கூட்டத்தை கூட்ட முடியாமல் தவிக்கும் மாஜி மந்திரி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘இ லைக்கட்சி தலைவரின் ஊருல வரிந்து கட்டுதாமே கோஷ்டிகள்…’’ என கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘ஆமா.. இந்த ஊரில் மாநகர், புறநகருன்னு ரெண்டு மாவட்டங்கள் இருக்கு. இதில் தனது உயிருக்கு நிகராக கருதியவருக்கு, இலைக்கட்சி தலைவர், தன்னிடம் இருந்த மா.செ. பதவியை வழங்கி கவுரவப்படுத்தினாரு. அவரிடம் 8 தொகுதிகள் இருக்காம். இதில் நான்கு தொகுதிகளில் மட்டும் கவனம் செலுத்துவதோடு, தனக்கென ஒரு கூட்டத்தையே கவர் பண்ணி வச்சிருக்காராம்.

இன்னொரு நாலு தொகுதி பக்கமா எட்டிப்பார்ப்பதே கிடையாதாம். ஏன்னு கேட்டால், இலைக்கட்சி தலைவரோட உறவினர் அந்த பக்கம் இருப்பதா கட்சிக்காரங்க சொல்றாங்க. ஆனால், மாநகர செயலாளராக இருக்க கூடியவருக்கு பின்புலம் ஏதும் இல்லையாம். 15 ஆண்டுகளாக மா.செ.வாக இருந்தாலும், தனக்கென எந்த கோஷ்டியையும் சேர்த்து வைக்கலயாம். இலைக்கட்சி தலைவரோட விசுவாசியா மட்டுமே இருக்காராம்.

புதிய நிர்வாகிகளை நியமிக்க வேண்டுமானால் கூட, இலைக்கட்சி தலைவர் யாரை சொல்றாரோ அவரைத்தான் போடுவாராம். இதனால மாநகரில் உள்ள ரெண்டாங்கட்ட, மூணாங்கட்ட தலைவர்கள் எல்லோருமே அவருக்கு எதிராகவே இருப்பதாக கட்சிக்காரங்களே சொல்றாங்க. இலைக்கட்சி தலைவர் ஊருக்கு வந்தால், எல்லோரும் வரிசை கட்டி நின்று சலாம் போடுவாங்க. வரும்போதெல்லாம் புகைப்படமும் எடுத்துக்கொண்டு சமூக வலைதளங்களில் போட்டு மகிழ்ச்சியா இருப்பாங்க.

இலைக்கட்சி தலைவரை நேரடியாக சந்திப்பதால், மா.செ.வை ஒரு பொருட்டாகவே கருத மாட்டாங்களாம். அவரது முன்னாடி புகழ்வதும், பின்னாடி இகழ்வதுமாகவே இருக்காங்களாம். அவர்களுக்கும் மா.செ.பதவி மீது தீராத காதல் இருக்காம். அதுக்காக அவ்வப்போது ரகசிய கூட்டங்களையும் போடுறாங்களாம். ஆனால் யார் என்ன சொன்னாலும், இலைகட்சி தலைவர் காட்டும் வழிதான் என்னோடது என, அவரது ஒருசில ஆதரவாளர்களிடம் சொல்லிட்டு, ஏழுமலையானை வணங்கிட்டு போறாராம் அந்த மா.செ..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘பள்ளியில நடந்த போட்டோ ஷூட்டும் ரீல்ஸும் பரபரப்பாகியிருக்கே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘வேலூர்ல இருக்குற ஒரு கவர்மென்ட் மேல் நிலை பள்ளியில, படிக்க போன மாணவிங்க, வளைகாப்பு செஞ்சி ரீல்ஸ் போட்ட வீடியோ எல்லாரையும் வாயடைக்க வெச்சிருக்குது. வளைகாப்புக்கு தேவையான வளையலு, பூ, பொட்டு, சந்தனம், பன்னீர் சொம்புன்னு எடுத்து வந்து, நலங்கு வெச்சி, போட்டோ ஷூட்டும் எடுத்திருக்காங்க.

இதுமட்டுமில்லையாம், இந்த வளைகாப்புக்கு இன்விடேஷனும் தயார் செஞ்சி, தேதி, நேரம், இடம்னு பதிவு செஞ்சிருந்தாங்களாம். அந்த இன்விடேஷனையும் ரீல்ஸ் வீடியோவாக சமூகவலைதளங்கள்ல பதிவேற்றம் செஞ்சிருக்காங்க. இந்த வீடியோ இப்போது வைரலாகி வருது. மாணவிகள் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ பத்தி கல்வி அதிகாரி விசாரணை நடத்தி வர்றாங்க. மாணவர்களுக்கு ஒழுக்க விதிமுறையில பாரபட்சம் காட்டாம, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இனியாவது கவர்மென்ட் பள்ளிகள் மட்டும் இல்லாம, தனியார் பள்ளிகளையும் சேர்த்து தீவிரமாக கண்காணிச்சாத்தான், எதிர்கால சந்ததியினர் செல்லும் பாதை சரியானதாக இருக்கும்னு அதிகாரிகள் சொல்றாங்க..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘கூட்டத்துக்கு ஆள் சேக்க படாதபாடு படறாங்க போல..’’ என கேட்டு சிரித்தார் பீட்டர் மாமா. ‘‘தூங்கா நகரில் இலைக்கட்சியினரின் சமீபத்திய பொதுக்கூட்டங்கள் ஆட்களின்றி காத்தாடுகிறது. நகரத்து இலைக்கட்சியின் மும்மூர்த்திகளும் தங்களுக்கான தனிக்கூட்டத்திற்கு ஆட்களைத் திரட்ட, ஒவ்வொருவரும் படாதபாடு பட வேண்டி இருக்கிறதாம்.

