மார்க் அடேர் வேகத்தில் சரிந்தது ஆப்கானிஸ்தான்

அபுதாபி: அயர்லாந்து அணியுடனான டெஸ்டில் (ஒரே போட்டி), ஆப்கானிஸ்தான் முதல் இன்னிங்சில் 155 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. டாலரன்ஸ் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில், டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட் செய்தது. அயர்லாந்து வீரர்களின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய ஆப்கான் 54.5 ஓவரில் 155 ரன் மட்டுமே சேர்த்து அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்தது. தொடக்க வீரர் இப்ராகிம் ஸத்ரன் அதிகபட்சமாக 53 ரன் விளாசினார். கேப்டன் ஹஷ்மதுல்லா 20 ரன்னில் வெளியேற, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் பெவிலியன் திரும்பினர்.

பொறுப்புடன் விளையாடிய கரிம் ஜனத் 41 ரன் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அயர்லாந்து பந்துவீச்சில் மார்க் அடேர் 16.5 ஓவரில் 5 மெய்டன் உள்பட 39 ரன் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். கிரெய்க் யங், கர்டிஸ் கேம்பர் தலா 2, மெக்கார்தி 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய அயர்லாந்து, முதல் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 100 ரன் எடுத்துள்ளது. கேம்பர் 49, பீட்டர் மூர் 12, கேப்டன் பால்பிர்னி 2, வோயர்கோம் 1 ரன்னில் வெளியேறினர்.

ஹாரி டெக்டர் 32 ரன், பால் ஸ்டர்லிங் 2 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இன்று 2வது நாள் ஆட்டம் நடக்கிறது.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி