அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.இ. டிரோன் டெக்னாலஜி படிப்பு தொடங்கப்படும்: துணைவேந்தர் வேல்ராஜ் உறுதி

சென்னை: அக்னி தொழில்நுட்பக் கல்லூரியின், கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம் பல்வேறு துறைகளுக்கு டிரோன்களை வழங்கி வந்த நிலையில், தங்களுடைய முதல் ஷோரூமை சென்னையில் நேற்று தொடங்கியது. இதனை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் திறந்து வைத்தார். அக்னி குழுமத்தின் தலைவர் ஜெயபிரகாஷ், கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் இயக்க அலுவலர் விஜயகுமார் ராஜேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர். அப்போது அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் வேல்ராஜ் கூறுகையில், விவசாயம், தொழிற்சாலை பாதுகாப்பு, ராணுவ கண்காணிப்பு உள்ளிட்ட பல்வகையான பாதுகாப்பு பணிகளுக்காக பயன்படுத்தும் இந்த டிரோன்கள் வருங்காலங்களில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். அதற்கேற்றார்போல் பைலட்டுகளின் தேவையும் அதிகரிக்கும். அண்ணா பல்கலைக் கழகத்தின் எம்.ஐ.டி மற்றும் கருடா ஏரோஸ்பேஸ் இணைந்து எம்.இ டிரோன் டெக்னாலஜி என்ற படிப்பை தொடங்குவதற்கான பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் அண்ணா பல்கலைக்கழகம் இந்த படிப்பை அறிமுகப்படுத்த உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து பேசிய அக்னி குழுமத்தின் தலைவர் ஜெயபிரகாஷ் கூறுகையில், 500 கிராம் முதல் 50 கிலோ எடை வரையிலான டிரோன்கள் எங்களிடம் கிடைக்கும். குறைந்த அளவிலான எடைகளை கொண்ட டிரோன்களை இயக்க லைசன்ஸ் தேவை இல்லை. இருந்த போதிலும் அதற்கும் நெறிமுறைகள் உள்ளன.

கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தில் பைலட்டுக்கான பயிற்சியும் வழங்கப்படுகிறது. டெக்னாலஜி வளர்ந்து வருகிறது. இந்த நவீன காலக்கட்டத்தில் டிரோன்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏனெனில் மனிதர்கள் செல்ல முடியாத, பாதுகாப்பு இல்லாத பகுதிகளுக்கு டிரோன்களை அனுப்பித்தான் அங்கு இருக்கும் உண்மை நிலையை கண்டறிய முடிகிறது. உதாரணத்திற்கு உக்ரைன் போரில் டிரோன்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. வனத்துறை, ரயில்வே, போலீஸ் என பல்வேறு துறைகளுக்கு இதுவரை 2 ஆயிரத்திற்கும் அதிகமான டிரோன்களை எங்கள் நிறுவனம் வழங்கி இருக்கிறது. தற்போது இந்தியாவிலேயே முதல் ஷோரூம் எங்களுடையதுதான். விரைவில் நாடு முழுவதும் 300 ஷோரூம்களை திறக்க இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

 

Related posts

வருமான வரித்துறை அலுவலகத்துக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர் பெயர் சின்னம் பொருத்தும் பணி துவங்கியது!

மெரினாவில் ரேபிடோ ஓட்டுநரிடம் போலீஸ் எனக்கூறி, ரூ.500, செல்போன் பறித்த ஒருவர் கைது!