மாங்கனி தொகுதிக்கு முப்பது ‘சி’ செலவு செய்யும் கான்ட்ராக்டரை தேர்வு செய்த சேலத்துக்காரர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘லஞ்ச ஒழிப்பு போலீசாருங்க எப்ப வரப்போறங்களோன்னு தினம் தினம் பயத்துலயே சீட்ல உட்காராம வேலை பார்க்கிறாராமே ஆர்டிஓ ஒருத்தர்..’’ என கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா.
‘‘கோவை பீளமேட்டில் செயல்படும் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் முருகன் பெயர் கொண்ட ஆர்.டி.ஓ பணியாற்றி வர்றாராம்.. இவரு லஞ்ச ஒழிப்பு போலீசாருங்க எப்போ ரெய்டுக்கு வருவாங்களோன்னு தினம் தினம் பயந்துபோய் வேலை பார்த்துக்கிட்டு இருக்காராம்.. இதனால அவர் தனது இருக்கையிலேயே உட்காராமல் அலுவலக கேட்டில் வாட்ச்மேன் மாதிரி நின்று வரும் பொதுமக்களையும் உள்ளே விடாமல் மிரட்டி வருகிறாராம்.. பொதுமக்கள் லைசென்ஸ் ஆன்லைனில் பதிவு பண்ண வந்து இருக்கோம் சார்னு சொன்னால்கூட, வெளியில கடை இருக்கு, அங்க போய் பண்ணுங்கன்னு கடிந்துவிடுகிறாராம்.. இதனால, ஆர்டிஓ அலுவலகத்திற்கு போகவே பொதுமக்கள் ரொம்ப தயங்குறாங்களாம்.. இது ஒரு பக்கம் இருக்க, சென்ட்ரல் ஆர்டிஓ அலுவலகத்தில் பணியாற்றி வரும் இரண்டு இன்ஸ்பெக்டர்களும் சீக்கிரம் வட்டார போக்குவரத்து துறை தனியாருக்கு போய்விடும். நாங்க, ரூ.40 லட்சம் வரை செலவு செஞ்சு வந்து இருக்கோம். அந்த தொகையை எப்ப திருப்பி எடுப்போம் என சபதம் எடுத்துக்கொண்டு எப்.சி-க்கு வரும் வாகனங்களை பல்வேறு காரணம் காட்டி திருப்பி விட்டு, அவங்க கிட்ட பணம் கறந்த பிறகு எப்.சி போடறாங்களாம்.. இது இல்லாம லைசென்ஸ் போட ஏஜென்சி இல்லாமல் தனியாக வருபவர்கள் சரியாக வாகனத்தை ஓட்டினாலும் நீங்க சரியா ஓட்டல. போயிட்டு நாளைக்கு வாங்க. இல்லனா, ஏஜென்சி மூலமா வாங்கனு அனுப்பி விடராங்களாம்.. இந்த 2 இன்ஸ்பெக்டர்களுக்கும் இடையே யார் அதிகமா சம்பாதிக்கிறது அப்படிங்கிறதுலதான் கடும் போட்டியே போயிட்டு இருக்காம்” என்றார் விக்கியானந்தா.
‘‘குமரி நாடாளுமன்ற தொகுதி எனக்குத்தான் என மாநகராட்சி கவுன்சிலர் கூறிவருவது கட்சி தொண்டர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி இருக்காமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘கடைகோடி மாவட்டமான குமரியில் முன்பெல்லாம் பொன்னானவர் சுட்டிக் காட்டுபவர்கள்தான் கவுன்சிலர் முதல் எம்.எல்.ஏ., வரை வேட்பாளர்கள். நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரை அவர்தான் அதிகாரப்பூர்வ வேட்பாளர். ஆனா, இந்த முறை குமரியை குறிவைத்து பலரும் முட்டி மோதி வருகிறாங்களாம்.. மாநகராட்சி கவுன்சிலரா இருப்பவரோ நான்தான் வேட்பாளர், மாநில தலைவரே கூறிவிட்டார்னு பகிரங்கமாவே சொல்லிக்கிட்டு வருகிறாராம்.. இதனால, பொன்னானவரின் ஆதரவாளர்கள் அவர் மீது கடுப்பாகி இருக்காங்களாம்.. அது இல்லாம மாநில தலைவர் பொன்னானவர் பெயரை குமரி தொகுதிக்கு குறித்துவிட்டதாக கூறி தேர்தல் பணியில் வேற ஈடுபட தொடங்கியிருக்காங்க. ஆனால், பொன்னானவர் முகநூல் பக்கத்தில மாநில தலைவர் படத்தை வைப்பதில்லை. அவருக்கு எதிராக மறைமுகமாக செயல்பட்டு வருகிறார். அப்படியிருக்க, அவருக்கு எப்படி அவர் பரிந்துரை செய்வார்னு எதிர் கோஷ்டியினர் கூறி வர்றாங்களாம். தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கட்சிக்குள் பல கோஷ்டிகள் முளைத்திருப்பது, தாமரை கட்சி தொண்டர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்திக்கிட்டு இருக்காம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘சேலத்துக்காரர் நடவடிக்கையால அங்குள்ள இலைக்கட்சி நிர்வாகிகள் நிம்மதி பெருமூச்சு விடுறாங்களாமே அது என்னவாம்?” என்றார் பீட்டர் மாமா.
‘‘இலைக்கட்சியின் சேலத்து தலைவரை டெல்லிக்கு வரவழைத்து தனது அருகில் நிறுத்தினாராம் தாமரைக் கட்சியின் உச்சத்தலைவர். இதை சொல்லி சொல்லியே இலைக்கட்சி தொண்டர்கள் ரொம்பவுமே மகிழ்ச்சியடைஞ்சாங்க.. இது கர்நாடக மாஜி போலீஸ் அதிகாரிக்கு பிடிக்கல. என்னை விட இலைக்கட்சி தலைவர் பெரியவரா? என்ற கோபத்துல அவரை ஒரு பொருட்டாகவே மதிக்காம சீண்டிக்கிட்டே இருந்தாரு.. இதனால கோபத்தின் உச்சிக்கே சென்ற சேலத்து தலைவரு, கூட்டணிய உடைச்சிக்கிட்டு வெளியே வந்துட்டாரு. அதோடு, வரும் நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடும் வகையில் ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியிருக்காராம்.. கூட்டணியும் சரியா அமையாத நேரத்துல ஆளை விட்டால் போதும்னு, தங்கள் கட்சி ஆட்சியின்போது சம்பாதித்த நிர்வாகிங்களே சீட் வேண்டாம்னு ஓட்டம் பிடிச்சிக்கிட்டு இருக்காங்களாம்.. ஆனாலும் மனம் தளராத சேலத்துக்காரர், பெரும் செல்வந்தரை நிறுத்தி கணிசமான ஓட்டுகளை எப்படியாச்சும் பெற்றே ஆக வேண்டும் என்ற நிலைக்கு வந்திருக்காராம்.. இதற்காக வசதி படைத்த அப்பாவி பணக்காரர்களிடம் ஆசைவார்த்தை கூறி வேட்பாளரா தேர்வு செஞ்சி வச்சிருக்காராம்.. தனது சொந்த மாங்கனி தொகுதி வேட்பாளரை முடிவு செஞ்சி அவருக்கு மம்மி பேரவையின் மாநில துணை செயலாளர் பொறுப்பு வேற கொடுத்து வச்சிருக்காராம்.. கான்ட்ராக்டரான அவரு சுமாரா முப்பது ‘சி’ வரை செலவு செய்யும் தகுதி படைச்சவராம்.. இதை தெரிஞ்சிக்கிட்ட மாங்கனி இலைக்கட்சி நிர்வாகிங்க நாம தப்பிச்சோமடா சாமி என்று நிம்மதி பெருமூச்சு விடுறாங்களாம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.

Related posts

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்