சிறப்புத் திருமண சட்டத்தின்படி காணொலி மூலம் திருமணம் நடத்தலாம்:” கேரள உயர்நீதிமன்றம் அனுமதி

திருவனந்தபுரம்: சிறப்புத் திருமண சட்டத்தின்படி பதிவாளர் முன்பு நேரில் மணமக்கள் ஆஜராகாமல் காணொலி மூலம் திருமணம் நடத்தலாம் என்று கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறப்புத் திருமண சட்டத்தின் கீழ் திருமணம் செய்பவர்கள் பதிவாளர் அலுவலகத்தில் நேரடியாக ஆஜராக வேண்டும். மணமக்களும், சாட்சிகளும் பதிவாளர் முன்பு நேரடியாக ஆஜரானால் மட்டுமே திருமணத்தை பதிவு செய்ய முடியும். இந்தநிலையில் கடந்த 2021ம் ஆண்டு திருவனந்தபுரத்தை சேர்ந்த தன்யா மார்ட்டின், திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.

அதில், தான் சிறப்புத் திருமண சட்டத்தின் கீழ் திருமணம் செய்ய மனு அளித்து உள்ளேன். ஆனால் கொரோனா ஊரடங்கு சட்டம் காரணமாக வெளிநாட்டில் உள்ள தனது காதலனால் உடனடியாக ஊருக்கு வர முடியாது என்பதால் காணொலி மூலம் திருமணத்தை பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். அதை ஏற்றுக் கொண்ட திருவனந்தபுரம் நீதிமன்றம், தன்யா மார்ட்டினின் திருமணத்தை காணொலி மூலம் நடத்த பதிவாளருக்கு உத்தரவிட்டது. இந்தநிலையில் வேறு சிலரும் இதே போல காணொலி மூலம் திருமணத்திற்கு அனுமதி கோரி கேரளாவில் உள்ள சில நீதிமன்றங்களில் மனு தாக்கல் செய்தனர்.

அதை ஏற்க மறுத்த நீதிமன்றங்கள் இது தொடர்பாக கேரள உயர்நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு மனுக்களை அனுப்பி வைத்தன. இந்த மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் முகமது முஷ்டாக், சோபி தாமஸ் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், சிறப்புத் திருமண சட்டத்தின் கீழ் திருமணங்களை காணொலி மூலம் நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டது. 2000 ஆண்டு தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்படி மின்னணு ஆவணங்களுக்கு சட்டத்தில் அனுமதி உண்டு என்பதால் காணொலி மூலம் திருமணம் நடத்துவதில் தவறில்லை என்று டிவிஷன் பெஞ்ச் தங்களுடைய உத்தரவில் குறிப்பிட்டது. ஆனால் சாட்சிகள் நேரடியாக பதிவாளர் முன் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்களுடைய உத்தரவில் மேலும் குறிப்பிட்டு உள்ளனர்.

Related posts

ஆன்லைன் ட்ரேடிங்கில் பணத்தை இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

மெரினாவில் இன்று நடைபெறும் சாகச நிகழ்ச்சியை ஒட்டி சென்னையில் போக்குவரத்தில் மாற்றம்

திரைப்பட நடன இயக்குநர் ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து