மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்காததால் ஒன்றிய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்: ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள் முடிவு

புதுடெல்லி: மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்காததால், நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது விரிவான விவாதம் நடத்தப்படும் என்பதோடு, அதற்கு பிரதமர் கட்டாயம் பதிலளிக்க வேண்டும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த 20ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடக்க உள்ளது. கூட்டத்தொடர் தொடங்குவதற்கு ஒருநாள் முன்பாக, மணிப்பூரில் 2 பழங்குடியினப் பெண்களை நூற்றுக்கணக்கான ஆண்கள் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச்செல்லும் வீடியோ வெளியாகி நாட்டையே உலுக்கியது. இது நாடாளுமன்றத்திலும் புயலை கிளப்பியது.

இதனைத் தொடர்ந்து, ‘மணிப்பூர் கலவரம் தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும். அதன்பிறகுதான் இந்த விவகாரம் குறித்து விரிவான விவாதம் நடத்த வேண்டும்’ என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க முன்வரவில்லை. அதே சமயம், விவாதத்திற்கு யார் பதிலளிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் முடிவு செய்ய முடியாது என அரசு தரப்பில் கூறப்பட்டு வருகிறது. இதனால் கூட்டத் தொடர் தொடங்கி முதல் 3 நாட்களும் எந்த அலுவலும் நடக்காமல் இரு அவைகளும் முடங்கின.

இந்நிலையில், நேற்று காலை கூட்டத் தொடருக்கு முன்பாக, 26 எதிர்க்கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவரான காங்கிரசின் மல்லிகார்ஜூனா கார்கே அறையில் ஆலோசனை நடத்தினர். அப்போது, மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடியை பேச வைக்க பல்வேறு உத்திகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இறுதியாக இந்த பிரச்னையில் பிரதமரை பேச வைப்பதற்கு, ஒன்றிய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதே சிறந்த வழியாக இருக்கும் என முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

முன்னதாக, மக்களவையில் ஒன்றிய பாஜ அரசுக்கு எதிராக கடந்த 2018ம் ஆண்டு ஜூலை 20ம் தேதி முதல் முறையாக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது நடத்தப்பட்ட நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில், அரசுக்கு ஆதரவாக 325 எம்பிக்களும், தீர்மானத்திற்கு ஆதரவாக 126 எம்பிக்களும் வாக்களித்தனர். இதன் மூலம் பாஜ அரசு வெற்றி பெற்றது. ஆனாலும், இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டதன் மூலம், விவசாயிகள் பிரச்னை, மந்தகதியான பொருளாதார வளர்ச்சி மற்றும் ஆணவக் கொலைகள் அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் விவாதம் நடத்த வாய்ப்பு கிடைத்தது.

இதே போல இம்முறையும் நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெறாவிட்டாலும், மணிப்பூர் விவகாரத்தில் முழுமையான விவாதம் நடத்த வாய்ப்பு கிடைக்கும் என்பதே எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பார்ப்பு. மக்களவையில் எந்த ஒரு எம்பியும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வரலாம். அதை குறைந்தபட்சம் 50 எம்பிக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். தீர்மானத்தின் மீதான விவாதம் நடத்தும் தேதியை சபாநாயகர் அறிவிப்பார். இது தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்பட்டதில் இருந்து 10 நாட்களுக்குள் இருக்க வேண்டும்.

நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாவிட்டால் அரசு பதவி விலக வேண்டும். தற்போது மக்களவையில் 543 உறுப்பினர்களில் 5 இடங்கள் காலியாக உள்ளன. பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 330 எம்பிக்களும், இந்தியா கூட்டணிக்கு 140 எம்பிக்களும், இதர கட்சிகளுக்கு 60 எம்பிக்களும் உள்ளன. எனவே நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பாஜ அரசு வெற்றி பெற முடியும் என்றாலும், இதன் மூலம் மணிப்பூர் விவகாரத்தில் கடும் நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்பது நிச்சயம்.

* ஒத்துழைப்பு தாருங்கள்: அமித்ஷா கடிதம்
மக்களவையில் நேற்று பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘‘மணிப்பூர் விவகாரத்தில் எவ்வளவு காலம் வேண்டுமானாலும் விவாதிக்க அரசு தயாராக இருக்கிறது. இதுதொடர்பாக இரு அவைகளிலும் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளேன்’’ என தெரிவித்தார். இதுதொடர்பாக, மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவரான காங்கிரசின் மல்லிகார்ஜூன கார்கேவுக்கும், மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரிக்கும் அமித்ஷா எழுதியுள்ள கடிதத்தில், மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க அரசு தயாராக இருப்பதாகவும், கட்சி எல்லைகளுக்கு அப்பால் இதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும், இந்த முக்கியமான பிரச்னைக்கு தீர்வு காண அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பார்கள் என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

* nஇன்று நோட்டீஸ்?
நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கான நோட்டீஸ் இன்று காலை மக்களவையில் தரப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுதொடர்பாக இந்தியா கூட்டணி தலைவர்கள் ஏற்கனவே வரைவு நோட்டீஸ் தயாரித்து, 50 எம்பிக்களின் கையொப்பம் பெறும் பணியை நேற்று மாலையே தொடங்கினர். அதே சமயம், இன்று காங்கிரஸ் கட்சியின் அனைத்து எம்பிக்களும் தவறாமல் கூட்டத் தொடரில் பங்கேற்க வேண்டுமென கட்சி கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கான நோட்டீஸ், அவை தொடங்குவதற்கு முன்பாக 10 மணிக்கே சபாநாயகரிடம் சமர்பிக்கப்பட வேண்டும்.

Related posts

நீட் முறைகேடு தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

தலைவர்கள், வேட்பாளர்கள் வீதிவீதியாக ஓட்டு வேட்டை விக்கிரவாண்டி இடைத்தேர்தல் இன்று மாலை பிரசாரம் ஓய்கிறது: தொகுதிக்கு சம்பந்தமில்லாதவர்கள் வெளியேற உத்தரவு

ரூ.100 கோடி நில அபகரிப்பு புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீட்டில் சோதனை: சென்னை, கரூரில் 7 இடங்களில் சிபிசிஐடி அதிரடி, மனைவியிடமும் விசாரணை