கேட்ட தொகுதியை தரணும்னு ஒத்தக்கால்ல நிக்கும் மாம்பழ கட்சியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘சைலன்ட்டான வைத்தியானவர் மீது அதிருப்தியில் இருக்காங்களாமே ஆதரவாளருங்க..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘இலைக்கட்சியில் சேலம்காரர், தேனிக்காரருக்கு இடையே ஏற்பட்ட பனிப்போரால் தேனிக்காரர் தனது ஆதரவாளர்களுடன் தனி அணியாக செயல்பட்டு வருகிறார். டெல்டா மாவட்டத்தில் மலைக்கோட்டை, நெற்களஞ்சிய மாவட்ட மாஜி அமைச்சர்கள் தேனிக்காரர் அணியில் தற்போது இருக்காங்க.. இதில் நெற்களஞ்சிய மாவட்ட மாஜி அமைச்சர் ‘வைத்தியானவர்’ ஆரம்பத்தில் சுறுசுறுப்பா செயல்பட்டாரு..

சேலம்காரர் கட்டுப்பாட்டுக்குள் கட்சி முழுமையா வந்ததால வைத்தியானவர் சைலன்டாக இருந்து வந்தார். மலைக்கோட்டைக்கு பிரதமர் வந்த போது, தேனிக்காரரை இரண்டு முறை பிரதமர் நேரில் சந்தித்து பேசினார். இதனால உடன் சென்றிருந்த வைத்தியானவர் ரொம்பவே உற்சாகத்தில் இருந்தார். டெல்டா மாவட்டத்தில் மீண்டும் செல்வாக்குடன் இருக்கலாம்னு அவரது ஆதரவாளர்களிடம் தெரிவிச்சிருந்தாராம்.. இதனால் அவரது ஆதவரவாளர்களும் உற்சாகத்தில் இருந்தாங்க..

ஆனா, 2வது முறையாக மலைக்கோட்டை வந்த பிரதமர், விமான நிலையத்தில் தேனிக்காரரை சந்திக்காமல் சென்று விட்டார். இதனால் தேனிக்காரருடன் சென்றிருந்த வைத்தியானவரும் ஏமாற்றத்துடன் திரும்பிட்டாரு.. அன்றில் இருந்தே சைலன்ட்டாக இருந்து வரும் வைத்தியானவர் தனது ஆதரவாளர்களிடம் கூட பேசுவதை தவிர்த்து விட்டாராம்.. இதன் காரணமாக, அவரது ஆதரவாளர்களும் வைத்தியானவர் மீது அதிருப்தியில இருந்து வருகிறார்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘இலைக்கட்சி கூட்டணியில கேட்ட தொகுதியை எங்களுக்கு தரணும்னு ஒத்தக்கால்ல நிக்குதாமே மாம்பழக்கட்சி’’‘‘பார்லிமென்ட் எலக்சனில் இலை கட்சியோடு முரசும், மாம்பழமும் கூட்டணி போடுவது ஏறக்குறைய உறுதியாகி விட்டதாம்.. இதில் முரசு கட்சி முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தி முடிச்சிருக்காம்.. ஆனால் மாம்பழத்துடன் பேச்சு நடந்ததாக இதுவரை அதிகாரப்பூர்வ மெசேஜ் எதுவும் வரல.. இது ஒருபுறமிருக்க, முரசு கட்சியை விட நாங்க கெத்தானவங்க..

எப்போதும் லைவில் இருக்கிறவங்க என்பதை காட்டுவதற்கான ஒர்க்கை மாம்பழ கட்சி கையில் எடுத்திருக்காம்.. இதில் மிகவும் முக்கியமாக, அந்த கட்சியின் எம்எல்ஏக்கள், திடீர் போராட்டங்களில் ஈடுபட்டு பரபரப்பை கிளப்ப முடிவு செஞ்சிருக்காங்களாம்.. கவர்மென்ட் ஆபீஸ்களில் தர்ணா போராட்டம் நடத்தி, அது சரியில்லை, இது சரியில்லை என்று சர்ச்சையை கிளப்பவேண்டும் என்பதே அவர்களின் எய்மாக இருக்காம்.. அதியமான்கோட்டை மாவட்ட ஊரின் எம்எல்ஏ, இதற்கான பிள்ளையார் சுழியை போட்டிருக்காராம்..

