திருமண காம்போவில் கலக்கி வரும் பல்துறை பெண் தொழில் முனைவோர்!

திருமணத்திற்கான மணப்பெண் அலங்காரம் மட்டுமல்ல, அதற்கேற்ற அழகிய புடவைகள், உடைகளுக்கேற்ப நவீன அலங்கார நகைகள், ஆரி ஒர்க் செய்த பிரைடல் ப்ளவுஸ்கள், என காம்போவாகக் கொடுத்து அசத்தி வருகிறார் தஞ்சாவூரைச் சேர்ந்த மகேஸ்வரி ராமலிங்கம். இவர் மணப்பெண்களை ப்ரிட்டி உமன் ஆக மாற்றி விடுவதில் பல வருட அனுபவங்கள் பெற்றவர். இவர் மிகச்சிறுவயதிலேயே பெங்களூரில் ஆரம்பித்த பியூட்டி பார்லர் தொழிலை தற்போது தஞ்சாவூர் வரை பல் தொழிலாக பெருக்கி மிக திறம்பட நடத்திவரும் பல்தொழில் பெண் தொழில்முனைவோர். தஞ்சாவூரில் மணப்பெண் அலங்காரங்கள் மணப்பெண் ப்ளவுஸ்கள் என அசத்தி வரும் இவரின் பல்துறை தொழில் அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டதிலிருந்து…

அழகு நிலைய அனுபவங்கள் குறித்து சொல்லுங்கள்?

நான் சிறுவயதிலேயே தந்தையை இழந்த காரணத்தால் பத்தாவது வரை தஞ்சாவூரில் படித்து முடித்துவிட்டு பின்னர் பெங்களூருக்கு சென்று விட்டேன். அங்கே தான் அழகு நிலைய பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து அழகுக் கலையைக் கற்றுக்கொண்டேன். அப்போது தான் அழகுக் கலை மீதான எனது பெரும் ஆர்வம் துவங்கியது. அதன் பிறகு பெரிய நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் கார்ப்பரேட் அழகு நிலையங்கள் என பணிபுரிந்ததில் அழகுக்கலை குறித்த நிறைய அனுபவங்களும், புரிதல்களும் கிடைத்தது எனலாம். ஏறக்குறைய பதினெட்டு வருடங்கள் பெங்களூரில் அழகுக்கலை துறையில் மட்டும் பணிபுரிந்திருக்கிறேன். அதன் பிறகு திருமணமாகி தஞ்சாவூர் வந்த பிறகு சொந்தமாக அழகுக்கலை நிலையத்தை துவக்கி தற்போது வரை இரண்டு பார்லர்களை நடத்தி வருகிறேன். இத்துறையில் மொத்தமாக தற்போது இருபத்தி ஆறு வருட அனுபவங்கள் எனக்கு உண்டு. அதில் விதவிதமான ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களுடன் பணிபுரிந்த அனுபவங்களும் எனக்கு இருக்கிறது.

காம்போ ஆபர்கள் ஐடியா எப்படி கிடைத்தது?

அழகு நிலையத்தை நடத்தியபோது வாடிக்கையாளர்களின் பல்வேறு தேவைகளை ஒரே இடத்தில் பூர்த்தி செய்தால் என்ன என்கிற ஐடியா தோன்றியது. அதன் பிறகு வாடிக்கையாளர்களுக்கு தேவையான புடவைகளை வாங்கி விற்பனை செய்ய பொட்டிக் ஒன்றை துவங்கினேன். அதன் மூலம் தேவையான உடைகளை, எங்களிடம் வரும் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்ய துவங்கியதில் எங்களுக்கு நிறைய புதிய வாடிக்கையாளர்கள் கிடைத்தனர். அதேபோன்று மணப்பெண்களை அலங்கரிக்க தேவைப்படும் அலங்கார நகைகளையும் இங்கேயே விற்பனை செய்யலாமே என்கிற எண்ணமும் தோன்றியது அதன் காரணமாக செயற்கை நகை அக்ஸஸரிஸ்களுக்கான கடையை தனியாக வைத்தேன். அந்த கடைகளிலும் தற்போது நன்றாக வியாபாரம் நடைபெற்று வருகிறது. இந்த தொழில்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்பதால் எங்களால் இதை எளிதாக செய்யமுடிகிறது.

உங்கள் வாடிக்கையாளர்கள் குறித்து …

எங்களது வாடிக்கையாளர்கள் பல வழிகளிலும் கிடைக்கிறார்கள். பொதுவாக நேரிடையாக வந்து பயனடையும் வாடிக்கையாளர்களின் வாய்மொழியான நல்விளம்பரங்களால் எங்கள் தொழில் நன்றாக விரிவடைகிறது என்பது தான் உண்மை. எங்களால் நேரிடையாக பயனடைந்தவர்கள் கொடுக்கும் விளம்பரங்கள் பெருமளவு நற்பலனை தருபவை. மேலும் அதிக வாடிக்கையாளர்களை அது பெற்று தரும். அழகுக்கலையை பொறுத்தவரை பார்லருக்கு வருபவர்களை நன்றாக கவனித்தாலே போதும். பிரைடல் மேக்கப்களுக்கு வெளியூர்களுக்குக் கூட சென்று செய்து தருகிறோம். அவர்கள் சொன்ன நாள், நேரம் போன்றவற்றில் கவனம் செலுத்தினாலே போதும். நல்ல வாடிக்கையாளர்களை பெற்று விட முடியும். மணப்பெண் அலங்காரம் என்பது ஒரு அழகிய கலை. அழகான அலங்காரம் பலரை சென்றடையும் விளம்பர உத்திகளில் ஒன்றுதான்.

உங்கள் பொட்டிக் குறித்து…

மணப் பெண்ணுக்கான அலங்காரம் செய்யும் போது மணப் பெண்ணுக்கான பிரைடல் ப்ளவுஸ்களும் நாமே தைத்து தந்தால் என்ன என்று தோன்றியதன் விளைவே பொட்டிக் ஆரம்பித்தற்கான காரணம். அங்கே புடவைகள் விற்பனையோடு அதற்கான மேட்சிங் பிளவுஸ் களையும் நியாயமான விலையில் தைத்து தருகிறோம். மணப்பெண் ப்ளவுஸ்களுக்கென ஆரி ஒர்க், கற்கள், போன்ற வேலைப்பாடுகள் நிறைந்த பிளவுஸ்களை தைத்து தருகிறோம். அதனுடன் தற்போது அனைத்து விதமான வாடிக்கையாளர்களுக்கும் துணிகளை தைத்தும் தருகிறோம். அதற்கான துணிகளும் எங்களிடம் கிடைக்கும். எங்களின் இத்தகைய காம்போ சேவைகள் வாடிக்கையாளர்களுக்கும் பெரிதும் வசதியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஒரே குடையின் கீழ் அனைத்தும் கிடைப்பது பலருக்குமே வசதிதானே. திருமண சமயத்தில் நேரவிரயங்கள் பெருமளவில் தவிர்க்கப்படுவதோடு பணமும் மிச்சப்படுத்தலாம்.

பயிற்சி வகுப்புகள் எடுக்கிறீர்களா?

