Monday, September 9, 2024
Home » பல சத்துகள் நிரம்பிய பழைய சோறு!

பல சத்துகள் நிரம்பிய பழைய சோறு!

by Lavanya

மலைப்பகுதியில் உற்பத்தியாகும் நீரில் இயற்கை தாதுக்களுடன் மருத்துவக் குணங்கள் நிறைந்திருக்கும். அப்படி பாய்ந்தோடி வரும் ஆற்று நீர் வாதக்கோளாறுகளைப் போக்கும். அருவி நீர் பித்தக் கோளாறுகளை நீக்கும். ஆனால் சோற்று நீர் வாதம், பித்தம் இரண்டையும் போக்கும். இதைத்தான் ஆற்று நீர் வாதம் போக்கும், அருவி நீர் பித்தம் போக்கும், சோற்று நீர் இரண்டையும் போக்கும் என குணபாடம் எனும் மருத்துவ நூலில் அகத்தியர் குறிப்பிட்டிருக்கிறார். இரும்புச்சத்து, வைட்டமின் பி6 மற்றும் பி12, நார்ச்சத்து, புரதச்சத்து என பல சத்துகள் நிறைந்த பழைய சோற்றைச் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். மந்தநிலை விலகி சுறுசுறுப்பு கிடைக்கும். உடல் சூடு தணியும். வயிற்றுப்புண் ஏற்படாமல் தடுக்கப்படும். ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். மலசிக்கல் பிரச்னை நீங்கும். அலர்ஜி விலகும். செரிமான சக்தி அதிகரிக்கும். உடல் வனப்பு பெறும். உடல் வலி நீங்கும். இப்படி பல சிறப்புகள் பழைய சோற்றில் நிறைந்திருக்கின்றன. இந்த உண்மை நமக்கெல்லாம் தெரிந்ததுதான் என்றாலும் அமெரிக்கன் நியூட்ரீஷன் அசோசியேஷனும் இதை உறுதிப்படுத்தி இருக்கிறது. இதனால் பழைய சோறுக்கு உலகப்புகழ் கிடைத்திருக்கிறது.
நம் பாட்டனும், பூட்டனும், ஆச்சியும், பாட்டியும் வயல் வேலைகளுக்குச் செல்லும்போது தூக்குச் சட்டியில் வெறும் பழைய சோற்றையும், கொஞ்சம் பச்சை மிளகாயையும், சின்ன வெங்காயத்தையும் கொண்டு சென்றார்கள்.

சுட்டெரிக்கும் வெயிலில் நாள் முழுக்க உழைக்கும் அவர்களுக்கு இந்தப் பழைய சோறுதான் தெம்பு தந்தது. முதல்நாள் மிஞ்சிய சோற்றில் ஊற்றி வைக்கப்பட்ட நீர் நொதித்து மறுநாள் கிடைக்கும் நீராகாரம், நிசி நீர், சோற்று நீர், நீத்தண்ணீர், அன்னக்காடி, அன்ன அமுது, பழந்தண்ணி, கஞ்சித்தண்ணி என வேறு சில பெயர்களில் அழைக்கப்படுகிறது. பழைய சோறு பற்றிய வரலாறு மிகச் சாதாரணமானது. ஏழை எளிய மக்கள், விவசாயிகள், சாமானிய மக்கள் முதல்நாள் சமைத்த உணவில் மீதமானது கெட்டுப்போகாமல் இருக்க நீர் ஊற்றி வைத்தார்கள். அதை மறுநாள் காலை, மதியம் வரை கூட உணவாகப் பயன்படுத்தினார்கள். எளிய மக்களின் மிகச் சாதாரண நிகழ்வு இன்றைக்கு ஒரு வரலாறாகி உலகம் போற்றுமளவுக்கு உயர்ந்து நிற்கிறது.காலைச் சிற்றுண்டியாக பழைய சோறு சாப்பிடுவதால் உடல் லேசாகி சுறுசுறுப்படையும். இரவில் நீர் ஊற்றி மூடிவைப்பதால் அதில் லட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் உருவாகின்றன என்று சொல்லியிருக்கிறார் அமெரிக்க விஞ்ஞானி ஒருவர்.

