மாஸ்டர் பிளான்

கர்நாடக மாநிலத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. 40 ஆண்டுகால அரசியல் வாழ்வில் எந்தவித ஊழல் குற்றச்சாட்டும், கரும்புள்ளியும் இல்லாமல் மக்கள் பணியை தொடர்ந்து வருபவர் சித்தராமையா. எப்படியாவது இவரது ஆட்சிக்கு தொல்லை கொடுக்க வேண்டும் என்று திட்டமிட்ட பாஜ மைசூரு மாநகர வளர்ச்சி குழுமத்தில் சித்தராமையா மனைவியின் பெயரில் மாற்று நிலம் பெற்றதில் மோசடி செய்துவிட்டார் என்று அமர்க்களப்படுத்தி கண்டன பாதயாத்திரை நடத்தினர்.

ஆளுநருக்கு சமூக சேவகர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் முதல்வர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்த அவரும் ஒப்புதல் அளித்துவிட்டார். இதை எதிர்த்து சித்தராமையா உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்து இடைக்கால தடையும் பெற்றுள்ளார். சித்தராமையா அரசுக்கு தொல்லை தரும் ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை கண்டித்து மாநிலம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் கடுப்பான பாஜ, ஆளுநர் தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் காங்கிரசார் அவரை அச்சுறுத்துகின்றனர் என்று குற்றம்சாட்டினர்.

இதையடுத்து அவருக்கு புல்லட் ப்ரூப் கார், ராஜ்பவனை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது. இந்நிலையில், பாஜ ஆளும் மாநிலங்களில் பாஜவை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் மீதான ஊழல் குற்றச்சாட்டு புகார்கள் ஆளுநர் ஒப்புதலுக்காக எத்தனை நிலுவையில் உள்ளன என்று கணக்கெடுத்து வெளியிட கர்நாடக காங்கிரஸ் மாஸ்டர் பிளான் தயாரித்துள்ளது. மேலும் முன்னாள் முதல்வர் குமாரசாமி மீதான குவாரி ஊழல் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ள ஆளுநர் அனுமதி தர வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.

அதுமட்டுமின்றி பாஜ முன்னாள் அமைச்சர்களுக்கு தொடர்புடைய ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கவும் ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்து வருகிறது. முந்தைய பாஜ ஆட்சியில் கொரோனா காலத்தில் நடந்த ஊழல்களை தூசுதட்டி எடுத்து வழக்கு தொடர ஒருபக்கம் காங்கிரஸ் அரசு மும்முரம் காட்டி வருகிறது. இந்நிலையில், தன்னை காங்கிரஸ் கட்சியினர் டார்கெட் செய்வதை சகித்து கொள்ள முடியாத ஒன்றிய அமைச்சர் குமாரசாமி, பதவியை ராஜினாமா செய்துவிட்டாவது என் மீதான வழக்கை சந்திக்க நான் தயார் என்று தெரிவித்தார். இதற்கு பதிலடி கொடுத்த சித்தராமையா, அவசியம் ஏற்பட்டால் குமாரசாமியை கைது செய்ய தயங்கமாட்டோம் என்றார்.

உடனே, ஆயிரம் சித்தராமையா வந்தாலும் என்னை கைது செய்ய முடியாது என்று குமாரசாமி சவால் விடுத்தார். இப்படி கர்நாடகாவில் ஒருவர் மீது ஒருவர் ஊழல் குற்றச்சாட்டு வைக்கும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் குமாரசாமி ஒன்றிய அமைச்சராக இருப்பதால் அவர் மீதான முந்தைய ஊழல் குற்றச்சாட்டு விசாரணைக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க முடியாது. அவர் ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்து அவர் தான் ஒப்புதல் தர வேண்3டும் என்று மூத்த வழக்கறிஞர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். பாஜவுக்கு எதிரான காங்கிரசின் மாஸ்டர் பிளான் வெற்றி பெறுமா?, முதல்வர் சித்தராமையாவுக்கு நீதிமன்றத்தின் மூலம் நிவாரணம் கிடைக்குமா என்று இம்மாத இறுதிவரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Related posts

ஊட்டி – குன்னூர் சாலையில் ஒய்யாரமாக வலம் வந்த காட்டு மாடு

கடல்சார் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் ராமேஸ்வரம்-கன்னியாகுமரிக்கு படகு சவாரி: ₹13 கோடியில் மிதவை ஜெட்டி பாலமும் அமைகிறது

அருமனை அருகே குளித்த போது தண்ணீர் இழுத்து சென்றது; இரவு முழுவதும் ஆற்றின் நடுவே இருந்த பாறையில் தூங்கிய போதை வாலிபர்: இறந்ததாக நினைத்து தேடிய தீயணைப்புத்துறையினர்