முன்னெல்லாம் குறிப்பாக தெர்மகோல்காரரின் கூட்டமென்றால் ஏதாவது நகைச்சுவையுடன் ருசிகர பேச்சிருக்கும் என்ற எதிர்பார்ப்பில் கட்சியினர் வந்தனர். இப்போதெல்லாம் காசு வாங்கிக் கொண்டு வருகிற மூதாட்டிகள் கூட்டத்தை வைத்தே ஓட்ட வேண்டி இருக்கிறதாம். அதோடு ஆளுங்கட்சியை குறைசொல்வதை மட்டுமே தன் பேச்சாகக் கொண்டிருப்பதால் முகச்சுழிப்பைத் தருகிறதாம். கடந்த வாரம் நகரின் காமராஜர் சாலைப்பகுதியில் நடந்த கூட்டத்தில் தனக்கு நூறுதான் கொடுத்தார்கள் என்று மூதாட்டி ஒருவர் புலம்பித்தவித்த வீடியோ வைரலாகி பரபரப்பைத் தந்தது.

தற்போது தூங்காநகரத்து பெத்தானியபுரத்தில் நடந்த கூட்டத்தில் சேர்த்த கூட்டத்தை பேச்சு முடியும் வரையிலும் உட்கார வைத்திருப்பதே தெர்மகோல்காரருக்கு பெரும் சவாலாக போய் விட்டதாம். மேடையில் கட்சியினர் பேசிக்கொண்டிருக்கும்போதே, பலரும் எழுந்து போக முற்பட்டதைக் கண்ட தெர்மகோல்காரர் பதறியடித்து, மைக்கை பிடுங்கி, ‘யாராவது எழுந்து போனீங்கன்னா.. குடுகுடுப்பைக்காரங்க சொல்றது மாதிரி ரத்தம் காக்கித்தான் சாவீங்க..’ எனச் சாபம் கொடுத்தாராம்.

ஆனாலும் பயனின்றி பல பெண்களும் நடையை கட்டினார்கள். இதில் அப்செட் ஆன தெர்மகோல்காரர், ‘‘தங்கச்சிகளா.. வாங்கம்மா இங்க.. உங்க காதை கொஞ்சம் கொடுங்க. நீங்கள்லாம் சீக்கிரமா வீட்டிற்கு போகணும்னுதான், நிகழ்ச்சியை ஏற்பாடு செஞ்சவங்க எனக்கு மாலை மரியாதை செய்றதைக் கூட வாங்காம இருக்கேன்… சீக்கிரம் முடிச்சிடுறோம்… பொதுக்கூட்டத்துல நாங்க பேசுறத கொஞ்சம் கேட்டுட்டு போயிடுங்கம்மா…’ என்று கெஞ்சத் துவங்கி விட்டாராம்’’ என்றார் விக்கியானந்தா.

‘‘நிர்வாகியின் தடாலடியால் கப்சிப் ஆன பாஜ அதிருப்தி கோஷ்டி பற்றி சொல்லுங்க..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்குபின் பாஜவில் புதுகோஷ்டி உருவாகி அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கின. அவ்வப்போது புல்லட்சாமிக்கும், பாஜ மாநில தலைமைக்கும் குடைச்சல் கொடுத்து வந்தன. உச்சகட்டமாக சட்டசபையிலும் எதிர்ப்புகளை முன்வைத்தனர். அதேசமயம் புதுச்சேரியின் புதிய நிர்வாகியாக ஒன்றிய ஆளுமை தரப்பில் நெருக்கமானவர் நியமிக்கப்பட்டார்.

அவர் புதுச்சேரிக்கு வந்த ஓரிரு வாரங்களில் அதிரடியாக நேரடி களஆய்வுகளில் இறங்கினார். பாஜ அதிருப்தி கோஷ்டிகளை சந்திப்பதை அடியோடு தவிர்த்தார். அவரது தடாலடி நடவடிக்கையால் ஆடிப்போன பாஜ அதிருப்தி கோஷ்டி மட்டுமின்றி புல்லட்சாமி கட்சி தரப்பும் நிசப்தம் ஆகிவிட்டது. கவர்னர் நேர்மையின் பயணத்தை அதிரடியாக முன்னெடுத்துள்ளதால் பாஜ அதிருப்தி கோஷ்டி அமைதி வழிக்கு திரும்பியதுதான் தற்போதைய புதுச்சேரி ைஹலெட்’’ என்றார் விக்கியானந்தா…

Related posts

மயிலாப்பூர் நிதி நிறுவனத்தில் ரூ.525 கோடி மோசடி தேவநாதன் மீது 4,100 புகார்கள் குவிந்தன: 4 சொகுசு கார்கள், ரூ.1 கோடி மதிப்பிலான பத்திர ஆவணங்கள் பறிமுதல்

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் நீக்கப்பட்டவர்கள்தான்: எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

கிண்டி ரேஸ் கிளப் மைதானத்தில் 118 ஏக்கரில் பசுமைவெளி சுற்றுச்சூழல் பூங்கா: தமிழக அரசாணை வௌியீடு