இரு சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட பெரும் வன்முறை ராணுவத்தின் முழு கட்டுக்குள் வந்தது மணிப்பூர்: 144 தடை, ரயில், இணைய சேவை முடக்கம் தொடர்கிறது

இம்பால்: கடந்த 2 நாட்களாக பெரும் வன்முறையால் பாதிக்கப்பட மணிப்பூரில் தற்போது படிப்படியாக அமைதி திரும்புவதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இருந்தும் மாநிலத்தில் ஊரடங்கு, கூட்டம் நடத்த தடை, இணையதள சேவை முடக்கம் போன்ற கட்டுப்பாடுகள் தொடர்கின்றன. மணிப்பூர் மாநிலத்தில் 53% மெய்டீஸ் சமுதாய மக்கள் உள்ளனர். இவர்கள் தங்களை எஸ்டி அந்தஸ்தில் சேர்க்கக் கோரி, மணிப்பூர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இவர்களின் கோரிக்கைக்கு அம்மாநில எம்பி, எம்எல்ஏக்கள் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால், மணிப்பூர் மக்கள் தொகையில் 40 சதவீதமாக இருக்கும் நாகா மற்றும் குக்கி பழங்குடிப் பிரிவினர், இந்தக் கோரிக்கைக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மெய்டீஸ் சமுதாய மக்களின் கோரிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், மணிப்பூர் பழங்குடியின மாணவர் சங்கம் சார்பில், 10 மலைப் பிரதேச மாவட்டங்களில் நேற்று முன்தினம் ‘பழங்குடியினர் ஒற்றுமைப் பேரணி’ நடத்தியது. சுரசந்த்பூர் மாவட்டம் தர்பங் பகுதியில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்ற ஆயுதம் தாங்கிய கும்பல், மெய்டீஸ் சமூதாய மக்கள் மீது தாக்குதல் வன்முறையாக வெடித்தது.

தமிழர்கள் வசிக்கும் பகுதி உட்பட மாநிலம் முழுவதும் ஏராளமான கடைகள், வீடுகள் சூறையாடப்பட்டு, தீ வைக்கப்பட்டன. மாநில போலீசாரால் வன்முறையைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதால், ராணுவம் மற்றும் அசாம் ரைபிள்ஸ் படையினர் கலவரப் பகுதிகளுக்கு வந்தனர். வன்முறை நடந்த பகுதியில் இருந்த 9 ஆயிரம் பேரை போலீசார் மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைத்தனர். பாதுகாப்புப் படையினர் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு முழுவதும் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். நிலைமையைக் கட்டுக்குள் வைக்க, வன்முறை ஏற்பட்ட பகுதிகளில் பாதுகாப்புப் படையினரின் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது. மேலும், கலவரக்காரர்களை கண்டதும் சுடுமாறு மணிப்பூர் அரசு உத்தரவிட்டுள்ளது. மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் விடுத்துள்ள அறிக்கையில், ‘தவறான புரிதல் காரணமாக வன்முறை நேரிட்டுள்ளது. வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு மத்திய, மாநில பாதுகாப்புப் படையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மக்கள் அமைதி காக்க வேண்டும்’ என்றார்.

இதற்கிடையில், மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங்குடன் நேற்று பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வன்முறையைக் கட்டுப்படுத்த சிறப்புப் பயிற்சி பெற்ற அதிரடி படையின் 5 கம்பெனிகளை, விமானம் மூலம் இம்பால் அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் மணிப்பூரின் பெரும்பாலான பகுதிகள் இந்திய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதால், வன்முறை சம்பவங்கள் நடந்த மோரே மற்றும் காங்போக்பி பகுதிகளில் படிப்படியாக நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இன்று ராணுவம் வெளியிட்ட அறிவிப்பில், ‘இம்பால், சுராசந்த்பூர் பகுதியில் இயல்பு நிலை திரும்பி வருகிறது. அதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளன. மோரே மற்றும் காங்போக்பியில் நிலைமை கட்டுக்குள் வந்துள்ளது. நாகலாந்தில் இருந்து மணிப்பூருக்கு கூடுதல் படைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.

இன்றிரவு கவுகாத்தி, தேஜ்பூரில் இருந்து இந்திய விமானப்படையின் கூடுதல் படைகள் வந்து சேரும்’ என்று தெரிவித்துள்ளது. இன்றைய நிலையில் மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களால், சமூக ஊடகங்கள் மூலம் போலி செய்திகள், வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் ஐந்து நாட்களுக்கு மொபைல் இணையதள வசதி முடக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் பெரிய கூட்டங்களை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பல மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு உத்தரவும் விதிக்கப்பட்டுள்ளதாக மாநில அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மணிப்பூருக்கு செல்லும் அனைத்து ரயில்களையும் வடகிழக்கு எல்லை ரயில்வே நிர்வாகம் நிறுத்தியுள்ளது. அங்கு நிலைமை சீராகும் வரை எந்த ரயில்களும் மணிப்பூருக்குள் நுழையாது என்று ரயில்வேயின் சிபிஆர்ஓ சப்யசாச்சி தெரிவித்துள்ளார்.

Related posts

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்