மயிலாடுதுறை அருகே மகிமலை ஆற்றின் குறுக்கே பாலத்தின் மண் சரிவால் விபத்து அபாயம்: பொதுமக்கள் அச்சம்

செம்பனார்கோயில்: மயிலாடுதுறை அருகே மகிமலை ஆற்றின் குறுக்கே பாலத்தின் மண் ஏற்பட்டுள்ள மண் சரிவால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனர். எனவே விரைவில் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் ஒன்றியம் கடக்கம் ஊராட்சியையும், செம்பனார்கோயில் ஒன்றியம் அன்னவாசல் ஊராட்சி கழனிவாசல் பகுதியையும் இணைக்கும் வகையில் மகிமலை ஆற்றின் குறுக்கே பாலம் உள்ளது. இந்த பாலம் கடந்த 1957ம் ஆண்டு கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அப்போதைய மக்கள் தொகைக்கும், வாகன பயன்பாட்டிற்கும் ஏற்றுக்கொண்ட இந்த பாலம் தற்போதைய மக்கள் தொகைக்கும், வாகன பெருக்கத்திற்கும் ஏற்ற வகையில் இல்லை.

இந்த நிலையில் தற்போது பாலத்தை ஒட்டிய பகுதியில் மண் சரிந்து பெரும் பள்ளம் ஏற்பட்டு பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாகவும், இலகுரக, இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தையும் ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் வருபவர்கள் பள்ளம் இருப்பது தெரியாமல் கவனக்குறைவால் விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். இப்பகுதியில் தெருமின்விளக்கு வசதியின்மையால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் மேற்படி பாலத்தின் வழியாக செல்ல சிரமப்படுகின்றனர். கழனிவாசல் பகுதிக்கு அரசின் பொதுப்போக்குவரத்து சேவை இல்லாமல் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே குறுகிய பாலத்தை அகலப்படுத்தி பொதுப்போக்குவரத்து சேவையை ஏற்படுத்தி தரும்படி பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

Related posts

இந்திய கடலோர காவல் படையில் 320 இடங்கள்

5,000 ஊழியர்களுக்கு பணி: பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஐ.டி. நிறுவனமான கேப்ஜெமினி, தமிழ்நாட்டில் ரூ.1,000-கோடி முதலீடு

நாட்டின் பொருளாதாரத்தை 3வது இடத்திற்கு கொண்டு செல்ல உழைத்து வருகிறோம்: மாநிலங்களவையில் பிரதமர் மோடி பேச்சு