அடுத்து வரும் நாட்களில், மாங்கனி மாவட்டத்தில் உள்ள ரெண்டு எம்எல்ஏக்களும் இதை பாலோ பண்ணப்போறாங்களாம். இதுக்கு இன்னொரு காரணமும் இருக்காம்.. மாம்பழ கட்சி கேட்கும் சில தொகுதிகளை முரசும் கேட்குதாம்.. அதை ஒரு பொருட்டா எடுத்துக்காம எங்களுக்கே கேட்ட தொகுதியை தரவேண்டும்னு ஒத்தக்காலில் நிக்குதாம் மாம்பழம்.. நாங்க கவர்மென்டை எதிர்க்கிறோம் என்பதையும் சேலத்துக்காரருக்கு சூசகமாக உணர்த்துவதற்கே இந்த லைவ் மூவ்மென்ட்ன்னு பேசிக்கிறாங்க மாம்பழக்கட்சி நிர்வாகிகளே..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘நிர்வாகிகள், தொண்டர்களை சந்திக்க கூட ரகசிய அறிக்கை தயாராகிறதாமே..’’ ‘‘நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. டெல்டாவில் இலைக்கட்சியில் உள்ள நிர்வாகிகளை இலை கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கண்டுகொள்ளாமல் இருந்தார்களாம்.. தற்போது, தேர்தல் நெருங்கி வருவதால இலைக் கட்சியின் தொண்டர்கள், நிர்வாகிகளை நேரடியாக சந்திக்க முக்கிய நிர்வாகிகள் முடிவு செய்துள்ளார்களாம்.. இதற்காக, தனியாக டீம் வேற அமைக்கப்பட்டுள்ளதாம்.

அந்த டீம் எந்தெந்த பகுதியில் உள்ள தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை சந்திக்க வேண்டும்னு ரகசிய பணியில் ஈடுபட்டு வருகிறதாம்.. பணி முடிந்த பிறகு, அந்த டீம் அளிக்கும் அறிக்கையின்படி, இலைக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அவர்களை தேடி சென்று சந்திக்க முடிவு செய்துள்ளார்களாம்.. கண்டுகொள்ளாமல் இருந்து விட்டு, தற்போது திடீரென தங்களை சந்திக்க வருகிறார்களே என்று இலைக்கட்சியின் தொண்டர்களும், நிர்வாகிகளும் சுதாரித்துக்கொண்டார்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘புலிக்கு விரிச்ச வலையில எலி சிக்கிய கதை தெரியுமா..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கிரிவலம் மாவட்டத்துல சேத்துல தொடங்கி பட்டுனு முடியுற வட்டாரத்துல வருவாய்த்துறையில ஏகப்பட்ட தில்லுமுல்லு நடக்குதாம்.. அங்க 3 வருவாய் அதிகாரிங்க இருக்காங்களாம்.. அவங்க பட்டா, சிட்டால திருத்தம் செய்றது, பெயரை மாத்துறதுன்னு எல்லாத்துக்கும் ஒரு ரேட் பிக்ஸ் செஞ்சி, சம்திங் வாங்குறாங்களாம்.. அதுமட்டுமில்லாம சான்று வாங்குறதுக்கும் சம்திங் இல்லாம எதுவும் நடகுறதில்லையாம்..

இப்படியே அந்த 3 அதிகாரிகளும் பல சி சேர்த்திருக்குறதாக பேச்சு அடிபடுது. இந்த விஷயம் விஜிலென்ஸ்சுக்கும் போயிருக்குது. ஆனா, புலிக்கு விரிச்ச வலையில, எலிதான் சிக்குதாம். இதனால பட்டுன்னு முடியுற வட்டாரத்துல, புரம், பாடி, குணம் என்று முடியுற பிர்காவுல புதுசா அமைச்சிருக்குற பிளாட்டுகளை ஆய்வு செஞ்சி நடவடிக்கை எடுக்கணும். கனிம சுரண்டலை தடுக்கணும், தடுக்க தவறியவங்க மேல நடவடிக்கை எடுக்கணும்னு கோரிக்கை நீண்டுக்கிட்டே போகுதாம்…’’ என்றார் விக்கியானந்தா.

Related posts

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்