மீனாட்சி அம்மன் கோயில் யானைக்கு உடல்நலக்குறைவு: கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை


மதுரை: மீனாட்சி அம்மன் கோயில் யானை பார்வதிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பெண் யானையான பார்வதிக்கு(28), கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இடது கண்ணில் புரை ஏற்பட்டு உடல்நலம் பாதித்திருந்தது. இதையடுத்து தாய்லாந்து நாட்டை சேர்ந்த கசிசார்ட் பல்கலைக்கழக கால்நடை இணை பேராசியர் நிக்ரோன் தோங்திப் தலைமையிலான 7 பேர் கொண்ட கால்நடை மருத்துவக் குழு மற்றும் கால்நடை ஆராய்ச்சி பல்கலைக்கழக பேராசிரியர்கள், கால்நடைத்துறை இணை இயக்குனர்கள் மற்றும் வனத்துறை அதிகாரிகள், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்கள் ஆகியோர் அடங்கிய குழுவினர் பார்வதி யானைக்கு சிகிச்சை அளித்தனர். இதைத் தொடர்ந்து பார்வதி யானை தொடர் கண்காணிப்பில் உள்ளது.

இதனிடையே பார்வதி யானைக்கு கடந்த சில தினங்களாக தொடர் வயிற்றுப்போக்கால் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் வழக்கமான பணிகளில் இருந்து பார்வதி யானைக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.
கால்நடைத்துறை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து யானையின் உடல்நலனை கண்காணித்து வருகின்றனர். பார்வதி யானைக்கு ஏற்கனவே கண்புரை பிரச்னை உள்ள நிலையில், தற்போது வயிற்றுப் போக்கு காரணமாக சிகிச்சை அளிக்கப்படுவது பக்தர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே பார்வதி யானை விரைவில் குணமாக வேண்டி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

 

Related posts

தமிழகத்தில் 4 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு

யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு: 23ம் தேதி கவுன்சலிங் தொடக்கம்

இன்று முதல் 3 நாட்களுக்கு பாஸ்போர்ட் சேவை இணையதளம் இயங்காது: மண்டல அதிகாரி விஜயகுமார் தகவல்