முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்த கோரி சென்னையில் மாபெரும் பேரணி: எஸ்டிபிஐ கட்சி தலைவர் அறிவிப்பு

சென்னை: எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழு மற்றும் மாவட்ட தலைவர்கள், பொதுச்செயலாளர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் அப்துல் ஹமீது, பொதுச்செயலாளர்கள் அகமது நவவி, நிஜாம் முகைதீன், அச.உமர் பாரூக், மாநில அமைப்பு பொதுச்செயலாளர் நஸுருதீன், மாநில செயலாளர்கள் அபுபக்கர் சித்திக், ரத்தினம், ஏ.கே.கரீம், ராஜா ஹூசேன், நஜ்மா பேகம் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் நடப்பு அரசியல் சூழல், உட்கட்சி தேர்தல் நிலவரம் உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் அளித்த பேட்டி: வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும். அரசியலமைப்பிற்கு எதிரான இதுபோன்ற நடவடிக்கையில் இருந்து அரசு பின்வாங்கி, நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் எந்த பாகுபாடும் இல்லாமல் அரசியலமைப்பு உரிமைகள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை மாநில அரசு கைவிட்டு, மாற்று வழியில் திட்டத்தை செயல்படுத்த முன்வர வேண்டும். சிறுபான்மையினர் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். நாட்டில் சிறுபான்மையினரின் உரிமைகள், கண்ணியம் மற்றும் உயிர்களைப் பாதுகாக்க சிறுபான்மையினர் பாதுகாப்புச் சட்டத்தை உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும். தமிழகத்திலும் இச்சட்டத்தை இயற்றி சிறுபான்மை பாதுகாப்பில் தமிழகம் முன்மாதிரியாக திகழ வேண்டும். சிறுபான்மை முஸ்லிம்களின் ஜீவாதார கோரிக்கையான கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்தித்தர தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதனை வலியுறுத்தியும், தமிழக சிறைச்சாலைகளில் உள்ள முஸ்லிம் ஆயுள் சிறைக்கைதிகளை விடுதலைக்கான நடவடிக்கைகளை விரைவுப்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தியும் எதிர் வரும் நவம்பர் 16 அன்று தலைநகர் சென்னையில் லட்சக்கணக்கானோர் அணிதிரளும் மாபெரும் பேரணியை நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

 

Related posts

ஏரியில் குளிக்க சென்ற 4 சிறுவர்கள் மூழ்கி பலி

உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிய தமிழக பக்தர்கள் 17 பேர் சிதம்பரம் வந்தடைந்தனர்: 13 பேர் இன்று சென்னை வருகை

குஜராத்தில் ஒரு டோல்கேட் கூட அமைக்காத ஒன்றிய பாஜ அரசு தமிழகத்தில் 67 டோல்கேட் அமைத்தது ஏன்? அதிமுக கேள்வி