ஆமாம். அழகுக்கலை பயிற்சி வகுப்பு களை எடுத்து வருகிறேன். நிறைய பேர் என்னிடம் பயிற்சி எடுத்துக்கொண்டு தற்போது அழகு நிலையம் நடத்தியும் வருகிறார்கள். அதே போன்று மணப்பெண் அலங்காரம் செய்வதற்கான பயிற்சி வகுப்புகளையும் எடுத்துவருகிறேன். முன்பு பிரைடல் ப்ளவுஸ் தைப்பதற்கான பயிற்சி வகுப்புகளையும் நடத்தி வந்தேன். தற்போது அதற்கான நேரம் மிகவும் குறைவு என்பதால் என்னால் அதனை தொடர இயலவில்லை. ஆன்லைன் வியாபாரங்கள் குறித்து… இன்றைய நவீன யுகத்தில் நேரமின்மை என்பது பரவலாகி வருகிறது. பலரும் ஆன்லைனில் பொருட்கள் வாங்க விரும்புவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம் எனலாம். இதன் மூலம் அழகிய புடவைகள், சுடிதார் வகைகள், கலம்காரி ப்ளவுஸ்கள், பிரைடல் ப்ளவுஸ்கள், அக்ஸஸரிகள் தற்போது நல்ல வியாபாரம் ஆகிவருகிறது. பலர் அந்த போட்டோக்களை பார்த்து தங்களுக்கு தேவையானவற்றை சுலபமாக தேர்வு செய்து வாங்கிவிடுகின்றனர். நான் இன்ஸ்டாகிராம் மூலமும் இதனை செய்துவருகிறேன். நிறைய வாட்சப் குரூப்களும் என்னிடம் உண்டு. அதில் நிறைய வாடிக்கையாளர்கள் உள்ளனர். அழகுக்கலை சேவைகளுக்கும், மணப்பெண் அலங்காரத்திற்கும் என நிறைய பேர் இன்ஸ்டாகிராம் பார்த்து வருகிறார்கள். இனி வரும் காலங்களில் ஆன்லைன் சேவைகள் தான் அதிக கவனம் பெறும் என்று தோன்றுகிறது.

எதிர்காலத் திட்டங்கள் குறித்து..

தற்போது இரண்டு பார்லர்களை நடத்தி வருகிறேன். அக்ஸஸரிகளுக்கென ஒரு கடையும் இருக்கிறது. பொட்டிக், பிரைடல் ப்ளவுஸ், ஆன்லைன் பிஸினஸ் என எனது ஷெட்யூல் பிஸியாகத் தான் போய்க் கொண்டிருக்கிறது. தொழில் அடுத்த கட்டத்தினை எட்டி இருந்தாலுமே, இன்னும் தொழிலில் நிறைய சாதிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. சென்னை போன்ற பெருநகரங்களில் எனது வியாபார எல்லையை விரிவுபடுத்தி புதிய கடைகளை துவங்க வேண்டும் என்கிற திட்டங்கள் உள்ளன. அதற்கான முயற்சிகளையும் செய்துகொண்டு தான் வருகிறேன். வாடிக்கையாளர்கள் திருப்தியே இத்தொழிலுக்கான ஆகப்பெரும் மூலதனம் எனலாம்.

உங்கள் குடும்ப ஒத்துழைப்பு எப்படி இருக்கிறது?

எனது கணவர் நகைக் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். என் மகள் பள்ளியில் படித்துவருகிறார். என் தொழிலை நான் இவ்வளவு தூரம் எடுத்துச் செல்ல என் செல்லமகளும் ஒரு முக்கிய காரணம். என் குடும்பத்தின் ஒத்துழைப்பில்லாமல் என்னால் இதை சாதித்து இருக்கமுடியாது. பெண்கள் துணிந்து சொந்த தொழிலில் இறங்கினால் நிறைய சாதிக்க முடியும். பெண்கள் தங்கள் கம்பர்ட்ஜோனிலிருந்து வெளியே வந்து ஏதோ ஒரு துறையில் சாதிக்க முயலுங்கள் என்னால் முடிந்தது பலராலும் முடியும் என்கிறார் பல்துறை பெண் தொழில்முனைவோர் மகேஸ்வரி இராமலிங்கம்.
– தனுஜா ஜெயராமன்

Related posts

திண்டிவனம் அருகே கிரிக்கெட் விளையாடியபோது மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு

ஆந்திராவில் இருந்து காரில் குட்கா பொருட்களை கடத்தி வந்த 3 பேர் கைது

மதுரை திருமங்கலத்தில் கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை முயற்சி