மஞ்சூர் அருகே சிறுத்தை தாக்கி கன்றுக்குட்டி பலி

*பொதுமக்கள் அச்சம்

மஞ்சூர் : நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள முக்கிமலை வனப்பகுதி அருகே உள்ள பகுதியாகும். இங்கு, சிறுத்தை, புலி, கரடி, யானை போன்ற வனவிலங்குகள் அதிகளவில் வாழும் பகுதியாகும். மேலும், வனவிலங்குகள் அடிக்கடி வனப்பகுதியைவிட்டு வெளியேறி குடியிருப்புபகுதிக்குள் புகுந்து ஆடு, மாடு, நாய், கோழி ஆகியவற்றை வேட்டையாடி செல்வது வழக்கம். இந்த நிலையில் மஞ்சூர் அருகே குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து கட்டி வைக்கப்பட்டிருந்த கன்றுக்குட்டியை சிறுத்தை கடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

முக்கிமலை பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். விவசாயியான இவர் மாடுகளை வைத்து பராமரித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு சிவக்குமார் தனது மாடு மற்றும் கன்றுக்குட்டியை வீட்டின் அருகே உள்ள தொழுவத்தில் கட்டிவிட்டு தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவில் அப்பகுதியில் உலா வந்த சிறுத்தை மாட்டு தொழுவத்திற்குள் புகுந்தது. பசுமாட்டின் மீது பாய்ந்து அதை தாக்க முயன்றது. இதனால், மாடு வலியால் கத்தியது. மாட்டின் சத்தத்தை கேட்ட சிவக்குமார் வெளியில் வந்து பார்த்தார்.

அப்போது மாடு தொழுவத்தை விட்டு வெளியே ஓடியது. பின்னர், சிவக்குமார் தொழுவத்திற்குள் சென்று பார்த்தார். அப்போது சிறுத்தை கன்றுக்குட்டியை கடித்து சாப்பிட்டுக்கொண்டிருந்தது. உடனே சிவக்குமார் அதிர்ச்சியில் சத்தம் போட்டார். இதையடுத்து சிறுத்தை தொழுவத்தைவிட்டு வெளியேறி அருகில் உள்ள வனப்பகுதிக்குள் சென்றது. இது தொடர்பாக வனத்துறையினர்க்கு தகவல் கொடுக்கப்பட்டது.

குந்தா வனச்சரகர் சீனிவாசன், வனவர் சுரேஷ் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்பகுதியில் சிறுத்தையின் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. எனவே சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து பாதுகாப்பு அளிக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். குடியிருப்பு பகுதிக்குள் சிறுத்தை புகுந்து கன்றுக்குட்டியை தாக்கி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

சந்திரயான் -5 திட்டத்துக்கு அனுமதி

234 தொகுதிக்கு பார்வையாளர்களை நியமித்தது திமுக

லடாக்கில் லேசான நிலநடுக்கம்