சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் தவ்ஹீத் ஜஅமாத் தலைவர்கள் சந்திப்பு


சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில தலைவர் ஆர்.அப்துல்கரீம், மாநில பொதுச்செயலாளர் ஏ.முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்ட மாநில நிர்வாகிகளும் மேலாண்மைக் குழு தலைவர் ஷம்சுல்லுஹா ரஹ்மானி, தணிக்கை குழுத்தலைவர் எம்.எஸ்.சுலைமான் உள்ளிட்ட உயர்நிலைக்குழு நிர்வாகிகள் இன்று காலை சந்தித்து பேசினர். அப்போது, திமுக அரசு தமிழ்நாட்டில் பொறுப்பேற்ற உடன் சிஏஏ சட்டத்தை தமிழகத்தில் கடைபிடிக்க மாட்டோம் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினீர்கள்.

தங்கள் கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்திய நாடாளுமன்றத்தில் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்ததற்காகவும் சிறுபான்மை சமுதாய நலன்களுக்காக தாங்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறீர்கள். குறிப்பாக சிஏஏ கருப்பு சட்டம் அரங்கேறியபோது அதெற்கெதிராக போராட்டம் நடத்தி உங்களின் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தீர்கள் இதற்காக நன்றி தெரிவித்தனர். இந்த சந்திப்பின் போது கோரிக்கைகள் அடங்கிய மனு முதல்வரிடம் அளித்தனர். சந்திப்புக்கு பின்னர் மாநில பொதுச்செயலாளர் முஜிபுர் ரஹ்மான் அளித்த பேட்டி: முஸ்லிம் மன்னர்களும், முஸ்லிம் செல்வந்தர்களும் தங்களின் பல சொத்துக்களை பள்ளிவாசல்கள், அடக்கத் தலங்கள் இன்னும் பல பயன்பாடுகளுக்காக தானமாக வழங்கியுள்ளனர்.

பல லட்சக்கணக்கான அந்தச் சொத்துக்கள் நம் தேசமெங்கும் காணப்படுகின்றன. இவற்றைப் பராமரித்து நெறிப்படுத்துவதற்காக வக்ஃப் வாரியங்கள் ஏற்படுத்தப்பட்டன. இந்த வக்ஃப் வாரியங்கள் தான் இந்தச் சொத்துக்களை நிர்வகிக்கின்றன. இஸ்லாமியர்களின் உரிமையைப் பறிப்பதற்கும் மதச் சார்பின்மையை மழுங்கச் செய்வதற்கும் தான் ஒன்றிய அரசின் மசோதா உதவுமே தவிர இதனால் இஸ்லாமியர்களுக்கு எள்ளளவும் நன்மை ஏற்படப் போவதில்லை. வக்ஃப் வாரிய சட்டத்தில் 44 திருத்தங்களைக் கொண்டுவரும் மசோதாவிற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். ராஜ்யசபாவில் ஓட்டெடுக்கும் சூழல் வந்தால் அதை புறக்கணிக்காமல் எதிர்த்து வாக்களிக்க வேண்டும்.

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கலைஞர் சிறுபான்மையினருக்கு 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை சட்டமாக்கினார். இஸ்லாமியர்களின் சதவீதத்தோடு ஒப்பிடுகையில் வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு குறைவாக இருந்தது. 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்தி தர வேண்டும் என்று நீண்ட வருடங்களாக இஸ்லாமிய சமுதாயம் கோரிக்கை வைத்து வருகிறது. இஸ்லாமியர்களின் பிரதிநிதித்துவத்திற்கு ஏற்ப இட ஒதுக்கீட்டை உயர்த்தி தர வேண்டும். மதுவை ஒழித்து பூரண மது விலக்கை தமிழகத்தில் நடைமுறை படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

ஒரு கோடி இலக்காம்… சேர்ந்ததோ வெறும் அஞ்சு லட்சம்தானாம்… தமிழகத்தில் பாஜ உறுப்பினர் சேர்க்கையில் கடும் பின்னடைவு: இளைஞர்கள் பெயரளவுக்கு கூட திரும்பிப் பார்க்கவில்லை; பாஜ மேலிட பொறுப்பாளர் கடும் அதிருப்தி

கோயிலில் சாமி ஆடிய பெண் கழுத்தை அறுத்து தற்கொலை

‘2 மாதங்களுக்கு எதுவும் பண்ணக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க’பிரச்னை… பிரச்னை… பிரச்னை… தமிழிசை அலறல்