மஞ்சூர்- கோவை சாலையில் அரசு பஸ்சை வழிமறித்த குட்டி யானை: பயணிகள் அச்சம்

மஞ்சூர்: மஞ்சூர்- கோவை சாலையில் அரசு பஸ்சை குட்டி யானை வழிமறித்ததால் பயணிகள் அச்சமடைந்தனர். நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ளது கெத்தை. மஞ்சூரில் இருந்து கோவை செல்லும் சாலையில் உள்ள இப்பகுதியில் நீர் மின் நிலையம் மற்றும் குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் கடந்த சில தினங்களாக குட்டியுடன் 5 பெரிய காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் மந்து, கெத்தை, பெரும்பள்ளம் பகுதிகளில் நடமாடி வருகிறது. பெரும்பாலும், சாலைகளிலேயே யானைகள் நடமாடி வருவதால் மஞ்சூர்- கோவை வழியாக செல்லும் அரசு பஸ்கள் மற்றும் தனியார் வாகனங்கள் யானைகளின் வழிமறிப்பில் சிக்கி நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை கோவையில் இருந்து சுமார் 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு பஸ் மஞ்சூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. சுமார் 8 மணியளவில் கெத்தை அருகே 10வது கொண்டை ஊசி வளைவில் பஸ் சென்று கொண்டிருந்தபோது குட்டியுடன் இருந்த காட்டு யானை கூட்டம் சாலையோரத்தில் மேய்ச்சலில் ஈடுபட்டு கொண்டிருந்தது.

யானைகளை கண்டவுடன் டிரைவர் அதன் அருகில் செல்லமால் பஸ்சை சற்று தொலைவாகவே ஒதுக்கி நிறுத்தி உள்ளார். அப்போது, கூட்டத்தில் இருந்த குட்டி யானை அரசு பஸ்சை கண்டு பிளிறியபடி அருகே ஓடியது. தொடர்ந்து பஸ்சின் முன்பாக நின்று பிளிறியது. இதைக்கண்டு பஸ்சில் அமர்ந்திருந்த பயணிகள் அச்சம் அடைந்தனர். தொடர்ந்து குட்டி யானை அரசு பஸ்சை வழி மறித்தபடி நின்றதால் பின்னால் வந்த வாகனங்களும் சாலையோரங்களில் ஒதுக்கி நிறுத்தப்பட்டன. சுமார் 1 மணி நேரம் கடந்த நிலையில் குட்டியானை அங்கிருந்து சென்று கூட்டத்துடன் சேர்ந்து கொண்டது. பின்னர், காட்டு யானைகள் குட்டியுடன் சாலையோரத்தில் இறங்கி வனப்பகுதிக்குள் சென்றன.அதன்பின், அரசு பஸ் மற்றும் வாகனங்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றன. இந்த சம்பவத்தால் மஞ்சூர்- கோவை சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இப்பகுதியில் குட்டி மற்றும் 5 பெரிய காட்டு யானைகள் நடமாடி வரும் நிலையில் குட்டி யானை மட்டுமே அரசு பஸ் மற்றும் வாகனங்களை கண்டவுடன் ஓடி வருவதும், வாகனங்களை வழிமறிப்பதும் தொடர்கதையாக உள்ளது.

இதற்கிடையே, மஞ்சூர்- கோவை சாலையில் காட்டு யானைகளின் நடமாட்டம் குறித்து வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். சாலையில் யானைகளின் நடமாட்டம் தென்பட்டால் அவ்வழியாக செல்லும் வாகனங்களை நிறுத்தி, யானைகள் காட்டிற்குள் சென்ற பிறகே செல்ல அறிவுறுத்தப்படுகிறது. காட்டு யானைகளை கண்டவுடன் ஓட்டுனர்கள் தங்களது வாகனங்களை பாதுகாப்பான இடத்தில் நிறுத்த வேண்டும். பயணிகள் கீழே இறங்கி யானைகளை கண்டு கூச்சலிடுவது மற்றும் புகைப்படம் எடுக்க முயற்சி செய்யக்கூடாது. மேலும், வாகனங்கள் மூலம் யானைகளை பின் தொடர்தல், அவற்றை விரட்டுதல் போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. காட்டு யானைகள் சாலையில் இருந்து வனப்பகுதிக்குள் சென்றதை உறுதி செய்த பின்னரே வாகனங்களை இயக்க வேண்டும். மாலை 6 மணிக்கு மேல் இச்சாலையில் வாகனங்களில் குறிப்பாக இருசக்கர வாகனங்களில் பயணிப்பதை தவிர்க்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Related posts

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்திய அணி!

சென்னையில் ஓடப்போகும் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்; வெற்றிகரமாக உற்பத்தி நிறைவு!

ஒட்டன்சத்திரம்- கரூர் சாலையில் ஊர் பெயர் பலகையை மறைத்த மரக்கிளைகள் உடனே அகற்றம்: பொது மக்கள் நன்றி தெரிவிப்பு