மருத்துவ வசதிகள் கார்ப்பரேட் மயமாகிவிட்ட நிலையிலும் குறைந்த கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனைகள் தேவையாக உள்ளன: சென்னை உயர் நீதிமன்றம் கருத்து

சென்னை: மருத்துவ வசதிகள் கார்ப்பரேட் மயமாகிவிட்ட நிலையில் அரசு மருத்துவனைகளுடன், அதிக கட்டணம் வசூலிக்காத தனியார் மருத்துவமனைகளின் தேவையும் அவசியமாக உள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. புதுச்சேரியைச் சேர்ந்த ஹேமச்சந்திரன் என்ற இளைஞர், சென்னை பம்மலில் உள்ள தனியார் மருத்துவமனையில் (பி.பி. ஜெயின் மருத்துவமனை), உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். கடந்த ஏப்ரல் 23 ம் தேதி அறுவை சிகிச்சை நடந்த நிலையில், மறுநாளே ஹேமச்சந்திரன் மரணடைந்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து, மருத்துவமனையை ஆய்வு செய்த செங்கல்பட்டு மாவட்ட சுகாதார பணிகள் துறை இணை இயக்குனர், மருத்துவமனையின் பதிவை தற்காலிகமாக ரத்து செய்து மே 4ம் தேதி உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து தனியார் மருத்துவமனை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரி ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, நோயாளியிடம் முன் அனுமதி பெற்ற பிறகே அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. 23 ஆண்டுகளாக சிறப்பான முறையில் செயல்பட்டு வரும் மருத்துவமனையிடம் இந்த ஒரு சம்பவம் குறித்து விளக்கம் கேட்காமல் மருத்துவமனையின் பதிவு ரத்து செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை ஏற்க முடியாது. எனவே, மருத்துவமனையின் பதிவை ரத்து செய்த அரசின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என்றார். மேலும் மருத்துவ வசதி என்பது கார்ப்பரேட் மயமாகி விட்ட நிலையில், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுடன் அதிக கட்டணம் வசூலிக்காத தனியார் மருத்துவமனைகளும் அவசியமாகிறது. இந்த மருத்துவமனைகளின் பங்களிப்பை அங்கீகரிக்க வேண்டும் என்றும் நீதிபதி கருத்து தெரிவித்தார்.

 

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்