சந்தையில் கலப்படம் ஆதிக்கம் செலுத்துவதால் டெல்டாவில் கசந்துபோன அச்சு வெல்ல தயாரிப்பு பணி: விலை இல்லாமல் திண்டாடும் விவசாயிகள்; ஆட்கள் பற்றாக்குறையால் அவதி

தஞ்சாவூர்: சந்தையில் கலப்பட வெல்லம் அதிகம் விற்பனையாவதால் டெல்டா மாவட்டத்தில் ஆரோக்கியமான அச்சுவெல்லத்திற்கு மவுசு குறைந்து வருகிறது. ஆட்கள் பற்றாக்குறை, போதிய விலை இல்லாததால் விவசாயிகள் பல்வேறு நெருக்கடியுடன் தொழிலை மேற்கொண்டு வருகின்றனர். காவிரி டெல்டா பாசன பகுதிகளான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் நெல்லுக்கு அடுத்தபடியாக கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. இக்கரும்பை சாகுபடி செய்ய அரசு மற்றும் பொதுத்துறை, தனியார் துறை சர்க்கரை ஆலைகள் விவசாயிகளை ஊக்குவித்து வருகின்றன.

இந்நிலையில் பொங்கல் பண்டிகையின்போது முக்கிய தேவையாக இருக்கும் நாட்டு வெல்லம் தயாரிக்கும் பணியில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தை பொறுத்தவரை வீரமாங்குடி, செம்மங்குடி, பட்டுக்குடி, புத்தூர், மணலூர், உள்ளிக்கடை என ஏராளமான கிராமங்களில் நாட்டு வெல்லம் தயாரிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். அதுவும் பொங்கல் நெருங்கி வரும்போது இப்பகுதிகளில் வெல்லம் தயாரிக்கும் பணி சூடு பிடித்து விடும்.

ஒரு காலத்தில் ஒரு கிராமத்திற்கு 50 வெல்லம் தயாரிக்கும் ஆலைகள் செயல்பட்டு வந்த நிலையில் தற்போது ஒன்று, இரண்டு ஆலைகள் மட்டுமே பெயரளவுக்கு செயல்பட்டு வருகிறது. ஆட்கள் பற்றாக்குறை, போதிய விலை இல்லாதது உள்ளிட்ட பல சிக்கல்களுடன் இந்த தொழிலை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். தற்போது கலப்பட வெல்லம் சந்தையில் அதிகம் விற்பனையாவதால் தரமான வெல்லம் தயாரிக்கும் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. இதனால் தொழில் கடுமையாக நசிந்து போன நிலையில் அரசின் உதவியை எதிர்பார்த்து காத்து கிடக்கின்றனர் இத்தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்.

இதுகுறித்து உள்ளிக்கடை பகுதியை சேர்ந்த விவசாயி உதயகுமார் கூறியதாவது: முன்பெல்லாம் ஒரு நாளைக்கு ஐந்து முதல் ஆறு டன் கரும்பு வெட்டுவோம். ஒரு ஊருக்கு 50 வெல்லம் தயாரிக்கும் ஆலை இருந்துச்சு. தற்போது உள்ளிகடையில் மூன்று ஆலைகளே உள்ளன. அதுவும் கடும் போராட்டத்துடன் இயங்கிக் கொண்டு உள்ளது. இதற்கு காரணம் தரமான வெல்லத்திற்கு போதிய விலை கிடைக்கவில்லை. பல இடங்களில் வெள்ளை சீனியை வாங்கி அதனுடன் கரும்பு சாரையும், கெமிக்கலையும் சேர்த்து தயாரித்து விற்பனை செய்கின்றனர். இதனால் தரமான சுத்தமான வெல்லம் தயாரிக்கும் எங்களது தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த தொழிலில் ஈடுபட்டு வந்த பலர் வேறு வேலைகளுக்கு சென்றுள்ளனர். இதனால் ஆட்கள் பற்றாக்குறையும் நிலவுகிறது. முதியவர்களை வைத்து வேலை செய்யும் நிலமை ஏற்பட்டுள்ளது. தற்போது ஒரு சிப்பம் (30 கிலோ) ரூ.1400 வரை விற்பனை செய்கிறோம். அதை இடைத்தரகர்கள் வாங்கி கொள்ளை லாபம் வைத்து கடைகளுக்கு விற்பனை செய்கின்றனர். சில்லறை வியாபாரிகள் அதை இன்னும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்கின்றனர். ஆனால் வெல்லம் தயாரிக்கும் எங்களுக்கு போதிய விலை கிடைக்கவில்லை.

எங்களுக்கு கிலோவிற்கு ரூ.70 கிடைத்தால் நிலையை சமாளிக்கலாம். எனவே நாட்டு வெல்லம் தயாரிப்பை ஊக்குவிக்க அரசே வெல்லத்தையும் கொள்முதல் செய்ய வேண்டும். ரேஷன் கடைகளில் சர்க்கரைக்கு பதில் நாட்டு வெல்லத்தை விற்பனை செய்ய வேண்டும். இதனால் மக்களின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுவதுடன் நலிவுற்ற விவசாயிகளின் வாழ்வாதாரமும் உயரும். வெல்லம் தயாரிக்க மானிய விலையில் இயந்திரங்கள் வழங்க வேண்டும். இதை நிறைவேற்றினால் தற்போது கசப்புடன் உள்ள எங்களது வாழ்க்கை இனிப்பாக மாறும் என்றார்.

Related posts

கேரளாவில் நிபா வைரஸ் பரவல்: குமரி எல்லையில் மருத்துவ குழு தீவிர சோதனை

அமீர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை; ஜாபர் சாதிக் வழக்கில் திடீர் திருப்பம்: அமலாக்கத்துறை அதிரடி

ராமன்பிள்ளை தெருவில் பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?