையிலும் ஊழலுக்கு எதிராகப் போராடுவது முக்கியம். இந்தப் போராட்டத்தைத் தொடர்வதே எனது வாழ்நாள் அர்ப்பணிப்பு. ஊழலுக்கு எதிரான வெறுப்பு சூழலை உருவாக்க வேண்டும். அழுக்காறு நம் மனதில் வெறுப்பை ஏற்படுத்துவது போல், பொது வாழ்வில் ஊழலை விட பெரிய அழுக்கு எதுவும் இருக்க முடியாது. அதனால்தான் நமது தூய்மை பிரச்சாரத்திற்கு ஒரு புதிய திருப்பத்தை கொடுக்க வேண்டும். நாம் ஊழலை ஒழிக்கவேண்டும்’ என்று தொடர்ந்து 10வது முறையாக டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றி உரையாற்றி இருக்கிறார் பிரதமர் மோடி.

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், உதான் திட்டம் தோல்வி, பாரத் மாலா திட்டத்தில் பல ஆயிரம் கோடி முறைகேடு, எச்சிஎல் இன்ஜின் தயாரிப்பில் ரூ159 கோடி இழப்பு, பரனூர் உள்பட 5 சுங்கச்சாவடியில் கூடுதலாக ரூ154 கோடி பொதுமக்களிடம் இருந்து வசூல், பிரதமரின் சுகாதாரக்காப்பீடு திட்டத்தில் 7.5 லட்சம் பேர் ஒரே எண்ணில் இணைக்கப்பட்டு மெகா மோசடி நடந்தது கண்டுபிடிப்பு என்று இன்னும் வரிசை கட்டி வந்து கொண்டு இருக்கிறது பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் நடந்த முறைகேடுகள். மத்திய தணிக்கை வாரியம் வெளியிட்ட அறிவிப்பில் இத்தனை மோசடிகள், முறைகேடுகள் வெளி வந்துகொண்டுஇருக்கின்றன.

உதான் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட 93 சதவீத வழித்தடத்தில் விமான சேவை இதுவரை தொடங்கப்படவில்லை. ரூ1089 கோடி செலவிட்டும் பல வழித்தடங்களில் விமானமே இயக்கவில்லை. இந்த திட்டத்தில் தமிழ்நாட்டில் தஞ்சை, வேலூர், ராமநாதபுரம், சேலம் ஆகிய நகரங்கள் இடம் பெற்றுள்ளன. இதில் சேலத்தில் மட்டுமே விமான சேவை இயக்கப்பட்டது. பாரத் மாலா திட்டத்தில் டெல்லி மற்றும் அரியானாவை இணைக்கும் 29 கிமீ தூரம் உள்ள துவாரகா எக்ஸ்பிரஸ் சாலை திட்டத்தில் ரூ6700 கோடி முறைகேடு நடந்துள்ளதாக ஒன்றிய தணிக்கை வாரியம் தெரிவித்துள்ளது. இன்னும் பாரத்மாலா திட்டத்தில் நாடு முழுவதும் 75 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலைகள் அமைக்க திட்டமிடப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அப்படியானால் இந்த ஒரு திட்டத்தில் மட்டும் ரூ7.50 லட்சம் கோடி ஊழல் செய்து இருக்கிறது மோடி அரசு என்கிறது
ஆம்ஆத்மி.

தோண்டத்தோண்ட முறைகேடுகள் வெளியே வந்து கொண்டு இருக்கிறது. பாரத் மாலா திட்டத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களால் பெரும் பயன் அடைவது அதானி என்ற குற்றச்சாட்டும் வெளிவந்து இருக்கிறது. நாடு முழுவதும் கடந்த 10 மாதத்தில் மட்டும் கிட்டத்தட்ட 4 லட்சம் பேருக்கு ஒன்றிய அரசு நிறுவனங்களில் வேலை ெகாடுத்ததாக கணக்கு காட்டியிருக்கிறது ஒன்றிய அரசு. எந்த தேர்வு, எப்போது அறிவிப்பு வந்தது, எப்போது நடந்தது, எந்த விவரமும் இல்லை. வேலைக்கு தேர்வான 4 லட்சம் பேரும் யார், அவர்களுடன் தேர்வு எழுதியவர்கள் யார் என்ற பட்டியலையும் எடுத்தால் இன்னும் ஒரு மெகா மோசடி வெளிச்சத்திற்கு வரும். நிலைமை இப்படி இருக்கும் போது அடுத்த ஆண்டு தேசிய கொடி ஏற்றும்போது சாதனை பட்டியல் வெளியிடுவேன் என்கிறார் பிரதமர் மோடி. ஆனால், ‘அடுத்த ஆண்டு மோடி கொடி ஏற்றுவார். அது அவரது வீட்டில்’ என்று பதில் கொடுத்து இருக்கிறார் காங்கிரஸ் தலைவர் கார்கே.

Related posts

உரிய ஆவணம் இல்லாத பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த 3 பேர் கைது

நடுவானில் கோளாறு – விமானம் அவசரமாக தரையிறங்கியது

கேளம்பாக்கம் அருகே தனியார் விடுதியில் பெண் இன்ஜினியர் தூக்கிட்டு தற்கொலை