கோலங்களில் பூசணிப் பூக்கள்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

அசனி என்றால் இடி. இடியைக் கண்டு எல்லோரும் அஞ்சுவர். மிகுந்த பயம் கொண்டு நடுநடுங்கி நிற்பவரை `இடியுண்ட நாகம் போல் இருக்கிறான்’ என்று இலக்கியங்கள் கூறுகின்றன. இடிகள் மண் மேல் வந்து மலர்களாகத் தோன்றியதை நாட்டுப்புறக் கதைகள் கூறுகின்றன. பூவாக வந்த அசனியே (இடியே) பூசணி என்று அழைக்கப்படுகிறது. பூசணிப்பூக்கள் செந்நிறம் கலந்த மஞ்சள் மலர்களாகவும், மஞ்சள்நிற மலர்களாகவும், பூக்கின்றன. பூசணி பூக்கும் கொடிகள், பூசணிக் கொடிகள் என்றும், அதன் காய்கள் பூசணிக் காய்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. `நாட்டுப்பூசணி’ என்றும் `கல்யாண பூசணி’ என்றும் பூசணிகளில் பலவகைகள் இருக்கின்றன.

பூசணிப் பூக்களை மார்கழி மாதத்தில் வீட்டுவாசலில் கோலங்களின் மீது வைத்து அலங்கரிக்கின்றனர். அதிகாலையில், சாணம் தெளித்துப் பெருக்கி, அதன்மீது வண்ணப் பொடிகளைக்கொண்டு கோலமிடுவர். கோலத்தின் மீது ஆங்காங்கு சாண உருண்டைகளை வைத்து, அதன்மீது பூசணிப் பூக்களைப் பொருத்தி வைக்கின்றனர். சாணத்தின் மீது இடி விழுந்தால் அந்தச் சாணம் பொன்னாகும் என்பது நம்பிக்கையாகும். சாணத்தின் மீது இடியின் மாற்று வடிவமான பூசணிப் பூக்களை வைப்பதால் வீட்டில் தங்கம் பெருகும் என்பதும் நம்பிக்கையாகும்.

கல்யாணப் பூசணிக்காய்களை, பலிப் பொருளாகத் தெய்வங்களுக்கு அளிக்கின்றனர். பூசணிப்பூக்கள் வைத்த சாண உருண்டைகளைப் பிற்பகலில் எடுத்துப் பூவோடு சேர்த்து வறட்டியாகத் தட்டி காய விடுகின்றனர். பொங்கலின் போது அந்த வறட்டிகளைக் கொண்டே பொங்கல் அடுப்பு எரிக்கப்படுகிறது.

பூசணிப்பூக்களைக் கோலத்தின்மீது வைப்பது, திருமகளை வரவேற்கும் நிகழ்ச்சியாகவும், சகல செல்வங்களையும் தரும் இந்திரனை வரவேற்பதாகவும் நம்பப்படுகிறது. இடி என்பது, மழைமேகத்தின் கர்ஜனை. மழைதரும் மேகங்களை தனது வாகனமாகக் கொண்டுள்ள இந்திரன், இடிகளை ஆயுதங்களாகக் கொண்டிருக்கின்றான்.

மார்கழி மாதம் இந்திரனுக்குரிய மாதமாகும். மார்கழியின் இறுதிநாளைப் போகிப்பண்டிகை என்று கொண்டாடுகின்றனர். போகி என்பது சுவர்க்கத்தில் சுகபோகங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் இந்திரனுக்குச் சிறப்புப் பெயராகும். இல்லங்கள் தோறும் இன்பம் நிலைத்திருக்கும்படி செய்ய இந்திரனை அழைக்கும் குறியீடாகவே இடியின் மறு வடிவமான பூசணிப் பூக்களை வாசலில் வைத்து அவனை வரவேற்கின்றனர்.

தொகுப்பு: ராதாகிருஷ்ணன்

Related posts

குறை தீர்க்கும் பெருமாள்கள்

வள்ளலார் ஆற்றிய அரும்பணிகள்

ஆத்ம தரிசனம் என்றால் என்ன?