மன்னார்காடு தாலுகாவில் காட்டு யானைகள் அட்டகாசம்-பொதுமக்கள் பீதியில் தவிப்பு

பாலக்காடு : பாலக்காடு மாவட்டம், மன்னார்காடு தாலுகா பகுதிகள் கல்லடிக்கோடு, கரிமலை, எடபரம்பு, சுள்ளியாம்குளம், மீன்வல்லம் ஆகிய இடங்களில் காட்டு யானைகள் அடிக்கடி உலா வருவது தொடர்கதையாக உள்ளது. மேலும் இப்பகுதியில் உள்ள தோட்டப்பயிர்களை சேதப்படுத்துவதால் பொதுமக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.

இந்த பகுதிகளில் காட்டு யானைகள் தொடர்ந்து, கூட்டமாக முகாமிட்டு வருகிறது. இங்குள்ள தோட்டப்பயிர்கள் ரப்பர், வாழை, தென்னை, பாக்கு, ஜாதிக்காய், மா, பலா ஆகியவற்றை ருசித்து உண்டு சேதப்படுத்திவிட்டு செல்கின்றன. சமீபத்தில் மீன்வல்லம் பகுதியில் தோட்ட பயிர்களை துவம்சம் செய்து வனத்தில் மறைந்து விடுகிறது. காட்டு யானைகள் அடிக்கடி உலா வருவதால் மக்கள் வீட்டைவிட்டு வெளியே நடமாட முடியாமல் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இதனை வனத்துறையினர் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் பகல் நேரங்களிலே மக்கள் வெளியே நடமாட முடியாமல் உள்ளனர். இரவு நேரங்களில் காட்டுப்பன்றிகள் அட்டகாசம் அதிகரித்துள்ளது. இவை தோட்டத்திற்குள் புகுந்து ஊடு பயிர்களை துவம்சம் செய்துவிட்டு தப்பித்து விடுகின்றன. இதுதவிர வனவிலங்குகள் குரங்கு, மயில் ஆகியவற்றின் தொந்தரவுகளும் இப்பகுதியில் அதிகரித்துள்ளது. இவைகளும் தோட்டப்பயிர்களை நாசப்படுத்தி வருகின்றன.

இதனால் இப்பகுதியிலுள்ள விவசாயிகள் விவசாயத்தை சரிவர செய்ய முடியாமலும், கடன் தொகை செலுத்த முடியாமலும் பரிதவிப்பில் உள்ளனர். இப்பகுதியை சேர்ந்த மக்கள் வீடுகளில் பக்குவமடைந்த பலா பழங்களை உடனடியாக வெட்டி விட்டு வருகின்றனர். இல்லையென்றால், காட்டு யானைகள் துவம்சம் செய்து மக்களையும் உயிருக்கும் ஆபத்தை உண்டாக்கும் எனவும், வன விலங்குகளால் ஏற்பட்டுள்ள தோட்ட பயிர்கள் சேதத்திற்கு வனத்துறையினர் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

கலைஞர் பற்றி அவதூறு: சீமான் மீது புகார்

“என்னை காண ஆதாருடன் வரவும்”- கங்கனா நிபந்தனை

இளைஞர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது