திருமணமான பெண் தனது பெயரை மாற்ற விரும்பினால்; கணவரிடம் தடையில்லா சான்று பெறுவது கட்டாயம்: ஐகோர்ட் வழக்குக்கு மாநிலங்களவையில் அமைச்சர் பதில்

புதுடெல்லி: திருமணமான பெண் தனது பெயரை மாற்ற விரும்பினால் அவரது கணவரிடம் ‘என்ஓசி’ பெறுவது கட்டாயம் என்று மாநிலங்களவையில் அமைச்சர் பதில் அளித்தார். டெல்லி உயர் நீதிமன்றத்தில் 40 வயது பெண் ஒருவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘கடந்த 2014ம் ஆண்டு எனது பெயருக்குப் பின்னால், எனது கணவரின் குடும்பப் பெயரைச் சேர்த்தேன். பின்னர் 2019ல் மீண்டும் எனது பெயரில் மாற்றம் ெசய்தேன். அதில் எனது பெயர் மற்றும் எனது கணவர் மற்றும் அவரது குடும்பப்பெயரை சேர்த்தேன். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், என் கணவரிடம் இருந்து விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தேன். தற்போது விவாகரத்து கோரிய வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது. கல்வி மற்றும் பொருளாதார நோக்கங்களுக்காக எனது பெயருடன் என்னுடைய தந்தை வழி குடும்பப்பெயரை சேர்க்க விரும்புகிறேன். ஆனால், ஒன்றிய அரசின் விதிமுறைகளில் எனது பெயரை மாற்ற வேண்டுமானால், எனது கணவரிடமிருந்து தடையில்லா சான்று (என்ஓசி) பெறுவது அவசியம் என்று கூறப்பட்டிருந்தது.

எனது கணவரிடம் இருந்து விவாகரத்துக்கு முன், எனது பெயரை மாற்ற விரும்புகிறேன். ஒன்றிய அரசின் விதிமுறைகள் பாரபட்சமானது; தன்னிச்சையானது. மேலும் இந்திய அரசியலமைப்பின் 14, 19 மற்றும் 21 பிரிவுகளின் கீழ் அடிப்படை உரிமைகளை மீறுகிறது’ என்று குறிப்பிட்டிருந்தார். இம்மனு மீதான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஒன்றிய அரசின் பதிலை உயர் நீதிமன்றம் கேட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு வரும் ஆகஸ்ட் 7ம் தேதி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில் நாடாளுமன்ற மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சாகேத் கோகலே எழுப்பிய கேள்விக்கு, ஒன்றிய அமைச்சர் டோகன் சாஹு பதிலளிக்கையில், ‘ஒருவரின் பெயரை மாற்றுவது என்பது அவரது அடையாளத்தையும் மாற்றக் கூடியது. அத்தகைய சூழ்நிலையில், பெயரை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டியது அவசியம். திருமணமான பெண் ஒருவர், தனது குடும்பப் பெயரை மாற்ற விரும்பினால், அவர் தனது கணவரிடம் முறையான அனுமதி (தடையில்லா சான்று) பெற வேண்டும். சட்டச் சிக்கல்களைத் தவிர்க்க இந்த நடைமுறை அவசியமாகிறது’ என்று கூறினார்.

 

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது