Tuesday, September 17, 2024
Home » திருமணம் என்னும் மனித மந்திரம்!!

திருமணம் என்னும் மனித மந்திரம்!!

by Porselvi

“திருமணம் என்பது ஆயிரங்காலத்து பயிர் ” என்ற சொலவடை உண்டு. அந்த பயிர் வாடி வதங்காமல் இருக்க அவ்வப்போது பல்வேறு உரங்களை தொடர்ந்து போட்டுக் கொண்டேயிருந்தால் மட்டுமே பயிர் செழித்து வளர வாய்ப்புண்டு. அது நாம் வைத்த பயிராக இருந்தாலும் சரி, தானே முளைத்த பயிராக இருந்தாலும் சரி, ஒரே நியதி தான். உடல்ரீதியான வெளிபுறத்தோற்றங்களால் மட்டுமல்ல தம் எண்ணங்கள் செயல்கள் ஏன் ரசனைகளால் கூட மாறுபட்ட சிந்தனை உடையவர்கள் தானே ஆணும் பெண்ணும். இத்தகைய மாறுபட்ட சிந்தனை உடையவர்கள் சேர்ந்து வாழும் திருமணம் என்கிறபந்தத்தில் பல்வேறு சந்தேகங்களும், சர்ச்சைகளும் சிலசோதனைகளும் ஏற்படுவது இயல்பு தானே!
பெற்றோரால் செய்யப்படும் ஏற்பாட்டு திருமணங்கள் தான் சிறந்தது என்பர் சிலர். தாங்களாகவே பார்த்து பழகி செய்து கொள்ளும் காதல் திருமணம் தான் சிறந்தது என்பார் சிலர். ஆனால் இரண்டுமே ஒன்று தான். “இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று” என்ற கவிஞரின் கூற்று மட்டுமே நிஜம். எல்லா திருமண பந்தங்களுமே” ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்” என மூன்று மாதங்கள் வரை மட்டுமே ஈர்ப்பு இருக்கும் என்பது தானே யதார்த்தம். நாம் திருமணம் செய்தது உலக அழகனோ அல்லது உலக அழகியாகவோ இருந்தாலுமே திருமண பந்தத்திற்கான ஈர்ப்பு என்பது சிலகால மட்டுமே. அதன் பிறகு அந்த திருமண பந்தத்தை தக்கவைக்க பல்வேறு காரண, காரணிகள் அவசியம் தேவை தானே!. சாதாரணமாக திருமண உறவினை தக்க வைக்கவே பல்வேறு சமரசங்கள் தேவைப்படுகிறது. ஏற்பாட்டு திருமணங்களில் பத்து பிரச்னைகள் எனில் காதல் திருமணங்களில் இருபது பிரச்னைகளை சமாளிக்க வேண்டியது வரலாம்.

ஒரே வீட்டில் இருக்கும் நமது அப்பா அம்மா, சகோதர, சகோதரிகளிடமே கருத்து வேறுபாடுகள் தோன்றும்போது வேறு சூழலில் வேறு பழக்கவழக்கங்களோடு வளர்க்கப்பட்ட நமது துணைகளிடம் ஒருமித்த கருத்தினை எதிர்பார்க்க இயலுமா? என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். திருமண பந்தம் என்பதே சமரசங்களின் கூட்டு பலனே தவிர வேறொன்றுமில்லை. திருமணபந்தத்தின் உயிர்நாடியே சகிப்புத்தன்மை மற்றும் விட்டுகொடுத்தலே. அதுவே திருமண உறவை பாதுகாக்கும் கவசம். இவை இரண்டும் இல்லாததாலே இக்கால திருமணங்கள் பல தினமும் நீதிமன்றங்களில் வழக்காடி கொண்டிருக்கிறது. “ஆயிரம் காலமே வாழவே திருமணம்” என்ற கவிஞரின் வரிகளெல்லாம் காற்றில் பறந்து போய்விட்டது காலக்கொடுமையே. திருமணம் என்பது மகிழ்ச்சியில் இணைந்திருந்து, துன்பத்தில் தோள் கொடுத்து, கடமையை சரிசமமாக பங்கிட்டு பொறுப்புகளை உணர்ந்து செயல்பட்டு, சண்டையில் விட்டு கொடுத்து, சமரசத்தை அனுமதித்து, இருபக்கஉறவுகளை மதித்து அனுசரித்து வாழ்தலே இனிய இல்லறமாக இருக்கமுடியும்.

