திருமண பந்தமும் ஜோதிடமும்

காலம் காலமாக திருமணங்களை, இயற்கை நடைபெற வைத்துக் கொண்டேதான் இருக்கின்றன. திருமணத்திற்காக ஜாதகங்களை எடுத்துக் கொண்டு அலையும் பெற்றோர்களையும், அதனால் ஏற்படும் அல்லல்களையும் பார்க்கும் பொழுது, வருத்தமாகத்தான் இருக்கிறது. ஜோதிடம் என்பது உண்மைதான். அதுவே எல்லாவிதமான திருமணங்களையும் நடத்தி வைக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஜாதகம் பார்த்துதான் கட்டாயம் திருமணம் நல்லபடியாக அமையும் என்பதில் எந்த உத்தரவாதமும் இல்லை. அதுபோலவே, ஜோதிடத்தில் சொல்லப்படும் குறைகளும் நிறைகளும் உண்மையே. இதை நாம் எப்படி புரிந்துகொள்வது என்ற குழப்பம் ஏற்படலாம். அதாவது, ஒருவன் மிகவும் கொடிய நோயுடன் உலகில் ஐம்பது ஆண்டு காலம் வாழ்கிறான். எந்த நோயும் இல்லாமல் ஒருவன் ஐம்பது ஆண்டு காலம் வாழ்கிறான். இருவரும் இந்த பூமியில்தான் வாழ்கின்றனர். முதலாமவன், அந்த நோயோடுதான் வாழவேண்டும் என்ற மனநிலையில் தன்னை தயார்படுத்திக் கொள்கிறான். இரண்டாமவன், அந்த நோய் இல்லாமலும் வருத்தம், சுகம், துக்கம் ஆகியவற்றோடு வாழ்கிறான். இதில், எல்லாம் மனநிலையும் உங்களுக்கு கிடைக்கும் பாக்கியங்கள்தான் முடிவு செய்கின்றன.

திருமண முறைகள் பலவற்றை காண்போம்

திருமணமானது கந்தர்வ திருமணம், சுயம்வரத் திருமணம், உறவு முறைத் திருமணம், பூ பார்த்து செய்யும் திருமணம், கலப்புத் திருமணம், பெயர் பொருத்தம் திருமணம் மற்றும் மரபுத் திருமணம் (ஜோதிடம் பார்த்து இரு வீட்டார் இணைந்து) என இதுமட்டுமில்லாது வேறு திருமணங்களும் உள்ளன.

கந்தர்வ திருமணம்

ஒருவரை ஒருவர் பார்த்தவுடன் காதல் வயப்பட்டு இருவரும் இணைந்து திருமணம் செய்து கொள்ளுதல். இது பண்டைய காலத்தில் நம் நாட்டிலும் இருந்தது. இலக்கியங்களிலும் இது போன்ற திருமணம் நடைபெற்றதை சுட்டிக் காட்டுகின்றன. இதை இவர்கள் முடிவு செய்ததாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இயற்கைதான் முடிவு செய்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். வியாழனோடு அசுபகிரகங்கள் இணைவதாலும், சாயா கிரகங்களின் நிலைப்பாட்டினாலும், இந்த கந்தர்வ திருமணம் ஏற்படுகிறது.

சுயம்வரம்

அக்காலத்தில், ராஜாக்கள் தங்கள் வீட்டுப் பெண்ணிற்கு தகுதியுடைய ஆண்களை வரவழைத்து தன் மகளை உன் விருப்பத்தின் பேரில் யாரை திருமணம் செய்து கொள்ளலாம் என நிகழ்த்தும் ஒரு திருமண முறையாகும். இக்காலத்தில் நடைபெறுவதாக தெரியவில்லை. கிட்டத்தட்ட, தான் விரும்பும் ஒருவரை தானே தேர்ந்தெடுத்து திருமணம் செய்து கொள்ளும் அமைப்பாகும். ஏழாம் பாவத்திற்குரிய தொடர்பு ஐந்தாமிடம் (5ம்), ஒன்பதாம் (9ம்) இடங்களில் தொடர்பு ஏற்படுவதால் நிகழ்கிறது.

உறவு முறைத் திருமணம்

ஒரு குடும்பத்தில் நெருங்கிய உறவுகளோடு திருமணம் நிகழ்வது. அதாவது, மணமகன், அத்தை மகளை திருமணம் செய்து கொள்வது. மணமகள், மாமன் மகனை திருமணம் செய்து கொள்வதும் பழக்கமாக நம் சமூகத்தில் உள்ளது. பல காலம் முதல் தொட்டு இந்த வகையிலான திருமணங்கள் நடந்ததும் உண்டு. அவர்கள் சுகமாகவும் நலமாகவும் வாழ்ந்ததும் உண்டு என்பதை நாம் மறக்க வேண்டாம். பத்து குழந்தைகள் பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்கியிருக்கிறார்கள். இன்று ஒரு உறவை தவிர்ப்பதற்கு சொல்லும் காரணங்கள் ஒரு குடும்பத்தில் திருமணம் செய்தால் பிரச்னை வரும் என்பதெல்லாம் இக்கால சிந்தனைகள். ஐந்தாம், ஆறாம் பாவாதிபதிகள் ஏழாம் (7ம்) பாவகம் மற்றும் எட்டாம் (8ம்) பாவத்தோடு தொடர்பு ஏற்படுவதால் அமையும் திருமணமாகும்.

பூ பார்த்து செய்யும் திருமணம்

இந்த மணமகனை இவர்களுக்கு திருமணம் செய்யலாமா? என்பதை குலதெய்வத்தின் முன்போ அல்லது இஷ்டத் தெய்வத்தின் முன்போ இரண்டு நிற பூக்களை வைத்துவிட்டு, இந்த வண்ணப்பூ வந்தால் திருமணம் செய்யலாம் என்பதை முடிவு செய்து கொண்டு, சின்னச் சிறிய குழந்தைகளை வைத்து அந்தப் பூவை எடுத்து முடிவு செய்து கொள்ளும் ஒருமுறையாகும்.

கலப்புத் திருமணம்

ஒருவருக்கு ஒருவர் மனரீதியில் பிடித்துப் போகவே ஒரு சமூகத்தில் இருந்து மற்ற சமூகத்திற்கு மாறி தாங்களாகவே இரு பெற்றோர்களிடம் கலந்து முடிவு எடுக்கும் திருமணமாகும். இதிலும் சிலர் ஜோதிடம் பார்க்க முற்படுவர். அவர்களுக்கு குழப்பம்தான் மிஞ்சும். மனமும் மனமும் பிடித்துப் போகவே வரும் நல்லது கெட்டவைகளை அவர்களே சரி செய்து கொள்வர். ஏழாம், எட்டாம் அதிபதி சிக்கலை ஏற்படுத்துவதாலும், வியாழன் அசுபத் தன்மையோடு சாயா கிரகத் தொடர்பு ஏற்படுவதால், இந்த கலப்புத் திருமணம் அமைகிறது.

பெயர் பொருத்தம் பார்க்கும் திருமணம்

இந்தப் பெயருக்கும் இந்தப் பெயர் சரியாக உள்ளது என பொருந்திப் பார்த்தும் நியூமராலஜி முறையில் பொருத்தம் பார்த்தும் சரியாக உள்ளது என சில திருமணங்கள் நடைபெறுவதும் இயற்கைதான். பெயருக்கான கிரகங்கள் இரண்டும் ஒன்றுபோலவே இருந்தால், இருவருக்கும் ஒரே சிந்தனைகளை உருவாக்கும்.

மரபுத் திருமணம்

மணமகள் வீட்டாரும், மணமகன் வீட்டாரும் இணைந்து இதுதான் மணமகள் இதுதான் மணமகன் என ஜோதிடம் பார்த்து எல்லாம் பொருத்தம் மற்றும் ேதாஷம் நிவர்த்திகளுக்கேற்ப திருமணம் செய்யும் முறை மரபு வழித் திருமணம். இவை எப்படி பார்த்து செய்தாலும், எல்லாவற்றையும் உங்களின் சுய ஜாதகம்தான் முடிவு செய்கிறது. இதில் எது சிறப்பு என்று எதுவும் இல்லை. இதில் எந்த திருமணம் உங்களுக்கு என்பதை ஜோதிடம்தான் (இயற்கைதான்) முடிவு செய்யுமே தவிர, நாம் இல்லை.

Related posts

அருளும் பொருளும் வாரி வழங்கும் ஆடி மாத திருவிழாக்கள்

ராஜகோபுர மனசு

அறச்சலூர் அறச்சாலை அம்மன்