ரூ.4 கோடி கடத்தப்பட்ட விவகாரம் பாஜ கேசவ விநாயகத்தை விசாரிக்க தடையில்லை: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் போது சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் நெல்லை விரைவு வரையில் கொண்டு செல்லப்பட்ட ரூ.4 கோடி பணம் கைப்பற்றப்பட்டது. இதுதொடர்பாக நெல்லையில் பாஜ சார்பில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரனின் ஓட்டல் ஊழியர் சதீஷ் ஆகியோரிடம் தமிழ்நாடு சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக தமிழ்நாடு பாஜ தலைமை செயலாளர் கேசவ விநாயகம் ஆஜராகக்கோரி சிபிசிஐடி தரப்பில் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.

ஆனால், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தான் கேசவ விநாயகம் விசாரணைக்கு அழைக்கப்பட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து சிபிசிஐடி தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘‘இந்த விவகாரத்தில் தமிழ்நாடு சிபிசிஐடி போலீசாரின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்கிறது.

இதில் கேசவ விநாயகத்திடம் விசாரணை நடத்த எந்தவித தடையும் இல்லை. இருப்பினும் புதிய சம்மனை ஒரு வாரத்தில் அனுப்பி நடவடிக்கை எடுக்கலாம். மேலும் இந்த விவகாரத்தில் முன்னதாக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கப்படுகிறது” என தெரிவித்தனர்.

Related posts

வரலாற்றில் இல்லாத அளவுக்கு சென்னையில் ஆபரணத் தங்கம் விலை புதிய உச்சம்!

நெய் விநியோகித்த ஏ.ஆர்.டெய்ரி புட் நிறுவனத்தில் ஒன்றிய உணவு பாதுகாப்புத்துறை சோதனை!!

கோவையில் ரவுடி ஆல்வின் துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்கப்பட்டது தொடர்பாக காவல் ஆணையர் விளக்கம்