மாதவம்

சதானந்தன். இதுதான் என் பெயர். நான் கௌதம முனிவரின் புதல்வன். மிதிலை நகரத்து பேரரசன் ஜனகரின் ஆஸ்தான வேத குரு. நான் தான் ஜனகர் குடும்பத்தின் சார்பாக இராம சீதா கல்யாணத்தை நடத்தி வைத்தேன். என்னுடைய தாய் தான் அகலிகை. நான் சொல்லப்போவது என் பிரியமான தாயின் கதை. எங்காவது எப்போதாவது என் தாயைப் பற்றி எதிர்மறையாக யாராவது குறிப்பிடும்போதெல்லாம் மனம் மிகவும் கலங்கி போகும். அது எல்லாமே இராமன் அருள் செய்த தருணம் வரைதான். நான்
சொல்லப்போவது என் தாயின் கதை.

அகலிகை – உலகிலேயே எனக்குப் பிடித்த என் தாயின் பெயர். இந்தப் பெயரின் அர்த்தம் ‘எந்த அழகில்லாத விஷயமும் இல்லாதவள்’ அதாவது, ‘அழகானவள்’. ஒப்பற்ற குணம் உடையவள். மிகுந்த உத்தமி.என் தாய் அகலிகை எப்படி என் தந்தை கௌதம முனிவரை அடைந்தார் தெரியுமா? தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் வேண்டி, பாற்கடலைக் கடைந்தபோது அதிலிருந்து வெளிப்பட்டது காமதேனு என்கிற தெய்வீகப் பசு. அதை மகரிஷிகள் எடுத்துக் கொண்டனர். அடுத்ததாகத் தோன்றிய உச்சைசிரவஸ் என்ற வெண்ணிறக் குதிரையை மஹாபலி சக்ரவர்த்தி வைத்துக் கைக்கொண்டான். பிறகு வெளிவந்த ஐராவதம் என்ற வெள்ளை யானையையும் பாரிஜாத மரத்தையும் தேவேந்திரன் ஏற்றான். பின்னர், அப்ஸர ஸ்திரீகள் புடைசூழ மகாலட்சுமி தோன்றினாள். அவளையும் கௌஸ்துபம் என்ற ரத்தின ஹாரத்தையும் மந் நாராயணன் ஏற்றுக் கொண்டார். அதன் பிறகு மயக்கம் தரும் மதுவுக்குத் தலைவியான வாருணிதேவி தோன்றினாள். அவளை ஹரியின் அனுமதியுடன் அசுரர்கள் எடுத்துக் கொண்டனர்.

அதன் பின்னும் பாற்கடலைத் தொடர்ந்து கடைந்தபோது, திவ்யாலங்கார பூஷிதையாக அழகான கன்னியொருத்தி தோன்றினாள். மேகக் கூட்டத்தில் ஒளிரும் நட்சத்திரமாகப் பிரகாசித்த அவள்தான் அகலிகை! என் தாய். இந்திரன் எப்போதுமே காமத்தின் உருவமாகவே இருப்பவன், என்தாயை அடைய எண்ணினான். ஒரு தாயின் அழகைப் பற்றி அவளின் புதல்வன் வர்ணிப்பது தகாதுதான் ஆனாலும் என் தாய் இவ்வுலகிலேயே மாபெரும் அழகி. அவளுடைய அழகில் மதிமயங்கிய இந்திரன், அவளைத் தன்னுடையவள் ஆக்கிக் கொள்ள விரும்பினான்.

அதே நேரம் மகா தவசீலரான என் தந்தை கௌதம முனிவரும் அகலிகையைத் தன் மனைவியாக்கிக் கொள்ள விரும்பினார். இந்த இருவரும் தங்கள் விருப்பத்தை பிரம்மதேவரிடம் தெரிவித்தனர். உடனே பிரம்மதேவர், ‘ஒரு போட்டியின் மூலமே இதற்குத் தீர்வு காண முடியும்!’ என்று கருதி, இருவரையும் நோக்கி, ‘’மகத்தானவர்களே… உங்கள் ஆசை நியாயமானதே! ஆனால், உங்களில் ஒருவர் மட்டுமே இந்த கன்னிகையை அடைய முடியும்.. நான் கூறும் நிபந்தனையை ஏற்று, யார் அதை முதலில் நிறைவேற்றுகிறீர்களோ அவருக்கே இவள் உரியவள்.

