காரைக்காலில் மாங்கனி திருவிழா கோலாகலம்; சுவாமி மீது மாங்கனிகளை இறைத்து பக்தர்கள் வழிபாடு

காரைக்கால்: காரைக்காலில் மாங்கனி திருவிழா இன்று கோலாகலமாக நடந்தது. பக்தர்கள் சுவாமி மீது மாங்கனிகளை இறைத்து வழிபாடு நடத்தினர். அறுபத்துமூன்று நாயன்மார்களில் சிறப்பிடம் பெற்றவரும், சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்டவருமான புனிதவதியார் என்னும் காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் ஆண்டுதோறும் மாங்கனி திருவிழா நடைபெறும். காரைக்காலில் உள்ள காரைக்கால் அம்மையார் கோயிலில் புராண மரபின்படி ஆனி மாதம் பவுர்ணமி தினத்தில் இந்த விழா நடைபெறும். மாங்கனி திருவிழாவில் மாப்பிள்ளை அழைப்பு, அம்மையார் திருக்கல்யாணம், சிவனடியார் வேடத்தில் சிவபெருமான் வருகை, சிவபெருமானுக்கு அமுது படையல், கணவர் பிரிந்து செல்லுதல், அம்மையார் சிவபெருமானிடம் ஐக்கியமாகும் உற்சவங்கள் அடுத்தடுத்து நடைபெறும்.

அதன்படி இந்தாண்டு மாங்கனி திருவிழா பந்தல்கால் முகூர்த்ததுடன் கடந்த மாதம் துவங்கியது. இந்தநிலையில் ஆற்றங்கரை சித்தி விநாயகர் கோயிலில் இருந்து பரமதத்த செட்டியாரை அம்மையார் கோயிலுக்கு ஊர்வலமாக அழைத்து வரும் மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியுடன் மாங்கனி திருவிழா நேற்று முன்தினம் துவங்கியது. கைலாசநாதர் கோயிலில் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை முடிந்து திருக்கல்யாண வைபவத்திற்காக பரமதத்தர், ஆற்றங்கரை சித்தி விநாயகர் கோயிலில் இருந்து மாப்பிள்ளை கோலத்தில் ஊர்வலமாக வந்து அம்மையார் மண்டபத்தில் எழுந்தருளினார்.

நேற்று காலை காரைக்கால் அம்மையார் மணிமண்டபத்தில் மணமகன் பரமதத்தர் பட்டாடை‌, நவமணி மகுடம், ஆபரணங்கள் அணிந்து குதிரை வாகனத்தில் மாப்பிள்ளை கோலத்தில் மணமேடைக்கு அழைத்து வரப்பட்டார். சந்திர புஷ்கரணியில் நீராடி பட்டாடை உடுத்தி திருமண கோலத்தில் புனிதவதியார் எழுந்தருளினார். இதைதொடர்ந்து புனிதவதி அம்மையார்- பரமதத்தர் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நேற்று மாலை கைலாசநாதர் கோயிலில் பிச்சாண்டவர் வெள்ளை சாற்றுடன் சிவதாண்டவம், பரமதத்தர், புனிதவதியார் முத்து சிவிகையில் வீதியுலா நடந்தது. முக்கிய நிகழ்வான மாங்கனி திருவிழா இன்று காலை துவங்கியது. பவளக்கால் சப்பரத்தில் சிவபெருமான் காவியுடை, ருத்ராட்சம் தாங்கி பிச்சாண்டவர் மூர்த்தியாக எழுந்தருளினார். இதையடுத்து பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்து சென்றனர்.

தெருக்களில் தேர் சென்ற போது, வீட்டு மாடிகளில் இருந்து மாங்கனிகளை சுவாமி மீது இறைத்து வழிபாடு நடத்தினர். இந்த மாங்கனிகளை சாப்பிட்டால் குழந்தை வரம் கிடைக்கும், திருமண தடை நீங்கும் என்ற நம்பிக்கையால் தேரோட்டத்தில் பங்கேற்ற பக்தர்கள் போட்டி போட்டு எடுத்து சென்றனர். மாதா கோயில் வீதி, லெமர் வீதி, பாரதியார் வீதி, கென்னடியார் வீதி வழியாக சுவாமி வலம் வந்து இன்று மாலை கோயில் வளாகத்தில் நிலையை அடைகிறது. இன்று மாலை 6 மணிக்கு அம்மையார் பிச்சாண்டவரை எதிர்கொண்டு அழைத்து மாங்கனியுடன் அமுது படைத்தல், இரவு 11 மணிக்கு பாண்டிய நாடாகிய சித்தி விநாயகர் கோயிலில் பரமதத்தருக்கு 3வது திருமணம் நடக்கிறது. நாளை அதிகாலை 5 மணிக்கு இறைவன் அம்மையாருக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. ஜூலை 21ம் தேதி விடையாற்றி உற்சவம் நடக்கிறது.

 

Related posts

எவ்வளவு வேண்டுமோ நீக்குங்கள்.. உண்மையை உங்களால் மாற்ற முடியாது: ராகுல் காந்தி பதிலடி

நிலக்கரி விற்பனை ஊழல்: அதானி மீது விசாரணையை தொடங்கியது லஞ்ச ஒழிப்புத்துறை

கூடலூர் அருகே காட்டு யானைகள் நடமாட்டம்..!!