மணிப்பூர் முதல்வர் ராஜினாமாவா? ஊடக செய்திக்கு 3 நாட்களுக்கு பின் பிரேன் சிங் மறுப்பு

இம்பால்: தான் பதவியை ராஜினாமா செய்ததாக வந்த தகவல்கள் ஆதாரமற்றது என்று மணிப்பூர் பாஜ முதல்வர் பிரேன் சிங் கூறியுள்ளார். மணிப்பூர் மாநிலத்தில் மெய்டீ மற்றும் குக்கி சமூக மக்களுக்கு இடையே கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் 3 ம் தேதி கலவரம் வெடித்தது. கலவரம் ஓராண்டுக்கும் மேலாகி இன்றளவும் கனன்று கொண்டிருக்கிறது. மணிப்பூர் வன்முறையில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்கி உள்ளனர்.

இந்த நிலையில்,கலவரத்தை கட்டுப்படுத்த தவறியதற்காக முதல்வர் பிரேன் சிங் விரைவில் ராஜினாமா செய்வார் என்று 3 நாட்களுக்கு முன் செய்தி வெளியானது. இந்த நிலையில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய போவதாக வந்த செய்தியை முதல்வர் பிரேன் சிங் மறுத்துள்ளார். இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மிகவும் இக்கட்டான காலக்கட்டத்தில் மணிப்பூர் உள்ளது.

இது போன்ற முக்கியமான நேரங்களில் மணிப்பூர் தலைவர்கள் பலவீனமாக இருக்க முடியாது. எங்கள் திறனில் நாங்கள் முழு நம்பிக்கையுடன் உள்ளோம். நான் ராஜினாமா செய்ய போவதாக வந்த தகவல் அனைத்தும் புரளி. இது எங்களுடைய அரசியல் எதிரிகளின் வேலையாகும். மணிப்பூரின் நிலைமை குறித்து பிரதமர் அலுவலகத்தை அரசு தினமும் தொடர்பு கொண்டு வருகிறது. எனவே,ராஜினாமா போன்ற பொய் செய்திகளை ஊடகங்கள் பரப்ப வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார்.

Related posts

விம்பிள்டன் டென்னிஸ் 2வது சுற்றில் மாயா

யூரோ கோப்பை கால்பந்து; காலிறுதியில் துருக்கி

உலக சாம்பியன்களுக்கு உற்சாக வரவேற்பு: மும்பையில் இன்று வெற்றி ஊர்வலம்