உங்களில் யார் முன்னும் பின்னும் முகங்கொண்ட பசுவைக் கண்டு, அதை மும்முறை வலம் வந்து வணங்கி, முதலில் என்னிடம் வந்து தக்க ஆதாரத்துடன் கூறுகிறீர்களோ, அவரே இந்த அகலிகைக்கு மாலைசூட்டத் தகுதியானவர்!’’ என்றார்.அதைக் கேட்ட தேவேந்திரன், ‘‘முன்னும் பின்னும் முகங்கள் கொண்ட பசுதானே… இதோ, இப்போதே புறப்படுகிறேன். மூவுலகிலும் அப்படிப்பட்ட பசு எங்கிருந்தாலும் அதைக் கண்டுபிடித்து, வணங்கி இந்த அழகியின் கரம் பற்றுகிறேன்!’’ என்று கூறித் தனது மேக வாகனத்தில் ஏறி உலகங்களைச் சுற்றி வரப்புறப்பட்டான். என் தந்தை கௌதமரோ பிரம்மனின் நிபந்தனையைக் கேட்டுச் சோர்வடைந்தார்.

‘முன்புறமும் பின்புறமும் முகங்கொண்ட பசு எங்குள்ளது? அதை இதுவரை நான் கண்டதே இல்லை. நான் எப்படி அதைக் காண முடியும்?’ என்று எண்ணியவர், ‘சரி! நம்மால் ஆவது எது? ஈசன் விட்ட வழி!’ என்று தீர்மானித்து ஈஸ்வர தியானத்தில் அமர்ந்தார். அவர் எந்த தெய்வத்தை நோக்கி தியானம் செய்தாலும் அந்த தெய்வம் அவருக்குள் தோன்றி அவருக்கு வேண்டியவற்றை செய்து கொடுக்கத் தயாராக இருக்கும். அவருடைய தவ வலிமை அப்படிப்பட்டது. பிரம்ம தேவனும் தன்னுடைய பெருமைக்குரிய மகளாக கருதப்படுகின்ற அகலிகையை அவருக்கு மணமுடிக்கவே சித்தமாக இருந்தார்.

அந்த சமயத்தில் நாரதர் அங்கே வந்தார். கௌதமர் அவரை வரவேற்று உபசரித்தார். அப்போது நாரதர், ‘‘மகரிஷி! தங்கள் உள்ளத்தில் உள்ள ஆசையையும் பிரம்மதேவரின் நிபந்தனையையும் நான் அறிவேன், வாருங்கள். அருகில் ஒரு கோசாலை உள்ளது. அங்கே சென்று முன்னும் பின்னும் முகம் கொண்ட பசு உள்ளதா என பார்க்கலாம்!’’ என்றார்.இதைக் கேட்டு கௌதமர் சந்தோஷமடைந்தார். பசுக்கள் நிறைந்த அந்த கோசாலைக்கு இருவரும் சென்றனர். ஆனால் அங்கு அவர்கள் தேடிய பசு தென்படவில்லை. கௌதமர் மனம் தளர்ந்தார். நாரதரைப் பார்த்து, ‘‘கர்ப்பத்தில் உண்டாகும் மாற்றங்களினால் அபூர்வமாக ஒன்றிரண்டு பசுக்கள் இரண்டு தலை கொண்ட கன்றை ஈனுவதைக் கண்டுள்ளேன். ஆனால், முன்னும் பின்னும் சிரங்கள் உள்ள பசுவை நான் கண்டதில்லை!’’ என்றார் விரக்தியுடன்.

தான் விரும்பிய அகலிகை தனக்குக் கிடைப்பாளோ மாட்டாளோ என்ற ஆதங்கம் ஒரு புறம். போட்டியில் இந்திரன் வெற்றிகண்டால், அதனால் தான் அடையவிருக்கும் சிறுமை மறுபுறம். இதை எண்ணி பெரும் கலக்கத்தில் இருந்தார் கௌதமர்.அப்போது, ‘‘கௌதமரே! கவலைப்படாதீர். நான்முகன் கூற்று தவறாகாது. அதோ பாருங்கள், முன்னும் பின்னும் முகங்கள் கொண்ட கோமாதா!’’ என்று குதூகலத்தோடு ஒலித்த நாரதரின் குரலைக் கேட்ட கௌதமர், அவர் சுட்டிக் காட்டிய திசையில் பார்த்தார். ஆம்.அங்கே பசு ஒன்று, கன்றை ஈன்று கொண்டிருந்தது. பசுவின் பின்புறம் வெளிப்பட்ட கன்றின் முகம் பார்ப்பதற்கு பரவசமாக இருந்தது.

