ஆதரவற்ற நிலையில் சுற்றித்திரியும் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான மருத்துவ அவசர சிகிச்சை மையம்

*படுக்கை வசதியுடன் அமைகிறது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரியில், ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான மீட்பு மருத்துவ அவசர சிகிச்சை மையம் அமைக்கப்படவுள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம், ஆந்திரா-கர்நாடகா மாநில எல்லையில் உள்ள மாவட்டமாகும். வடமாநிலங்களில் இருந்து வரும் பெரும்பாலான லாரிகள், இம்மாவட்டத்தின் வழியாக தான் தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும், கேரளாவின் ஒரு பகுதிக்கும் செல்கிறது. இதனால், தினமும் ஏராளமான லாரிகள் வந்து செல்லும் மாவட்டமாக உள்ளது.

இந்நிலையில், வடமாநிலங்களில் வயதான மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை, அவர்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்களே டிரைவர்களிடம் காசு கொடுத்து, லாரியில் ஏற்றி எங்கேயாவது வழியில் இறக்கி விட்டு விடுங்கள் என்று கூறுவதாகவும், அவ்வாறு லாரிகளில் ஏற்றி வரும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை, வடமாநில லாரி டிரைவர்கள், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆங்காங்கே இறக்கி விட்டு சென்று விடுவதாகவும் குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

இந்நிலையில், இம்மாவட்டத்தில் சாலைகளில் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித்திரிபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவர்களை சமூக ஆர்வலர்கள் மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்ப்பதும், அவர்கள் அங்கிருந்து தப்பி, மீண்டும் சாலைகளில் சுற்றித்திரிவதும் வாடிக்கையாக உள்ளது. அவ்வாறு சுற்றித்திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களால், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையை போக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், கிருஷ்ணகிரி நகராட்சி பகுதியில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான மீட்பு மருத்துவ அவசர சிகிச்சை மையம் அமைக்கப்பட உள்ளது. இந்த மையம் அமையவுள்ள கட்டிட வளாகத்தை, நேற்று கலெக்டர் சரயு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சாலையோரம், பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில். வயதான மற்றும் ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டோர்களை கண்டறிந்து, அவர்களை மீட்டு உணவு மற்றும் முதலுதவி அளித்து, தொடர் சிகிச்சை மேற்கொள்ள, கிருஷ்ணகிரி நகராட்சியில் ஏற்கனவே செயல்பட்டு வந்த அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், தனி வார்டு அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த சிகிச்சை மையத்தில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக தலா 10 படுக்கை வசதி அமைக்கப்படவுள்ளது. மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிசிச்சை அளிக்க, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து 1 மனநல மருத்துவர் மற்றும் 1 செவிலியர் பணியில் ஈடுபடுவார்கள். மேலும், சிகிச்சையின் போது, தேவையான கவுன்சிலிங், மருத்துவ வசதிகள், பொழுதுபோக்கு அம்சங்கள் அமைக்கப்பட உள்ளது. இதில் நன்கு தேறியவர்களை, அவர்கள் சரியான முகவரி தெரிவிக்கும் பட்சத்தில், அவர்களை குடும்பத்தாரிடம் சேர்க்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து, மருத்துவமனையில் வெளிப்புற நோயாளிகளுக்கு டோக்கன் வழங்கும் பணிகளை பார்வையிட்டு, குறைகளை கேட்டறிந்தார். அப்போது, நோயாளிகளை நீண்ட நேரம் காத்திருக்க வைக்காமல், விரைந்து டோக்கன் வழங்க நடவடிக்கை எடுக்கும்படி மருத்துவக்கல்லூரி முதல்வருக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது, மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் பூவதி, மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் மது, கண் மருத்துவர் டாக்டர் கிருபாவதி மற்றும் மருத்துவர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related posts

வீட்டு வசதி மானியத்துக்கான ஒதுக்கீட்டை உயர்த்த ஆலோசனை

காலிஸ்தான் ஆதரவு தலைவர் மக்களவை எம்.பி.யாக பதவியேற்க 4 நாட்கள் பரோல் விடுப்பு

கேபினட் குழுக்களை அறிவித்தது தேசிய ஜனநாயக கூட்டணி அரசு