மறைமலைநகர் நகராட்சியில் என்எச் சாலையில் தேங்கியுள்ள சாக்கடை கழிவுநீரால் மக்கள் அவதி

செங்கல்பட்டு: மறைமலைநகர் நகராட்சி, 11வது வார்டில் உள்ள என்எச்-2 சாலையில் பாதாள சாக்கடை கால்வாய் அடைப்புகளால் கழிவுநீர் வெளியேறி சாலையில் குளமாக தேங்குகிறது. அவற்றை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர். மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட 11வது வார்டான என்எச் 2, சிங்காரவேலன் தெரு மற்றும் சாலையில் வங்கிகள், ஏடிஎம் மையங்கள், மகளிர் தங்கும் விடுதிகள், தனியார் மருத்துவமனை மற்றும் அனைத்து விதமான வணிக வளாகங்கள் உள்ளன. இப்பகுதியில் உள்ள பாதாள சாக்கடைகளில் ஒருசிலர் குப்பை கழிவுகளுடன் கழிவுநீரை கொட்டி வருவதாக கூறப்படுகிறது. இதனால் என்எச் 2 சிங்காரவேலன் சாலையில் உள்ள பாதாள சாக்கடைகளில் ஆங்காங்கே அடைப்புகள் ஏற்பட்டு, சாக்கடையின் மேல்மூடி வழியாக கழிவுநீர் வெளியேறி சாலையில் கடந்த சில நாட்களாக குளம் போல் கழிவுநீர் தேங்கி நிற்கிறது.

இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசு உற்பத்தி அதிகரித்து காணப்படுகிறது. மேலும் அப்பகுதி மக்களுக்கு நோய்தொற்றுகள் பரவும் அபாயநிலை உள்ளது. இதனால் கடைகளுக்கு வரவே அப்பகுதி மக்கள் அச்சப்படுகின்றனர். எனவே, பாதாள சாக்கடை அடைப்புகளை நீக்கி, தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றி, முறையாக சீரமைத்து பராமரிப்பதற்கு மறைமலைநகர் நகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Related posts

கூகுள் மேப்பை நம்பி ஆற்றுக்குள் காரை விட்ட இளைஞர்கள்.

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!

தீபாவளியையொட்டி அக்டோபர் 29ம் தேதிக்கு; முக்கிய ரயில்கள் அனைத்திலும் 5 நிமிடத்தில் புக்கிங் முடிந்தது: தென் மாவட்ட ரயில்கள் ஹவுஸ்புல்