முன்னும் பின்னுமாக இரு பசு முகங்கள் தெரிவதுபோல் அந்தக் காட்சி சட்டென உணர்த்தியது. அதைக் கண்டு உளம் பூரித்த கௌதமர், நாரதருக்கு நன்றி தெரிவித்துவிட்டு, விரைந்து சென்று அந்தப் பசுவை மும்முறை வலம் வந்து நமஸ்கரித்தார். பின்னர் நாரதர் உடன்வர, பிரம்மதேவரைச் சந்தித்து, முன்னும் பின்னும் முகம் கொண்ட பசுவைத் தான் பார்த்து வந்த விவரத்தைக் கூறினார். நாரதரும் கௌதமரின் கூற்றை ஆமோதித்தார். அதைக் கேட்டு மிகவும் திருப்தியடைந்த பிரம்மன், அகலிகையை கௌதமருக்கு வேதமுறைப்படி மணம் முடித்து வைத்தார். என் தாய் அகலிகைக்கும் மிகுந்த சந்தோஷத்தை அது அளித்தது. ஏனெனில் என் தாய்க்கும் அந்த இந்திரனின் காம குணாதிசயம் தெரிந்திருந்தது.

மூவுலகைச் சுற்றி வந்தும் பிரம்மன் குறிப்பிட்ட பசுவைக் காண முடியாமல் மனச் சோர்வுடன், பிரம்மனது இருப்பிடத்தை இந்திரன் அடைந்தான். அங்கே கௌதமர், பிரம்மனின் நிபந்தனையைப் பூர்த்தி செய்து போட்டியில் வெற்றி பெற்று என் தாய் அகலிகையின் கரம் பற்றி ஆனந்தமாக இருப்பதைக் கண்டான்.‘எனக்குக் கிடைக்க வேண்டிய இந்த எழிலணங்கு போயும் போயும் மரவுரியணிந்து, தாடியும் மீசையுமாக ரோம பிண்டமாக இருக்கும் இந்த முனிவருக்கு மனைவியாகிவிட்டாளே! இது எந்த வகையில் நியாயமாகும்? இவள் இருக்க வேண்டியது தேவலோகமல்லவா?’ என்று பொருமினான்.

அந்தப் பொருமலை என் தாயும் உணர்ந்தாள். இது பற்றி என் தந்தையிடம் ஒரு வார்த்தையும் கூறியது இல்லை. காரணம் என் தாய் எப்பொழுதும் சொல்வாள், ‘‘எல்லா கஷ்டமும் என்னுடன் இருக்கட்டும். கௌதம முனிவர் எனக்கு கணவர் மட்டுமல்ல. என் தெய்வம். என் குரு மேலும் எனக்கு எல்லாமும் அவர்தான். அவர் மனம் வருந்தும்படியாக எந்தச் சொல்லையும், எந்தச் செயலையும், எந்த நாளிலும் நான் செய்ய மாட்டேன். எனக்கு எவ்வளவு துன்பம் நேரினும் அதைத் தாங்கிக் கொள்வேன். என்னுடைய பதிவிரதா தர்மமாக நான் நினைப்பது அதுதான்.’’ என்பாள்.

என் தாய் அகலிகை மற்றொருவரின் மனைவியான பின்னும் இந்திரன் கொண்ட வேட்கை சற்றும் தணியவில்லை. அது அவனுள் கனன்று எரிந்து கொண்டிருந்தது.அவனுடைய தீய எண்ணம் பற்றி என் தாய்க்கு நன்றாகத் தெரிந்திருந்தது. ஆனாலும் அதை ஒருநாளும் என் தந்தையிடத்தில் வெளிப்படுத்தி அவரைச் சங்கடப்பட வைக்க அவள் விரும்பியதில்லை. எல்லாவற்றையும் விட என் தந்தையின் சந்தோஷம் அவளுக்கு மிகவும் முக்கியமாக இருந்தது.

எனக்கு மிக நன்றாக ஞாபகம் இருக்கிறது. நான் குழந்தை பருவத்தில் இருந்த பொழுது என் தாய் எப்பொழுதெல்லாம் சற்று மனகலக்கத்துடன் இருக்கிறாளோ அப்போதெல்லாம் அவள் அருகில் சென்று “என்ன இந்திரன் உன்னை தொல்லை செய்கின்றானா” என்று கேட்பேன். “அதெல்லாம் ஒன்றுமில்லை நீ சின்னஞ்சிறு சிறுவன் நீ என்ன செய்து விட முடியும் அப்படியே அவன் எனக்குத் தொல்லை கொடுத்தாலும்?

‘‘தாயே நீ மட்டும் ஒரு வார்த்தை சொல். என் தந்தையிடம் செல்வேன். நீங்கள் ஒரு பெரிய சாபத்தை அந்த இந்திரனுக்கு அளிக்க வேண்டும் என்று கேட்பேன். என் தந்தையின் சாபம் கண்டிப்பாக பலிக்கும். உனக்கும் ஒரு நிரந்தர விமோசனம் கிடைக்கும்.’’ என்பேன்.

