கேரளாவில் மீண்டும் மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டம்: போலீசார் விசாரணை

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாடு, பாலக்காடு, இடுக்கி கண்ணூர் மாவட்டங்களில் உள்ள வனப்பகுதிகளில் மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. இவர்கள் அடிக்கடி துப்பாக்கி உள்பட ஆயுதங்களுடன் ஊருக்குள் வந்து பீதியை ஏற்படுத்துவது வழக்கம். கடந்த சில தினங்களுக்கு முன்பு வயநாடு மாவட்டம் கம்பமலை அருகே உள்ள தலப்புழா பகுதியில் திடீரென ஊருக்குள் வந்த ஆயுதம் ஏந்திய மாவோயிஸ்ட்டுகள், வனத்துறை அலுவலகத்தை சூறையாடியது பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து அதிரடிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.அதைத்தொடர்ந்து அங்குள்ள வனப்பகுதியில் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர். ஆனால் யாரும் சிக்கவில்லை.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மீண்டும் அதே தலப்புழா பகுதியில் ஆயுதம் ஏந்திய 5 மாவோயிஸ்ட்டுகள் ஊருக்குள் வந்தனர். அவர்கள் அங்குள்ள ஒரு வீட்டுக்கு சென்று உணவுப் பொருளை வாங்கினர். மேலும் தங்களது செல்போன்கள் மற்றும் லேப்டாப்பை சார்ஜ் செய்தனர். மாவோயிஸ்ட்டுகள் குறித்து செய்திகள் வந்த பத்திரிகைகளையும் அவர்கள் சேகரித்தனர். இதன் பின் அவர்கள் காட்டுக்குள் சென்று விட்டனர். இது குறித்து அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். ஆயுதம் ஏந்திய மாவோயிஸ்ட்டுகள் அடிக்கடி ஊருக்குள் வருவது வயநாட்டில் பீதியை ஏற்படுத்தி உள்ளது. நேற்று முன்தினம் வந்த கும்பலில் தமிழ்நாட்டை சேர்ந்த விமல்குமார் மற்றும் மொய்தீன், சந்தோஷ் மனோஜ் ஆகிய மாவோயிஸ்ட்டுகள் இருந்ததை போலீசார் உறுதிப்படுத்தி உள்ளனர். இது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

Related posts

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு – 2 பேர் உயிரிழப்பு

ஜப்பான் நாட்டின் போனின் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்