மருதமலை கோயிலில் ரூ.5.20 கோடியில் லிப்ட் அமைக்கும் பணி 70 சதவீதம் நிறைவு

கோவை: கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் முருகனின் 7-வது படை வீடாக கருதப்படுகிறது. இக்கோயிலுக்கு கோவை மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். கோயிலுக்கு வாகனங்கள் மூலம் செல்பவர்கள் பார்க்கிங் இடம் வரை சென்று, அங்கிருந்து படிக்கட்டுகள் ஏறி சுவாமி தரிசனம் செய்கின்றனர். இந்த படிக்கட்டுகளை ஏறுவதற்கு முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு சிரமமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனால், பக்தர்களின் வசதிக்காக லிப்ட் அமைக்க அறநிலையத்துறையின் மூலம் திட்டமிடப்பட்டது.

அதன்படி, கடந்த 2021-ம் ஆண்டு லிப்ட் அமைக்கும் பணிகள் துவங்கியது. இந்த பணியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் துவங்கி வைத்தார். அதன்படி, கோயிலின் ராஜ கோபுரம் அருகே ரூ.5.20 கோடி மதிப்பில் லிப்ட் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் பாறைகள் அதிகளவில் இருந்ததால் அவற்றை வெட்டியெடுப்பது உள்ளிட்ட பணிகளுக்கு அனுமதி பெறுவதில் சற்று காலதாமதம் ஏற்பட்டது. இதற்கான அனுமதி தற்போது பெறப்பட்டுள்ள நிலையில், லிப்ட் அமைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. கோயில் வாகன பார்க்கிங் பகுதியில் இருந்து கோயில் வெளிபிரகாரம் அதாவது தேரோடும் பாதைக்கு 20 மீட்டர் உயரம் இருக்கிறது. இதற்கு ஒரே லிப்ட் அமைக்க முடியாது. எனவே, கார் பார்க்கிங் பகுதியில் இருந்து மேலே 10மீ தொலைவு வரை செல்லும் வகையில் இரண்டு லிப்ட் அமைக்கப்பட்டு வருகிறது.

இதில், ஒரே நேரத்தில் 20 பேர் செல்ல முடியும். பின்னர், அங்கிருந்து சற்று தூரம் நடந்து சென்று மற்றொரு லிப்ட் மூலம் பக்தர்கள் ஏறி கோயில் வெளிபிரகாரத்திற்கு செல்லும் வகையில் 2 லிப்ட் அமைக்கப்படுகிறது. இதிலும், 20 பேர் வரை பயணிக்க முடியும். இந்த லிப்ட் அமைக்கும் பணிகள் தற்போது 70 சதவீதம் வரை நிறைவடைந்துள்ளது. பணிகள் முழுவதும் அடுத்த 3 மாதத்தில் முடிக்கப்பட உள்ளது. மேலும், கோயில் வளாகத்தில் ரூ.1.60 கோடி மதிப்பில் கொடிமரம் மண்டபம் கட்டுமான பணிகள் துவங்கி வேகமாக நடந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்