மேயர் பிரியா தலைமையில் நடைபெற்ற வடகிழக்குப் பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம்

சென்னை: வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மேயர் ஆர்.பிரியா தலைமையில் இன்று நடைபெற்றது.

தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், 05.10.2024 அன்று தலைமைச் செயலகத்தில், நடைபெற்ற வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மண்டலங்களில் வாரியாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பல்வேறு ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளை வழங்கினார்கள்.

இதன் தொடர்ச்சியாக, மேயர் ஆர்.பிரியா தலைமையில், வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் இன்று (07.10.2024) ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், கோவளம் மற்றும் கொசஸ்தலையாறு வடிநிலப் பகுதிகளில் விடுபட்ட இடங்களில் அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள், மழைநீர் வடிகால்கள் மற்றும் வண்டல் வடிகட்டித் தொட்டிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வண்டல்கள் மற்றும் கழிவுகள் அகற்றும் பணி, சாலை வெட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதனால் சேதமடைந்த சாலைகளில் மேற்கொள்ளப்படும் சாலை சீரமைக்கும் பணி குறித்தும்,

கடந்த மழையின்போது மழைநீர் தேங்கிய தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்காமல் இருக்க மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் அந்தப் பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள பல்வேறு குதிரைத் திறன் கொண்ட கூடுதல் மோட்டார் பம்புகள், தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்களை தங்க வைப்பதற்காக தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ள 169 நிவாரண மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகள், பொதுமக்களுக்கு உணவளிக்கும் வகையில் வட்டாரங்கள் அளவில் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ள 35 பொது சமையலறைகள் மற்றும் 200 வார்டுகளிலும் உணவு தயாரிக்கும் சமையலறைகள் குறித்தும், தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ள நிவாரணப் பொருட்கள், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் பணிகள் காரணமாக மழைநீர் தேங்கும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ள 25 இடங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள மழைநீர் வெளியேற்றும் நடவடிக்கைகள் குறித்தும்,
மழைக்காலங்களில் போக்குவரத்திற்கு இடையூறாக விழும் நிலையில் மற்றும் ஆபத்தான நிலையில் உள்ள மரங்கள் மற்றும் அதன் கிளைகளை அகற்றும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள், நீர்வளத்துறை மற்றும் இரயில்வே துறையின் பராமரிப்பில் உள்ள கால்வாய்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆகாயத்தாமரைகள் மற்றும் வண்டல்கள் அகற்றும் பணி, பெருநகர சென்னை மாநகராட்சியின் 16 சுரங்கப்பாதைகள் மற்றும் நெடுஞ்சாலைத்துறையின் 6 சுரங்கப்பாதைகளில் மழைநீரினை உடனுக்குடன் வெளியேற்றும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்து அறிவுரைகளை வழங்கினார்.

ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் சார்பில் மழைக்காலங்களில் பொதுமக்களிடமிருந்து மழைத் தொடர்பாக வரும் புகார்களை பெற்று மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள், மழைமானி, வெள்ள உணரி, முக்கியப் பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தலைமையிடத்தில் தொடர்ந்து கண்காணித்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் மேயர் விரிவாகக் கேட்டறிந்து, அனைத்து முன்னெச்சரிக்கை பணிகளையும் சிறப்பாக மேற்கொண்டு, மழைக்காலங்களில் அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும், பொதுமக்கள் மழை தொடர்பான புகார்களை தெரிவிப்பதற்கான மாநகராட்சியின் 1913 என்ற தொலைபேசி எண்ணானது, தற்போது 150 கூடுதல் இணைப்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், 9445551913 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம் என மேயர் கூட்டத்தில் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மதிப்பிற்குரிய துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையாளர் ஜெ.குமரகுருபரன், கூடுதல் ஆணையாளர் (சுகாதாரம்) டாக்டர் வி.ஜெய சந்திர பானு ரெட்டி, இணை ஆணையாளர் (கல்வி) முனைவர் ஜெ. விஜயா ராணி, மாமன்ற ஆளுங்கட்சித் தலைவர் ந.இராமலிங்கம், துணை ஆணையாளர்கள் எம்.பிருதிவிராஜ், (வருவாய் (ம) நிதி), எம்.பி.அமித், (தெற்கு வட்டாரம்), தலைமைப் பொறியாளர் (பொது) எஸ்.ராஜேந்திரன் மற்றும் மாநகர நல அலுவலர் டாக்டர் எம்.ஜெகதீசன், மண்டல அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

சென்னை கதீட்ரல் சாலையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்காவை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவர்கள் நிறுவனங்களுக்கு மாநில விருதுகள் அறிவிப்பு

வெளிநாடுகளுக்கு போலி தங்கம் அனுப்பி ரூ.1,000 கோடி மோசடி