என் தாய் உடனே அதை மறுத்து “தேவையில்லை” என்று கூறிவிடுவாள்.அது ஒரு மழைக்கால முன்னிரவு நேரம். என் பிரியமான தாய் எனக்கு இரவு உணவு ஊட்டிக் கொண்டிருந்தாள். நான் எனக்கு ஒரு கதை சொல்லேன் என்று அவளை தொந்தரவு செய்தபடி இருந்தேன். எனக்கு எந்தக் கதையும் நினைவுக்கு வரவில்லை. வேண்டுமானால் உனக்காக ஒரு பாடல் பாடுகிறேன் என்றாள். அவள் பாட ஆரம்பித்தாள்.

“சதானந்தா சதானந்தா, என் சத் புத்திரா தாலேலோ!”
இப்படித்தான் அவளாகவே ஒரு பாட்டை இயற்றிப் பாடுவாள். என்
பெயரைச் சொல்லி பாடலைப் பாடும் போதெல்லாம் எனக்கு மிகவும் பிடித்திருக்கும்.

‘சதானந்தா சதானந்தா, என் சத் புத்திரா! தாலேலோ!’
‘சத்தான வேதமதை நீ கற்றுத் தேர்ந்திடுடா’
‘சதானந்தா சதானந்தா, என் சத் புத்திரா! தாலேலோ!’
‘தந்தை போல சுடர் விடவே தாயின் உள்ளம் விரும்புதடா!’
‘சதானந்தா சதானந்தா, என் சத் புத்திரா! தாலேலோ!’

“நான் என்ன சிறு பிள்ளையா இன்னமும் தாலாட்டு பாடல் பாடி என்னை தூங்க வைக்கிறாயே” என்றேன்.
‘‘நீ எனக்கு என்றுமே சிறுபிள்ளைதான்’’

அந்த பதில் எனக்கு மிகவும் பிடித்திருந்தது எப்பொழுது என்று தெரியவில்லை கண்ணயர்ந்து தூங்கி விட்டேன்.மறுநாள் காலையில் திடுக்கிட்டு விழித்தேன். விடிந்து நீண்ட நேரம் ஆனதை உணர்த்தேன்.இந்த நாள் ஒரு நல்ல நாளாக இருக்கப் போவதில்லை என்கின்ற அச்சம் மனதின் ஒரு ஓரத்தில் எனக்கு இருந்தது. காரணம் எதுவென்று சொல்லத் தெரியவில்லை. ஆசிரமம் முழுவதுமே ஒரு மயான நிசப்தத்தில் இருந்தது.

எப்போதும் வாசம் வீசும் சாம்பிராணி புகை இன்று இல்லை. மலர்களின் வாசமும் இல்லை. ‘அம்மா அம்மா’ என்று கூப்பிட்டபடி ஆசிரமத்தின் ஒவ்வொரு மூலையிலும் சென்று தேடினேன். ஆசிரமத்தின் உட்புறம் எல்லா இடத்திலும் தேடி யாகிவிட்டது. எங்கும் யாரையும் காணோம். ‘அம்மா என்னை விட்டுவிட்டு எங்கோ நீ சென்று விட்டாய்’ என கொஞ்ச நேரத்திற்கு எனக்கு கோபம் இருந்தது. பின்பு அம்மாவை காணவில்லையே என்று வருத்தம் ஏற்பட்டது. அம்மாவிற்கு என்ன நேர்ந்தது என்ற கவலை வந்தது. கடைசியில் மனது முழுவதும் கலவரமானது.

மூச்சிரைக்க வாசலுக்கு ஓடி வந்தேன். அங்கே எனது தந்தை கௌதம முனிவர் அசைவற்று அமர்ந்திருப்பதைக் கண்டேன். “அம்மா எங்கே” அவரிடம் கேட்டேன்.. அவரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. மீண்டும் மீண்டும் கேட்டேன். தந்தையாக இருப்பினும் அவர் குரு ஸ்தானம். ஆகவே மரியாதை மேலோங்கி இருந்தது. நான் காலடியில் விழுந்து, “அம்மா எங்கே? உங்களுக்கு தெரியாதா? என்னிடம் சொல்லக்கூடாதா?” மீண்டும் மீண்டும் கண்ணீர் மல்க வினவினேன்.

கோதண்டராமன்

Related posts

கும்ப ராசிக்காரர்களின் இல்லக் கனவை நனவாக்கும் இறைவன்

தலைச்சங்க நாண்மதியம் நாண்மதியப் பெருமாள்

ராஜகோபுர மனசு