மணிப்பூரில் இயல்பு நிலை திரும்பியதாக மாநிலங்களவையில் கூறிய மோடி.. பிரதமர் இதுவரை மணிப்பூர் செல்லவில்லை ஏன்?: காங். ஜெய்ராம் ரமேஷ் கேள்வி!!

டெல்லி: மணிப்பூரில் நிகழ்ந்து வரும் வன்முறைகளை பிரதமர் மோடி மறைக்க முயற்சிப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மணிப்பூர் கலவரம் தொடர்பாக மாநிலங்களவையில் மவுனம் கலைத்த பிரதமர் மோடி அங்கு இயல்பு நிலை திரும்பி விட்டதாக தெரிவித்தார். கல்வி நிலையங்களும் திறக்கப்பட்டு வழக்கம் போல செயல்படுவதாக கூறிய அவர் மணிப்பூரில் வன்முறையை தூண்டுவோரை எச்சரிப்பதாகவும் தெரிவித்தார். பிரதமரின் உரை உண்மைக்கு மாறானது என எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பிரதமரின் பேச்சு வியப்பை ஏற்படுத்துவதாக கூறியுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்; கலவரம் வெடித்ததில் இருந்து ஒருமுறை கூட பிரதமர் மணிப்பூர் செல்லவில்லை என்று தெரிவித்து இருக்கிறார். அவுட்டர் மணிப்பூர் எம்.பி. ஆல்ஃபிரட் கங்கமை மக்களவையில் பேச விடவில்லை என கவுரவ் கோகாய் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் கருத்து கூறியுள்ள இன்னர் மணிப்பூர் எம்.பி. அங்கோம்சா பிமோல் மணிப்பூரில் தற்போது உள்நாட்டு போர் சூழலே நிலவுவதாகவும், மோடி அதை மறைக்கப் பார்ப்பதாகவும் குற்றச்சாட்டியுள்ளார். இருவேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் சாதாரணமாக மாநிலத்தின் மற்ற பகுதிகளுக்கு செல்ல முடிவதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மணிப்பூர் குறித்த பிரதமர் மோடியின் உரைக்கு சிவசேனா கட்சியும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து பேசிய அக்கட்சி எம்.பி. பிரியங்கா சதுர்வேதி; மூன்றாவது முறையாக பொறுப்பேற்ற மோடியால் மணிப்பூருக்கு செல்ல முடியவில்லை என்றும், ஆனால் இத்தாலி செல்ல முடிகிறது என்றும் விமர்சித்தார். மோடியின் வெற்று பேச்சை மணிப்பூர் மக்கள் உணர்வார்கள் என்றும் அவர் காட்டமாக தெரிவித்துள்ளார்.

Related posts

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது