மணிப்பூரில் பெண்கள் பலாத்காரம், வன்முறை பெண் நீதிபதிகள் விசாரணை குழு அமைப்போம்

* உச்சநீதிமன்றம் அதிரடி
* கலவரத்துக்கு உடந்தையாக இருந்த காவல்துறைக்கு கடும் கண்டனம்

புதுடெல்லி: மணிப்பூர் வன்முறையில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற பெண் நீதிபதிகள் கொண்ட குழுவை அமைக்க பரிசீலிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கலவரத்துக்கு உடந்தையாக இருந்த மணிப்பூர் மாநில போலீசாருக்கு கடும் கண்டனத்தை நீதிபதிகள் பதிவு செய்துள்ளனர். மணிப்பூரில் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதல் இனக்கலவரமாக மாறி, கடந்த 3 மாதமாக வன்முறை நீடிக்கிறது. இதில் 160 பேர் கொல்லப்பட்டுள்ளனர். வன்முறையில் சிறுபான்மை மக்களான பழங்குடியின குக்கி பெண்களுக்கு எதிராக பல்வேறு கொடூரங்கள் நடந்துள்ளன. கடந்த மே 4ம் தேதி அன்று 2 பழங்குடியின பெண்களை நிர்வாணமாக்கி நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள் ஊர்வலமாக இழுத்துச் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி நாட்டையே உலுக்கியது.

இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிந்து விசாரிக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக ஒன்றிய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. இந்த நிலையில், பாதிக்கப்பட்ட 2 பெண்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘‘சிறப்பு புலனாய்வு குழு (எஸ்ஐடி) விசாரணைக்கு உத்தரவிடப்பட வேண்டும். எங்களுக்கு உரிய பாதுகாப்பு தரப்பட வேண்டும். எங்களின் அடையாளங்கள் வெளிப்படுத்தப்படாமல் பாதுகாக்க வேண்டும். அருகில் உள்ள மாஜிஸ்திரேட் மூலமாக குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 164ன் கீழ் எங்கள் வாக்குமூலத்தை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என கோரி இருந்தனர்.

இந்த மனு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் கொண்ட அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. பாதிக்கப்பட்ட 2 பெண்கள் சார்பாக ஆஜரான மூத்த வக்கீல் கபில் சிபல், ‘‘குற்றம் செய்தவர்களுடன் மாநில போலீசார் கைகோர்த்துள்ளனர். போலீசார்தான் 2 பெண்களையும் கும்பலிடம் அழைத்துச் சென்றுள்ளனர். அந்த கும்பலிடம் போலீசார் தான் 2 பெண்களை ஒப்படைத்துள்ளனர். அதன்பிறகுதான் எல்லாம் நடந்துள்ளது. அப்படியிருக்கையில், சிபிஐ விசாரணை மீது பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எப்படி நம்பிக்கை வரும். அந்த பெண்கள் நம்பிக்கை வைக்கும் விசாரணை அமைப்பு தான் இப்போது நமக்கு தேவை. அதனால்தான் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட வேண்டும். இதுவரையிலும் மணிப்பூர் வன்முறை தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது பற்றி ஒன்றிய, மாநில அரசுகளுக்கே தெரியாது என்பதுதான் வேதனை’’ என்றார்.

மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், ‘‘பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பலரும் அதிர்ச்சியில் உள்ளனர். முதலில் அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். எனவே சிறப்பு விசாரணை குழுவை அமைக்க வேண்டும்’’ என்று வாதிட்டார். பெண்கள் அமைப்பு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விருந்தா குரோவர் வாதாடுகையில், ‘‘மணிப்பூரில் சிறுபான்மையினராக உள்ள குக்கி பழங்குடியின பெண்களுக்கு எதிராக பல பாலியல் வன்கொடுமை வழக்குகள் உள்ளன. கார் கழுவும் மையத்தில் பணிபுரிந்த 2 பெண்கள் ஒரு கும்பலால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் குடும்பத்தினர் நிவாரண முகாம்களில் உள்ளனர். கொல்லப்பட்ட பெண்களின் உடல்கள் எங்கே என்றே தெரியவில்லை. இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதே தவிர எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை’’ என்றார்.