பொதுவாக திருமணத்திற்கு ஜாதக பொருத்தத்தை விட மனப் பொருத்தமே மிகுந்த அவசியம். இருமனங்கள் இணைவதே திருமணம் என்பது அனைவரும் அறிந்ததே. முற்காலத்தில் இணை எந்த தவறு செய்தாலும் திருமணத்தின் புனிதம் காக்க காலம் முழுவதும் பற்பல பிழைகளை பொறுத்தபடியே வாழ்ந்து முடிப்பது எவ்வளவு அறியாமையோ, அதை விட பலமடங்கு அறியாமை தற்போதைய பெருந்தன்மையும் புரிந்துணர்வுமற்ற பொறுமையில்லா நிலையில் உடைந்து போகும் ஃபாஸ்ட்ஃபுட் ரக திருமண பந்தங்கள். பெற்றோர் பார்த்து வைக்கும் ஏற்பாட்டு திருமணங்களாகட்டும் தாமே பார்த்து கொள்ளும் காதல் திருமணமாகட்டும் ஓரளவு பொருத்தமான திருமணங்களே கடைசிவரை நிலைக்கும். காதலிக்க ஏதும் தேவையில்லை தான், ஆனால் திருமணம் என்கிற பெரும்பந்தத்திற்குள் நுழைய நிறைய யதார்த்த தேவைகளை உணர்த்தி போகிறது களநிலவரங்கள். திருமண பந்தத்தில் நுழைய போகிறவர்கள் தோற்றம் , அந்தஸ்து, படிப்பு, பொருளாதார சுழல் என அனைத்திலும் ஓரளவேனும் பொருத்தமான தம்பதியரையே ஓரளவு மனமொத்து வாழவைக்கிறது யதார்த்த சூழல். அப்படியில்லாமல் போலியாக கொண்டாடப்படும் சினிமா ரக காதல்களெல்லாம் பாதியிலே பல் இளித்து போவது தான் ஆகப்பெறும் சோக நிலவரம். திருமண வாழ்விற்கு அன்பு, காதல், பாசம் தான் அடிப்படை என்ற போதிலும் ஒரு திருமணத்தின் வெற்றியில் எல்லாவற்றையும் விட பொருளாதாரம் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதை யாராலும் மறுக்க இயலாது.

தற்போதைய திருமண சூழலில் பெரிதும் சவாலாயிருப்பது திருமண பந்தம் நிலைப்பது என்பதே. இக்கால வளர்ப்பு சூழலில் ஒற்றை குழந்தையாகவோ அல்லது இரு குழந்தைகளாகவே பெரும் செல்லமாக வளர்க்கப்படும் குழந்தைகள் வளர்ந்து ஆளானதும் தன் திருமண வாழ்விலும் அதே பிடிவாதம் அதே சுயநலனுமாக, பெரும் ஈகோக்களுடனும் வலம் வருகிறார்கள். திருமண பந்தத்தின் ஜீவ ஆதாரமே பொறுமையும் விட்டுக்கொடுத்தலுமே. அந்த அடிப்படை குணங்களே ஆட்டங்காணும் போது இக்கால பிள்ளைகளின் திருமண பந்தங்கள் நீடித்து நிலைத்து நிற்பது எவ்வாறு? அளவிற்கதிகமான பொருளாதார பலம், மிதமிஞ்சிய சுதந்திரம் உடைய இன்றைய இளம் தலைமுறையினர் திருமணங்களை வெறுக்கவோ அல்லது திருமணங்களை தள்ளிப்போடவோ மட்டுமே விரும்புகிறார்கள். இக்காலதலைமுறை திருமணத்தினால் வரும் பொறுப்புகளையும், சுமைகளையும் ஏற்க தயங்குகின்றனர். காலத்தினால் செய்யும் விஷயங்களின் பலன் மற்றும் “தனிமரம் தோப்பாகாது” என்ற உண்மையையும் நாம் இக்கால தலைமுறையினருக்கு விளக்கி சொல்லியே தீர வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். திருமணத்தினால் தன் சுய சுதந்திரம் பாதிக்கப்படும் என நினைக்கும் இக்கால தலைமுறையினரை மனமாற்றம் செய்யும் பொறுப்பு நமக்கு பெரும்சவாலே. காலவோட்டத்தில் மாறும் பல்வேறு மாற்றங்களுக்கேற்ப திருமணத்திற்கான சில நியதிகளும் சட்டங்களும் சடங்குகளுமே பல்வேறு மாற்றம் பெற்று தன்னை புதுப்பித்து கொண்டே தான் வருகிறது. பழையன கழிதலும் புதியன புகுதலும் இயல்பு தானே! பால்ய விவாகம் , பலதார மணம் போன்றவை வழக்கொழிந்து தற்போது காலம் தாழ்ந்த திருமணங்களால் எழும் சிக்கலை சமாளிக்கவேண்டிய நிர்பந்தம் நிகழ்கால சமூகத்திற்கு.

“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள் வைக்கப்படும்”
என்கிறார் திருவள்ளுவர் இல்வாழ்க்கை குறித்த அதிகாரத்தில்.. வாழும் நெறியறிந்து இல்வாழ்க்கையில் ஈடுபடுபவர் தெய்வத்துக்கு நிகரானவராக மதிக்கப்படுவார் என்பதே அதன் உட் பொருள். இதை விட சிறப்பாக திருமண பந்தத்தின் சிறப்பை யாராலுமே விளக்கி விட முடியாது என்பதே நிஜம். திருமணம் என்பது வெறும் சடங்கும் சம்பிரதாயங்களும் மட்டுமல்ல! நமது கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியத்தை அடுத்த தலைமுறையினருக்கு சத்தமில்லாமல் கடத்தும் பெரும் நிகழ்வு! இந்த உன்னத பந்தத்தை போற்றி பாதுகாப்போம்!! மகிழ்ந்திருப்போம்!
– தனுஜா ஜெயராமன்

You may also like

Leave a Comment

14 − eleven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi