ஏற்கனவே 3 பேர் கொல்லப்பட்ட நிலையில் மணிப்பூர் மாநிலத்தில் 4வது நபரின் சடலம் மீட்பு: 10 நாட்களுக்கு பின் மீட்கப்பட்டதால் பதற்றம்

இம்பால்: மணிப்பூரில் விறகு வெட்ட சென்ற 4 பேரில் மூன்று பேரின் சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில் நான்காவது நபரின் சடலம் தற்போது மீட்கப்பட்டதால் அங்கு பதற்றம் நிலவியுள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆண்டு மே மாதம் மைதேயி- குக்கி இன மக்களிடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. இரு பிரிவினரிடையேயான மோதலால் 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடு, உடமைகளை இழந்த நிலையில், அங்கு ராணுவம், பாதுகாப்புப்படையினர் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

எனினும் அவ்வப்போது அங்கு வன்முறை வெடித்து வருகிறது. இந்நிலையில் புத்தாண்டு தினத்தன்றும் பிஷ்ணுபூர் மாவட்டம் அகசோய் பகுதியைச் சேர்ந்த நான்கு பேர், சுராசந்த்பூர் மாவட்டத்தை ஒட்டியுள்ள மலைப்பகுதியில் விறகு சேகரிப்பதற்காக சென்றனர். அவர்களில் தாரா சிங், இபோம்சா சிங் (51), அவரது மகன் ஆனந்த் சிங் (20), ரோமன் சிங் (38) ஆகிய 4 பேரும் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இச்சம்பவத்தில் மாயமான நான்கு பேரில் மூன்று பேரின் உடல்கள் ஹாடக் பைலென் காட்டுப்பகுதியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இபோம்சா சிங் (51), அவரது மகன் ஆனந்த் சிங் (20) மற்றும் ரோமன் சிங் (38) எனத் தெரியவந்துள்ளது. மூன்று பேரையும் ஆயுதமேந்திய கும்பல் கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

நான்கு பேரில் தாராசிங் மட்டும் என்ன ஆனார்? என்று தெரியவில்லை. அதனால் அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். இந்நிலையில் சபல் பகுதியில் தாராசிங் (56) உடல் கண்டெடுக்கப்பட்டது. பாதுகாப்புப் படையினரின் தீவிர தேடுதலுக்குப் பின்னர் 10 நாட்களுக்கு பின்னர் நான்காவது நபரின் சடலம் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

Related posts

அரசியல் ஆதாயத்துக்காக கொலை நடந்ததற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை: கூடுதல் கமிஷனர் அஸ்ரா கார்க் பேட்டி

சைக்கிளில் சென்று மக்களிடம் குறைகளை கேட்ட திமுக எம்பி

நேற்று 4 தீவிரவாதிகள் பலியான நிலையில் ராணுவ முகாம் மீது இன்று தாக்குதல்: 2 வீரர்கள் வீரமரணம்