இதைக் கேட்ட தலைமை நீதிபதி சந்திரசூட் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: இரண்டு பெண்களுக்கு எதிராக கொடூரமான சம்பவங்கள் நடந்துள்ளது. அதைப் பற்றி அருகில் இருந்த போலீசாருக்கு தெரியவில்லை என்றால் அதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். இந்த விவகாரத்தில் வழக்கு பதிவு செய்ய 14 நாட்கள் போலீசார் எடுத்துக் கொண்டது ஏன்? எதற்காக காலதாமதமாக வழக்கு பதிவு செய்யப்பட்டது? வன்முறை தொடர்பாக இதுவரை 6,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. அதில் எத்தனை எப்ஐஆர் உள்ளது, பூஜ்ய எப்ஐஆர் எத்தனை, எத்தனை கைதுகள், எத்தனை பேர் நீதிமன்ற காவலில் உள்ளனர், 164 சட்டப்பிரிவின் கீழ் எத்தனை பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது, எத்தனை பேருக்கு சட்ட உதவி வழங்கப்பட்டுள்ளது என்ற விவரங்களை மாநில அரசு நாளை (இன்று) தாக்கல் செய்ய வேண்டும்.

இந்த விஷயத்தில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைப்பது தொடர்பாக ஒன்றிய, மாநில அரசுகள் தங்கள் கருத்தை தெரியப்படுத்த வேண்டும். சிறப்பு புலனாய்வு குழு அமைப்பது தொடர்பாக ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற 2 பெண் நீதிபதிகள் கொண்ட குழுவை அமைக்க நாங்கள் பரிசீலிக்கிறோம். இவ்வாறு தலைமை நீதிபதி உத்தரவிட்டார். ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணி மற்றும் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆகியோர் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் தொடர்பான விவரங்களை தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் கோரினர். அதனை தலைமை நீதிபதி நிராகரித்தார். இந்த வழக்கு விசாரணை இன்று பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.

 

* மணிப்பூர் கொடூரத்தை எதனுடனும் ஒப்பிட முடியாது

விசாரணையின் போது, மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை வழக்குகளையும் இந்த வழக்கோடு சேர்ந்து விசாரிக்க வேண்டும் என வழக்கறிஞர் பன்சூரி ஸ்வராஜ் கோரிக்கை விடுத்தார். அவர் வாதாடுகையில், ‘‘மேற்கு வங்கத்திலும் இதுபோன்ற கொடூரமான வழக்குகள் உள்ளன. சட்டீஸ்கள், ராஜஸ்தான் மாநிலத்திலும் பெண்களுக்கு எதிரான கொடூரம் நடந்துள்ளது. எனவே நாடு முழுவதும் இந்திய மகள்கள் பாதுகாக்கப்பட வேண்டும்’’ என்றார். இதைக் கேட்ட தலைமை நீதிபதி, ‘‘மணிப்பூர் விவகாரம், நிர்பயா வழக்கை போல தனி ஒரு கும்பலால் நிகழ்த்தப்பட்ட வன்முறை அல்ல. இது ஒரு கட்டமைக்கப்பட்ட சமூக ரீதியான வன்முறை. மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான கொடூரங்கள் இனவெறிக் கோணத்தின் அடிப்படையில் வேறுபட்ட நிலையில் இருக்கிறது. மேற்கு வங்கத்தை போல மணிப்பூரிலும் நடக்கிறது என கூற முடியாது. எனவே இதனை வேறெந்த மாநிலத்துடனும் ஒப்பிட்டு நியாயப்படுத்த முடியாது. இந்தியா முழுவதும் உள்ள பெண்களை பாதுகாக்க வேண்டும் இல்லையென்றால் எந்த பெண்ணுக்கும் பாதுகாப்பு தரக்கூடாது என்று சொல்கிறீர்களா? என்று வக்கீல் பன்சூரி ஸ்வராஜிடம் காட்டமாக கேட்டனர்.

Related posts

விமானத்தில் பயணிப்பவர்கள் மட்டும் மனிதர்கள் அல்ல; வழியனுப்ப வருபவர்களும் மனிதர்கள்தான்: ஐகோர்ட் கிளை கருத்து

கலெக்டர் அலுவலகத்தில் பொறுப்பேற்பு பொதுமக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண கடுமையாக உழைப்பேன்

நீட் விலக்கு பெற திமுக தொடர்ந்து முயற்சிக்கும்: கனிமொழி எம்.பி