மீஞ்சூர் ரயில்நிலைய சாலையில் இறைச்சி கழிவுகளால் நோய்தொற்று அபாயம்

பொன்னேரி: மீஞ்சூர் ரயில்நிலையத்துக்கு செல்லும் பாதையில் சாலையோரங்களில் அதிகளவு இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் அப்பகுதி வழியாக சென்று வரும் மக்களுக்கு பல்வேறு நோய்தொற்றுகள் பரவும் அபாயநிலை உள்ளது. திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பஜார் பகுதியில் இருந்து ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை அத்துமீறி பொதுமக்கள் கடந்து செல்வதால் அடிக்கடி ரயில்கள் மோதி விபத்துகள் ஏற்பட்டு வந்தன. இதைத் தொடர்ந்து, அங்கு விபத்து ஏற்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில்வே நிர்வாகத்திடம் வியாபாரிகள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.

இதனால் அப்பகுதியில் தண்டவாளத்தை பொதுமக்கள் கடந்து செல்லாத வகையில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டு உள்ளது. இதன்மூலம் ரயில் நிலையத்துக்கு செல்ல, அங்குள்ள நடை மேம்பாலத்தை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது மீஞ்சூர் பஜாரில் இருந்து ரயில்நிலையம் செல்லும் பாதையில் புதிதாக கட்டப்பட்ட சுற்றுச்சுவர் பகுதி மற்றும் சாலையோரங்களில் நடைபாதை வியாபாரிகளால் ஏராளமான இறைச்சி உள்ளிட்ட பல்வேறு கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், அவ்வழியே சென்று வரும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மர்ம காய்ச்சல் மற்றும் பல்வேறு நோய்தொற்றுகள் பரவும் அபாயநிலை உள்ளது.

இதுகுறித்து அப்பகுதி ரயில்வே அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும், அக்கழிவுகளை அகற்றி தூய்மை பணிகளை மேற்கொள்வதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர். எனவே, மீஞ்சூர் பஜாரிலிருந்து ரயில் நிலையம் செல்லும் சாலையில் கொட்டப்பட்டு உள்ள இறைச்சி உள்ளிட்ட பல்வேறு கழிவுகளை உடனடியாக அகற்றி, அங்கு முறையான தூய்மைப் பணிகளை மேற்கொள்ள மாவட்ட சுகாதாரத்துறை மற்றும் ரயில்வே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி வியாபாரிகளும் பொதுமக்களும் வலியுறுத்துகின்றனர்.

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை மறுநாள் பிரசாரம் ஓய்வு: அமைச்சர் உதயநிதி 2 நாள் பிரசாரம்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு

பிளஸ் 1 மாணவி பாலியல் பலாத்காரம்: அத்தையின் கணவர் கைது