அணிவகுப்புக்கு அனுமதி அளிக்காத காவல்துறைக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: அவசர வழக்காக விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு

சென்னை: தங்களுடைய அணிவகுப்புக்கு அனுமதி அளிக்காத காவல்துறைக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரபட்டுள்ளது. இந்த வழக்கை இன்றே அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. ஊர்வலம் நடத்த அனுமதி கோரிய அக்டோபர் 22, 29 ஆகிய தேதிகள் முடிவடைந்துவிட்டதால் அவசர வழக்காக விசாரிக்க அவசியம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

நாட்டின் 76-வது சுதந்திர தினம் மற்றும் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு அக்டோபர் 22 மற்றும் 29-ம் தேதிகளில் தமிழகத்தில் 33 இடங்களில் அணிவகுப்பு நடத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யபட்டிருந்தன. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி ஜெயசந்திரன், இந்த அணிவகுப்பு ஊர்வலத்திற்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கும்படி காவல்துறைக்கு கடந்த அக்டோபர் 16-ம் தேதி உத்தரவு பிறபித்திருந்தார்.

இந்த நிலையில், நீதிமன்றம் உத்தரவு பிறபித்தும் அனுமதி வழங்கவில்லை என்று காவல்துறைக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்துள்ளதாகவும், அந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்து கொள்ள வேண்டும் என நீதிபதி ஜெயசந்திரன் முன்பு ஆஜரான வழக்கறிஞர் முறையீடு செய்தார். இந்த முறையீட்டை ஏற்க மறுத்த நீதிபதி ஏற்கனவே அணிவகுப்பு நடத்த அனுமதி கோரிய தேதிகள் முடிவடைந்த நிலையில் அவசர வழக்காக விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், மனு தாக்கல் நடைமுறைகள் முடிந்த பிறகு இந்த வழக்குகள் விசாரணைக்கு எடுத்துகொள்ளபடும் என்றும் தெரிவித்துள்ளார்.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி