மகிழ்ச்சி தரும் மரவள்ளி சாகுபடி!

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தாலுகாவில் இருக்கிறது பெரிய காலூர் கிராமம். நெல், வேர்க்கடலை போன்ற பயிர்களைத் தொடர்ந்து வேறு சில தோட்டப்பயிர்களும் இங்கு அதிகளவில் பயிரிடப்படுகிறது. அந்த வகையில் நெல் சாகுபடியைத் தொடர்ந்து கூடுதல் வருமானத்திற்காக மரவள்ளியைப் பயிரிட்டு வருமானம் பார்த்து வருகிறார் பெரிய காலூர் கிராமத்தைச் சேர்ந்த சேட்டு என்ற விவசாயி. மரவள்ளிச் செடிகளுக்கு நடுவே களையெடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த விவசாயி சேட்டுவைப் பார்க்கச் சென்றிருந்தோம். மகிழ்ச்சியோடு வரவேற்ற அவர் அவரது விவசாய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். “விவசாயத்தில் பொதுவாக ஒரே பயிரை நம்பி இருக்கக்கூடாது. வேறு சில பயிர்களையும் கூடுதலாக சாகுபடி செய்ய வேண்டும். அதனால்தான், எனது நிலத்தில் கூடுதலாக மரவள்ளியைப் பயிரிட்டு வருகிறேன். அப்பா காலத்தில் இருந்தே எங்களுக்கு விவசாயம்தான் பிரதான தொழில். அப்பா இருக்கும்போது நெல் பயிரிட்டு வந்தார். அவரைத் தொடர்ந்து நானும் நெல் பயிரிட்டு வந்தேன். நெல்லைப் பொருத்தவரை ஒரே மாதிரியான வருமானம்தான் இருக்கும். சில சமயம், விலை குறைந்து, வருமானமும் குறையும். மழை பெய்து மொத்த வயலுமே ஒன்றுமில்லாமலும் போகும். அதனால்தான் வேறு பயிரை சாகுபடி செய்யலாம் என யோசித்து மரவள்ளியைப் பயிரிட்டு வருகிறேன்.

எனக்கு மொத்தமாக எட்டு ஏக்கர் விவசாய நிலம் இருக்கிறது. அதில் நெல் மற்றும் மணிலாவை ஐந்து ஏக்கரிலும் மீதமுள்ள மூன்று ஏக்கரில் மரவள்ளியும் பயிர் செய்திருக்கிறேன். கடந்த நான்கு ஆண்டுகளாக மரவள்ளி விவசாயம் செய்து வருவதால் மரவள்ளியைப் பற்றி அனைத்துமே தெரியும். ஏக்கருக்கு 700 கிலோ வீதம் மூன்று ஏக்கருக்கு 2 டன் மரவள்ளிக் குச்சிகளை பக்கத்து ஊரில் இருந்து ரூ.4500க்கு வாங்கி வந்தேன். ஒரு மரவள்ளிக் குச்சியில் இருந்து சரியாக 3 மரவள்ளி விதைக்குச்சிகள் வரை எடுக்க முடியும். மரவள்ளியைப் பொருத்தவரை அதன் வேர்தான் நமக்கு கிழங்கு. வேர் நன்றாக வளர வேண்டுமென்றால் மண் நன்றாக உதிரியாக இருக்க வேண்டும். அதனால் மரவள்ளி நடவு செய்யத் தேர்ந்தெடுத்த நிலத்தை 6 முறை நன்றாக உழவு செய்திருக்கிறேன். முதல் உழவுக்கு முன்பு தக்கைப் பூண்டு விதைத்து அதே நிலத்தில் மடக்கி உழுதேன். பிறகு 10 நாட்கள் இடைவெளியில் ஐந்து கலப்பை கொண்டு உழுதேன். அந்த முறையில் அதாவது அந்தக் கலப்பையில் உழுதால் நன்கு ஆழமாக மண்ணைத் தோண்டும். அப்படி மண்ணை உதிரியாக்கிய பிறகு, உயிர் உரங்கள் கொடுக்கும்போது நன்றாக பலன் தரும். இவ்வாறு அடுத்தடுத்த உழவைத் தொடங்கினேன். கடைசியாக நிலத்தை மட்டப்படுத்தும்போது இரண்டு முறை உழுது நன்றாக தண்ணீர் விட்டு பாத்திகளைத் தயார்செய்து அதன்மீது குச்சிகளை நடவு செய்தேன்.

