மணிலாவில் வேரழுகலைத் தடுக்க விதை நேர்த்தி அவசியம்!

விவசாயிகளின் நலனுக்காக தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி மாவட்டம் தோறும் விவசாயிகள் குறைகள் கேட்கப்பட்டு, நிவர்த்தி செய்யப்படுகிறது. அவர்களுக்கான அடிப்படைத்தேவைகள் தீர்க்கப்படுவதுடன், விவசாயத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கமும் தரப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக கடலூர் மாவட்ட விவசாயிகளின் மேம்பாட்டிற்கான ஆலோசனைக்கூட்டம், அங்குள்ள கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் நடந்த இந்தக்கூட்டத்தில், வேளாண்மை இணை இயக்குநர் கென்னடி ஜெபக்குமார் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தில் உளுந்து விதை மானியத்தில் வழங்கப்படுவது குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். அதன்பிறகு விருத்தாசலம், வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானி முனைவர் ஜெயக்குமார், நெல் வயலில் இலை சுருட்டுப்புழு மேலாண்மை மற்றும் நெல் வயலில் குலைநோய் தாக்குதல் பற்றி எடுத்துக்கூறினார். நிலக்கடலை சாகுபடியில் ஆரம்ப கால வேர் அழுகல் நோய் ஏற்படுவதைத் தடுக்க மணிலா விதைகளை விதை நேர்த்தி செய்ய வேண்டும் என்றும், அதற்கு 1 கிலோ மணிலா விதைக்கு 10 கிராம் டிரைக்கோடெர்மோ விரிடி எதிர் உயிர் பயன்படுத்த வேண்டும் என்றும் எடுத்துரைத்தார். வேளாண் பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்துவதற்கான பன்றி விரட்டி மருந்து விரிஞ்சிபுரம், ஆராய்ச்சி நிலையம் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது குறித்தும், அதன் பயன்பாடு குறித்தும் விளக்கினார்.

மேலும் வேளாண் விற்பனை மற்றும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களின் மூலம் வேளாண்மை உட்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ் கடன் வசதி குறித்து விவசாயிகளுக்கு எடுத்துக் கூறப்பட்டது. கடலூர் வட்டாரம் குணமங்கலம் கிராமத்தை சேர்ந்த ராகவேந்திரன், அங்கக வேளாண்மை குறித்து சக விவசாயிகளிடம் எடுத்துரைத்தார். நிகழ்ச்சியில் அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு காட்டுப்பன்றி விரட்டி தொகுப்பு வழங்கப்பட்டது. அதேபோல நெல் ஜெயராமன் பரம்பரிய நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்க திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் ரக விதைகள் வழங்கப்பட்டது. பட்டு வளர்ச்சித் துறை மூலம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது நிகழ்ச்சியின் ஹைலைட்டாக இருந்தது. விவசாயிகள் இக்கூட்டத்தில் தெரிவித்த கோரிக்கைகளை ஆராய்ந்து தீர்வு காணப்படும் எனவும், விவசாயிகள் வாய்க்கால் தூர்வாருதல் மற்றும் தடுப்பணை அமைப்பது தொடர்பாக தெரிவித்த கோரிக்கைகளுக்கு உரிய துறை அலுவலர்கள் மூலம் ஆய்வு மேற்கொண்டு நிதி ஆதாரத்தின் அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் உறுதி அளிக்கப்பட்டது.

 

Related posts

உத்திரபிரதேச மாநிலம் மதுரா அருகே நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை