ஒன்றியத்தின் ஓரவஞ்சனை

ஒன்றியத்தில் மோடி தலைமையிலான பாஜ அரசு, ஆட்சிக்கு வந்த நாளில் இருந்தே ‘நானே ராஜா, நானே மந்திரி’ என சர்வாதிகாரம் தலைவிரித்தாடுகிறது. பல்வேறு மதம், இனம், மொழிகள் இருப்பினும் ‘வேற்றுமையில் ஒற்றுமை’ காணும் இந்தியாவின் பன்முகத்தன்மை சிதைக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் பாஜ தவிர மற்ற தேசிய கட்சிகளை எல்லாம் உடைத்து, சின்னாபின்னமாக்கி, ‘ஒரே நாடு, ஒரே கட்சி’ என்கிற கோஷத்தையும் பாஜ முன்நிறுத்தி வருகிறது.  பாஜ ஆளும் மாநிலங்களுக்கு அனைத்து திட்டங்களையும் முறையாக கொண்டு சேர்ப்பதோடு, நிதியும் ஆண்டுதோறும் போதிய அளவு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அதேவேளையில், எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு நிதியும் தருவதில்லை.

ஒன்றிய அரசின் திட்டங்களையும் ஒழுங்காக கொண்டு போய் சேர்ப்பதில்லை. இந்தியாவின் பிரதான மாநிலங்களிடம் இருந்து ஜிஎஸ்டி வரி விகிதங்களை மட்டும் முறையாக கணக்கிட்டு வசூலித்துக் கொள்ளும் ஒன்றிய அரசு, அவற்றை மாநிலங்களின் வளர்ச்சிக்கு திருப்பி தருவதில்லை. அதிலும் எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு எப்போதாவது சிறுதொகையை தந்துவிட்டு பீற்றிக் கொள்கிறது. தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் வெள்ள பேரிடர் நிகழ்ந்தபோது கூட, ஒன்றிய அரசு நீலிக்கண்ணீர் வடித்துவிட்டு, உரிய தொகையை தராமல் ஒதுங்கிக் கொண்டது.

தமிழ்நாடு போலவே ஒன்றிய அரசின் அழிச்சாட்டியங்களுக்கு இன்றளவும் அடிபணியாமல், துணிந்து எதிர்த்து நிற்கும் மேற்கு வங்க மம்தா அரசுக்கு, பாஜ கொடுத்து வரும் நெருக்கடிகள் ஏராளம். அம்மாநிலத்தில் சமூக நல திட்டங்களுக்கு ஒன்றிய அரசு நிதியே வழங்குவதில்லை. வேறுவழியின்றி இப்போது முதல்வர் மம்தா பானர்ஜியே ஒன்றிய அரசுக்கு எதிரான போராட்டத்தில் குதித்து விட்டார். கர்நாடகாவில் கடந்த 5 ஆண்டுகளில் ஒன்றிய அரசின் செயல்பாடுகளால் தங்களுக்கு ரூ.62 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கர்நாடகா காங்கிரஸ் கூறி வருகிறது.

இதையடுத்து கர்நாடகா காங்கிரசார் முதல்வர் சித்தராமையா தலைமையில் வரும் 7ம் தேதி டெல்லியில் போராட்டம் நடத்த உள்ளனர். மறுநாள் 8ம் தேதி கேரளாவுக்கு தேவையான நிதியை ஒதுக்காமல் புறக்கணிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து கேரள அமைச்சர்களும் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் போராட்டம் நடத்துகின்றனர். கேரளாவின் வளர்ச்சி திட்டங்களுக்கு ஒன்றிய அரசு போடும் முட்டுக்கட்டைகள் ஏராளம். அதே நாளில் திமுக எம்.பி.க்களும் டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் திரண்டு கருப்புசட்டை அணிந்து ஒன்றிய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.

தமிழ்நாட்டுக்கு புயல் வெள்ள நிவாரண நிதியுதவி, வளர்ச்சி திட்டங்களுக்கு உரிய நிதியை ஒதுக்கீடு செய்யாத ஒன்றிய அரசின் ஓரவஞ்சனையை கண்டித்து இப் போராட்டம் நடைபெறுகிறது. ஒன்றிய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் கூட பாஜ ஆளும் மாநிலங்களுக்கு நிதி தாராளமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு பூசாரி தீர்த்தம் தெளிப்பது போல் பெயரளவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதனால் எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்கள், இந்தியாவிற்குள்ளே மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்தப்படுகின்றன. பாஜவை பொறுத்தவரை இப்போது எந்தவொரு மாநிலத்தையும் தாங்கள் தான் ஆள வேண்டும் அல்லது தங்களின் பிரதிநிதியாக ஆளுநர்கள் அம்மாநிலத்தை ஆள வேண்டும் என்பது சொல்லப்படாத விதியாக வைத்து செயல்படுகிறது. அணைய போகிற விளக்குகள் பிரகாசமாக எரிவது போலத்தான் இது. வாக்குகளின் வழியாக மக்கள் இதற்கு முடிவு கட்டுவார்கள்.

Related posts

ஹத்ராஸில் பாதிக்கப்பட்டோருக்கு ராகுல் ஆறுதல்

பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல் – தொழிலாளர் கட்சி முன்னிலை

விக்கிரவாண்டியில் திமுகவை வெற்றிபெற செய்யுங்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்