மரவள்ளிக் குச்சிகளை நடவு செய்யும்போது நிலம் முழுக்க நிறைய தண்ணீர் விட்டு முழுவதும் ஈரமாக இருக்க வேண்டும். ஈரமாக இருக்கிற மண்ணில் குச்சிகளை வைத்து அழுத்தினாலே போதுமானது. நடவுக்கு தேர்ந்தெடுக்கிற குச்சியானது 4 அங்குல அளவில் இருக்க வேண்டும். மண்ணுக்கு உள்ளே இரண்டு அங்குலமும், மண்ணுக்கு மேலே இரண்டு அங்குலமும் இருக்கும்படி நடவு செய்ய வேண்டும். அதாவது ஒரு குச்சியில் 6 பருக்கள் இருத்தல் அவசியம். மரவள்ளியைப் பொருத்தவரை 3 அடிக்கு ஒரு குச்சி என்கிற விகிதத்தில் நட வேண்டும். குச்சி பெரிதாக இல்லாமல் 2 அங்குல அளவு மட்டும் வெளியே இருக்கும்படி நடவு செய்தால்தான் குச்சி ஆடாமல் இருக்கும். அப்படி இருந்தால்தான் வேர் நன்றாக பிடித்து வளரும். நடவு செய்த 4வது நாளில் நிலத்தில் ஈரப்பதம் இருந்தாலும் கட்டாயம் தண்ணீர் கொடுக்க வேண்டும். பிறகு 10வது நாளில் அடுத்த தண்ணீர். அதாவது, நடவு செய்து முடித்தவுடன் முதல் 20 நாட்களில் 3 முறை தண்ணீர் கொடுக்க வேண்டும். அதற்கு அடுத்தபடியாக ஈரம் பார்த்துக் கொடுத்தால் நல்லது. முதல் மூன்று மாதம் மரவள்ளிக்கு கட்டாய பராமரிப்புத் தேவை. களை பிடுங்குவதில் இருந்து உரம் தெளிப்பது, சரியான நேரத்தில் நீர் கொடுப்பது என அனைத்தும் தெளிவாக இருக்க வேண்டும். நடவு செய்து 25வது நாட்களில் முதல் உரம் கொடுக்க வேண்டும். அது வளர்ச்சி ஊக்கியாக இருக்க வேண்டும். அடுத்த 4வது மாதத்தில் கலப்பு உரங்களைக் கொடுக்க வேண்டும். அதற்கடுத்து 7வது மாதம் பொட்டாஷ் மற்றும் அமோனியம் சல்பேட் இரண்டையும் ஒரு மூட்டை வாங்கி கலந்து ஒரு ஏக்கர் மரவள்ளிக்குக் கொடுக்க வேண்டும். மொத்தமாகவே இந்த மூன்று உரங்கள்தான். இது கொடுத்தாலே மரவள்ளி வேர் பெருத்து நன்றாக வளரும்.

எனது நிலத்தில் கறுப்பு தாய்லாந்து ரக மரவள்ளியைப் பயிரிட்டு இருக்கிறேன். இந்த ரக மரவள்ளி சாப்பிடுவதற்கு மட்டும் பயன்படாமல் ஜவ்வரிசி உற்பத்தி செய்யப்படுகிற சேகோ மில்லிற்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இதை அவர்கள் ஆர்வத்தோடு வாங்கிச் செல்கிறார்கள். மரவள்ளியானது நடவு செய்து 8 மாதத்தில் அறுவடைக்குத் தயாராகிவிடும். கூடுதல் நாட்கள் கழித்து அறுவடை செய்தாலும் கூடுதல் விளைச்சல் கிடைக்கும். ஆனால், மழைக்காலத்தில் மரவள்ளியை அறுவடை செய்யாமல் வைத்திருந்தால் கிழங்கு அழுகிவிடும். அதனால், மழை வருவதற்கு முன்பாகவே அறுவடை செய்யலாம். ஒரு ஏக்கர் மரவள்ளிக்கு சராசரியாக ரூ.12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை செலவு செய்திருக்கிறேன். மூன்று ஏக்கர் என்று பார்த்தால் சராசரியாக 40 ஆயிரம் செலவு செய்திருக்கிறேன். இதுபோக, இந்த எட்டு மாதத்தில் குடும்பத்தோடு சேர்த்து ஒவ்வொரு நாளும் வயலில் வேலை பார்த்திருக்கிறேன். மரவள்ளியைப் பொருத்தவரை அதன் மாவுச்சத்து எவ்வளவு இருக்கிறது என்பதைப் பார்த்து விலை போகும். எனது வயலில் ஒரு ஏக்கரில் சராசரியாக 8 டன் மரவள்ளி வரை கிடைக்கிறது. மூன்று ஏக்கரில் 25 டன் வரை எடுக்க முடியும். அதேபோல, ஒரு டன் மரவள்ளியை சராசரியாக ரூ.9 ஆயிரம் வரை விலை கொடுத்து ஜவ்வரிசி தயாரிக்கும் மில்லில் இருந்து வாங்கிச் செல்கிறார்கள். அப்படிப் பார்த்தால், மூன்று ஏக்கரில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமாக கட்டாயம் வருமானம் பார்க்கலாம். மூன்று ஏக்கருக்கு ஒரு போகத்திற்கு ரூ.50 ஆயிரம் செலவு வந்தாலும்கூட ஒன்றரை லட்சத்திற்கு மேல் நிச்சய லாபம் பார்க்கலாம். நடவு மற்றும் பராமரிப்பில் இருந்து விற்பனை வரை அனைத்துமே மரவள்ளியில் எளிது என்பதால் விவசாயிகள் கட்டாயமாக இதை பயிர் செய்து லாபம் பார்க்கலாம்’’ என பூரிப்போடு கூறுகிறார் விவசாயி சேட்டு.
தொடர்புக்கு:
எம்.ேசட்டு – 99438 63592

Related posts

பூவிருந்தவல்லி அருகே மேளம் அடிக்கும் இளைஞர் வெட்டிக் கொலை: மேலும் 4 பேர் கைது

ஆந்திர மாநிலத்தை புனரமைக்க ரூ.1 லட்சம் கோடி நிதியுதவி வேண்டும்: ஒன்றிய அரசிடம் அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கோரிக்கை

திண்டுக்கல்லில் மாநகராட்சி இளநிலை உதவியாளர் சஸ்பெண்ட்..!!