அரிசியில் தயாரித்த பழையசோறு மட்டுமல்ல கேழ்வரகு, கம்பு போன்ற சிறுதானியங்களிலும் சுவையான பழங்கஞ்சிகளைத் தயாரிக்கலாம். சிறுதானியங்களை இடித்து மாவாக்கி காலையில் ஊற வைத்து மாலையில் நீர் விட்டுக் கரைத்து உப்பு சேர்த்துக் காய்ச்சுவார்கள். முதல் நாள் காய்ச்சி வைத்த மாவை மறுநாள் காலை எடுத்து தண்ணீர் அல்லது மோர் சேர்த்துக் கரைத்து துவையல், ஊறுகாய், மோர்வற்றல், சுட்ட கருவாடு சேர்த்துச் சாப்பிடச் சுவையாக இருக்கும்.கோடை காலத்தில் ஆற வைத்தும் குளிர்காலத்தில் சூடாகவும் சாப்பிடலாம். மண்பானையில் செய்து வைத்துக் கொண்டால் நான்கு நாள் வரை கூட இதைப் பயன்படுத்தலாம். பழைய சோறு சாப்பிட்டதால் நம் முன்னோர் ஆரோக்கியமாக இருந்தார்கள். ஆனால், இன்றைக்குக் கிடைக்கும் பட்டை தீட்டிய அரிசியில் பழைய சோறு செய்து சாப்பிட்டால் நிச்சயம் நோய்தான் வரும். கைக்குத்தல் அரிசியில் பழைய சோறு செய்து சாப்பிடுவது நலம் பயக்கும். பழைய சோற்றுடன் சிலர் தயிர் ஊற்றிச் சாப்பிடுவார்கள் அது அவ்வளவு நல்லதல்ல, தயிரை மோராக்கி அதன்பிறகு பழைய சோற்றுடன் சேர்த்துச் சாப்பிடலாம். மோர் சேர்த்த பழைய சாதம் செரிமானக் கோளாறுகளைப் போக்கி வாதம், பித்தத்தைத் தணிக்கும்.

இன்னும் பல சிறப்புகளைக் கொண்ட பழைய சோற்றை இன்றைக்கு மார்னிங் ரைஸ் ட்ரிங் என்ற பெயரில் டப்பாக்களிலும், பாட்டில்களிலும் அடைத்து ஒரு லிட்டர் 250 ரூபாய் என வெளிநாடுகளில் விற்கிறார்கள். பழைய சோற்றின் மகத்துவம் அறிந்து அங்கே பெரிய வணிகமே நடக்கிறது. ஆனால் நம் ஊரில் பழைய சோறு சாப்பிட்டால் சர்க்கரை நோய் வரும், சளி பிடிக்கும், ஊளைச்சதை போடும் என்று ஏதேதோ சொல்லி நம்மை மூளைச்சலவை செய்து ஓட்ஸ், கெலாக்ஸ் என எதையெல்லாமோ சாப்பிட வற்புறுத்துகிறார்கள். ஏற்கெனவே நாம் பயன்படுத்தி வந்த கடலை எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய்களைப் பயன்படுத்தினால் அந்த நோய் வரும், இந்த நோய் வரும் என்று சொல்லி பயங்காட்டி சூரியகாந்தி எண்ணெயும், பாமாயிலையும் பயன்படுத்தச் சொன்னார்கள். கால்சியம் சத்துக்குறைபாட்டைப் போக்க தேங்காய் சாப்பிட்ட நம் மக்களை பயமுறுத்தி பால் சாப்பிடுங்கள் என்று டாக்டர்களை வைத்து சொல்ல வைத்தார்கள். இப்படி பல விஷயங்களைச் சொல்லிச்சொல்லியே நம் மக்களை நோயின் பிடியில் சிக்க வைத்து விட்டார்கள் என்ற பேச்சு பலமாக அடிபடுகிறது. ஆகவே மக்களே சிந்தியுங்கள். யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை. பழைய சோறு நமக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம். அதை நாம் விரும்பி
உட்கொண்டு பலன்பெறுவோம்.

You may also like

Leave a Comment

seven + 6 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi